சிம்பு, அனிருத் மீது கோவை நீதிமன்றத்தில் புதிய மனு!
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பாடல் பாடியதாக பீப் நடிகர் சிம்பு மற்றும் பீப் இசையமைப்பாளர் அனிருத் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, கோவை நீதிமன்றத்தில் ஒரு புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சிம்பு, அனிருத் ஆகியோர் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ‘பீப்’ என்ற ஒலியுடன் கூடிய பாடலை இணையதளத்தில் வெளியிட்டதாகக் கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் இது தொடர்பாக ஏற்கெனவே அவர்கள் மீது புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கோவை மணியகாரன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவரும், கொங்கு நாடு அருந்ததியர் முன்னேற்றப் பேரவை என்ற அமைப்பின் பொதுச்செயலாளருமான இளங்கோவன் என்பவர் கோவை இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிம்பு மற்றும் அனிருத் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 200-ன் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த புகார் மனுவில், ‘சுய விளம்பரத்துக்காக பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் பாடல் பாடிய நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 292 மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவு 67-ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ராதிகா அளித்த புகாரின் பேரில், சிம்பு மற்றும் அனிருத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு 2 முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.