நியூட்ரினோ திட்டம் அனுமதி ரத்து: பூவுலகின் நண்பர்களுக்கு வெற்றி!
தேனி மாவட்டம் பொட்டிபுரம் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதியளித்தது. சுமார் ரூ.1,500 கோடி செல்வில் 1,300 மீட்டர் ஆழத்தில் குகை அமைக்கப்பட்டு அதில் ஆய்வகங்கள் அமைப்பது தான் இத்திட்டம் ஆகும்.
இத்திட்டம் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது என எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்யக் கோரியும் ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பினர் சார்பில் கடந்த 2015ஆம் ஆண்டு தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய தடையில்லா சான்றிதழை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மீதான விசாரணையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து நியூட்ரினோ திட்டம் குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட குழுவை மாசுக் காட்டுப்பாட்டு வாரியம் நியமித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு, நேற்று (மார்ச் 20) விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய சுற்றுச்சூல் துறை வழங்கிய அனுமதியை ரத்து செய்து தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் அதிரடியாக உத்தரவு பிறபித்தது.
இது குறித்து ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைச் சேர்ந்த SUNDAR RAJAN பதிவு:-
நியூட்ரினோ திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய கோரி பூவுலகின் நண்பர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எங்களது வாதத்தை ஏற்றுக்கொண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று அனுமதியை ரத்து செய்துள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கிறோம்.
நாங்கள் வைத்த முக்கியமான வாதங்கள்:
- இந்த திட்டத்திற்கான அனுமதியை ஒரு சாதாரண கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி போல வாங்கப்பட்டுள்ளது. அதாவது எந்த சுற்றுச்சூழல் தாக்கீது அறிக்கையும், மக்கள் கருத்துக் கேட்கவும் தேவையில்லை என்கிற நிலைப்பாட்டை அவர்கள் எடுத்து வைத்தார்கள். அப்போது எங்கள் வழக்கறிஞர் தரப்பு எப்படி இது ஒரு தவறான வாதம் என்பதையும் எந்த பிரிவின் கீழ் அனுமதி வாங்கியிருக்க வேண்டும் என்பதையும் எடுத்துக் காட்டியபோது தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டது.
- நியூட்ரினோ திட்டத்திற்கான “சூழல் தாக்கீது அறிக்கையை தயார் செய்தது சலீம் அலி நிறுவனம். இந்த நிறுவனம் இது போன்ற ஆய்வுகளை தயார் செய்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் அல்ல என்பதை நாங்கள் நிரூபித்தத்தை தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டது.
- பல லட்சக்கணக்கான கிலோ வெடி மருந்துகளை பயன்படுத்தி, பல லட்சக்கணக்கான டன் பாறைகளை உடைக்கும்போது சூழலில் ஏற்படும் விளைவுகளை சூழல் ஆய்வு செய்த நிறுவனம் செய்யவில்லை என்பதை தீர்ப்பாயம் ஏற்றுக்கொண்டது.
- இந்த திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் நியூட்ரினோ கற்றைகளை வைத்து ஆய்வு செய்யும்போது, கதிர்வீச்சு அபாயங்கள் ஏற்படும் என்றும் அதற்குரிய ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை என்றும் நிரூபித்தோம். அதற்கு பதில் அளித்த இந்திய கணிதவியல் நிறுவனம் அந்த மாதிரியான திட்டத்தை கைவிட்டுவிட்டதாக சொன்னது, அதற்கு பதில் சொன்ன நீதிபதிகள் “ஆனால் உங்கள் திட்ட அறிக்கையில் அப்படி இருக்கிறதே” என்று சொல்ல, அவர்களிடம் பதிலேதும் இல்லை.
- நீர்நிலைகள், நீர் அடுக்குகள் (aquifiers) பாதிக்கப்படாது என்பதற்கும் எந்தவித ஆய்வுகளும் இல்லை என்பதையும் தெளிவாக எடுத்து வைத்தோம்.
- கடைசியாக, எப்படி இந்த திட்டத்தில் பல விசயங்களை மூடி மறைத்துள்ளார்கள் என்பதையும் எடுத்து வைத்தோம். மதிகெட்டான் சோலை என்கிற தேசிய பூங்காவின் எல்லையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் இந்த திட்டம் அமைய இருப்பதால் தேசிய வனவிலங்கு வாரியத்திடம் அனுமதி வாங்கியிருக்க வேண்டும், ஆனால் அவர்கள் அப்படி அனுமதியே வாங்க தேவையில்லை என்று சொன்னதை தீர்ப்பாயம் ஏற்றுக்கொள்ளவில்லை.
