தமிழக காங்கிரஸ் தலைவர் திடீரென மாற்றப்பட்டது ஏன்?
தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு புதிய தலைவராக முன்னாள் மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார்.. இது தவிர, செயல் தலைவர்களாக எச்.வசந்தகுமார், கே.ஜெயகுமார், எம்.கே.விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து புதிய தலைவராக முன்னாள் மத்திய இணை அமைச்சர் திருநாவுக்கரசர் 2016 செப்டம்பர் 14-ம் தேதி நியமிக்கப்பட்டார். மாநிலத் தலைவர் பதவிக்கு திருநாவுக்கரசர் பெயர் பேசப்பட்ட போதே அதற்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இளங்கோவன் ஆதரவு மாவட்டத் தலைவர்கள் 39 பேர் டெல்லிக்குச் சென்று, பாஜகவில் இருந்து வந்தவருக்கு மாநிலத் தலைவர் பதவி வழங்கக் கூடாது என மனு அளித்தனர். ஆனாலும், திருநாவுக்கரசர் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தொடக்கத்தில் இளங்கோவன்தவிர மற்றவர்கள் திருநாவுக்கரசரோடு இணக்கமாகவே இருந்தனர். ஆனால், ஒருகட்டத்தில் ப.சிதம்பரம், எம்.கிருஷ்ணசாமி, கே.வீ.தங்கபாலு, குஷ்பு எனமுக்கிய நிர்வாகிகளை ஆலோசிக்காமல் திருநாவுக்கரசர் தன்னிச்சையாக செயல்படுவதாக புகார் எழுந்தது. இதனால், மாநிலத் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வருவதையே முக்கியத் தலைவர்கள் தவிர்த்தனர்.
இதுபற்றி ஒரு செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டபோது, ”கட்சி அலுவலகத்துக்கும், கட்சி நிகழ்ச்சிகளுக்கும் யாரையும் அழைக்க வேண்டியதில்லை. கட்சி மீது அக்கறை இருந்தால் அவர்களாகவே வர வேண்டும்” என திருநாவுக்கரசர் பதிலளித்தார். இது ப.சிதம்பரம், இளங்கோவன் உள்ளிட்டோரை கோபப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
ராகுல் காந்தியிடம் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி தனது ஆதரவாளர்களை அதிக அளவில் மாவட்டத் தலைவராக திருநாவுக்கரசர் நியமித்துக் கொண்டார். இதுவும் அவருக்கு மற்றவர்களிடம் எதிர்ப்பை பெற்றுத் தந்தது. திருநாவுக்கரசருக்கு எதிராகப் பேசிய இளங்கோவன் ஆதரவாளர்கள் சிலர் கட்சியிருந்து நீக்கப்பட்டனர். காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளரான குஷ்பு, திருநாவுக்கரசர் நீக்கப்படுவார் என தொடர்ந்து பேசி வந்தார்.
இப்படி காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பை சம்பாதித்த திருநாவுக்கரசருக்கு கூட்டணி கட்சியான திமுகவிடம் இருந்தும் எதிர்ப்பு வர ஆரம்பித்தது. ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரைப் பார்க்க ராகுல் காந்தி வந்தார். அவரை திருநாவுக்கரசர்தான் அழைத்து வந்தார் என செய்திகள் வெளியாக திமுக தரப்பு கோபமடைந்தது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்ட நிலையில், டிடிவி தினகரனுக்கு சாதகமாக திருநாவுக்கரசர் செயல்படுவதாகவும், திமுக அதிக தொகுதிகளைத் தரவில்லை என்றால் தினகரனோடு கூட்டணி வைக்கலாம் என்ற அளவுக்கு முயற்சிமேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த திமுக தலைமை, குலாம்நபி ஆசாத், அகமது படேல் போன்றவர்களிடம் தங்களது அதிருப்தியை தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனாலும், தலைவர் பதவியில் திருநாவுக்கரசர் தொடர்ந்து வந்தார்.
கடந்த ஜனவரி 21-ம் தேதி சென்னையில் நடந்த ‘சக்தி’ திட்டதொடக்க விழாவில் பேசிய திருநாவுக்கரசர், ‘‘தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார் என்றவதந்தியை யாரும் நம்ப வேண்டாம். மக்களவைத் தேர்தலின்போதும் நான்தான் தலைவராக இருப்பேன்’’ என அறிவித்தார். இந்த விழாவில் மூத்த தலைவர்கள் யாரையும் அவர் பேச விடாமல் தடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கோபமடைந்த எதிரணியினர், அடுத்த நாளே டெல்லி சென்று அகமது படேலிடம் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், திருநாவுக்கரசர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். தேர்தல் அறிவிப்புக்கு ஒருமாதம்கூட இல்லாத நிலையில்மாநிலத் தலைவர் மாற்றப்பட்டிருப்பதும், 4 செயல் தலைவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதும் அக்கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய தலைவரான கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரத்தின் ஆதரவாளராவார். எம்எல்ஏ,எம்.பி.யாக பதவி வகித்துள்ளார். எம்எல்ஏவாக இருந்தபோது கருணாநிதி, ஸ்டாலினோடு நெருக்கமாக இருந்தவர். எனவே, அவர் திமுகவோடு இணக்கமாகச் செல்வார் என சொல்லப்படுகிறது.
ஆனால், 4 செயல் தலைவர் நியமிக்கப்பட்டிருப்பதால் அவர் முழு அதிகாரத்தோடு செயல்பட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கோஷ்டிப் பூசலுக்கு பெயர் பெற்ற தமிழக காங்கிரஸில் ஒரு தலைவர், 4 செயல் தலைவர்கள் நியமனம் மேலும் சிக்கலை உருவாக்கும் என்கின்றனர். இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதைப் பொறுத்தே கே.எஸ்.அழகிரியின் எதிர்காலம் அமையும்.
தேர்தல் நெருங்கும் நிலையில் பதவி பறிக்கப்பட்டிருப்பதால் கடும் அதிருப்தி அடைந்துள்ள திருநாவுக்கரசர், ராகுல் காந்தியை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கே.எஸ்.அழகிரி நியமனத்தால், நீண்டவெளிக்குப் பிறகு தமிழக காங்கிரஸில் ப.சிதம்பரத்தின் கை ஓங்கியுள்ளது. இதனால், அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.