எங்களுடைய எல்லா வாதங்களையும் ஏற்றுக்கொண்டாலும், இவற்றில் இரண்டு காரணங்களே போதுமானது இந்த அனுமதியை ரத்து செய்வதற்கு என்று கூறி, நியூட்ரினோ திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை தீர்ப்பாயம் ரத்து செய்தது. இந்த வழக்கை தொடுத்தது முதல் தொடர்ந்து கண்காணித்து எங்கள் வழக்கறிஞர் குழு நடத்திவந்து இன்று இறுதியில் வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளது.
இந்த இடைப்பட்ட காலத்தில் எவ்வளவோ அவமானங்களையும் வசவுகளையும் சுமக்க வேண்டியிருந்தது. எதற்கும் கலங்காமல் தொடர்ந்து பயணம் செய்ததின் விளைவு ஒரு சின்ன வெற்றியை பெற்றுள்ளோம். உண்மையில் அணுசக்தி துறையின் திட்டங்களை எதிர்த்து வெற்றி பெறுவது அவ்வளவு சுலபமானது இல்லை.
இந்த தருணத்தில் எங்களின் மூத்த வழக்கறிஞர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்களின் பணிக்கு எந்த வார்த்தைகளாலும் நன்றி சொல்லிவிட முடியாது. அவர் இல்லையெனில் நாங்கள் இல்லை என்று சொல்லலாம், தொடர்ந்து எங்களுடன் பல்வேறு பிரச்சனைகளில் உடன் நின்றவர், இன்று அந்த பகுதி மக்களுக்கான சிறு வெற்றியை பெற்று தந்துள்ளார். அவருடைய பணிகளுக்கு மனதார பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த வழ.வெற்றி செல்வன், மற்றும் வழ. சுந்தரராஜன், இந்த இருவரின் பணிகள் மிகவும் பாராட்டுதலுக்கு உரியவை, பல்வேறு சிரமங்களுக்கு இடையிலும் இந்த வழக்கை சிறப்பாக நடத்தி எங்கள் மூத்த வழக்கறிஞருக்கு துணை புரிந்தார்கள்.
பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த ஒவ்வொருவரும் இந்த வழக்கில் அவர்களுடைய பங்களிப்பை செய்துள்ளார்கள், ஹரிணி எடுத்துக் கொடுத்த மதிகெட்டான் சோலை கூகிள் வரைபடம் தான் இன்றைக்கு இறுதியான முடிவை எட்டவைத்தது, விஜய் அசோகன், எந்த நாட்டில் இருந்தாலும் நியூட்ரினோ திட்டத்தை எத்தனை விஞ்ஞானிகள் ஆதரித்தாலும் அவர்களுக்கு இணையான எதிர்வாதம் வைத்து அவர்களை நிலைகொள்ள முடியாமல் செய்தார்.
இந்த தருணத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடி இந்த திட்டத்திற்கு இடைக்கால தடை வாங்கியும், மக்களிடையே இந்த திட்டம் தொடர்பான பிரச்சாரங்களை முன்னெடுத்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்களுக்கும், நியூட்ரினோ எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த திரு லெனின் ராஜப்பா, முல்லை பெரியார் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் திரு.அபாஸ், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.சுப. உதயகுமார், மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, முகிலன், விவசாய விடுதலை முன்னணியை சேர்ந்த திரு.மாறன், கலிலியோ அறிவியல் மையத்தை சேர்ந்த சத்யா, விடுதலை சிறுத்தைகள், திரு.வி.டி. பத்மநாபன், மனித நேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, SDPI, நாம் தமிழர், தமிழ்த்தேசிய பேரியக்கம், திராவிடர் விடுதலை கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், நாணல் நண்பர்கள், இந்த திட்டம் குறித்த பல்வேறு விசயங்களை மக்களுக்கு எடுத்து சொன்ன ஊடகங்கள், மற்றும் அந்த பகுதியில் இருக்கக்கூடிய அனைத்து கிராம மக்கள் அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் சொல்லிக்கொள்கிறோம்.
திரும்பவும் சொல்கிறோம், சட்டப்படி நடந்துக் கொள்ளுங்கள் என்று ஒரு அரசு அமைப்புக்குச் சொல்வதற்கே இந்த நாட்டில் சட்ட போராட்டம் நடத்த வேண்டியுள்ளது. இதை, சட்ட போராட்டமே இறுதி தீர்வு என்று நாங்கள் சொல்லவில்லை, ஜனநாயகம் இன்று நமக்கு வழங்கியுள்ள வழிமுறைகளை பயன்படுத்தி முன்னேறுவோம், நியாயத்தை தேடி மக்கள் மன்றங்களிலும் பல்வேறு அமைப்புகளுடன் நாம் சேர்ந்து பணியாற்றுவோம்.
இந்த நேரத்தில் நியூட்ரினோ திட்டத்தை ஆரம்பம் முதல் எதிர்த்த, மறைந்த மூத்த போராளி தன்ராஜ் அய்யா அவர்களை நினைவில் கொள்வோம்.
SUNDAR RAJAN