நீட்: “உச்ச நீதிமன்ற தீர்ப்பை தலை வணங்கி ஏற்கிறோம்!” – தம்பிதுரை
நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம் என்று அதிமுக எம்.பி.யும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை கூறியுள்ளார்.
நீட் தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும். செப்டம்பர் 4-ம் தேதிக்குள் மருத்துவக் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் தம்பிதுரை கூறியதாவது:
”நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஓராண்டு விலக்களிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்தோம். முதல்வர் பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தொடர்ந்து முயற்சி செய்தனர். அதற்காகவே பல நாட்கள் அமைச்சர்கள், அதிகாரிகள் டெல்லியில் தங்கியிருந்தனர். பிரதமர் மோடி கூட தமிழகத்துக்கு விலக்களிக்க முயற்சி செய்தார். எனினும் முடியவில்லை. தமிழக அரசு சார்பில் நீட் குறித்து அவசர சட்ட மசோதாதான் கொண்டுவர முடியும். வேறு என்ன செய்ய முடியும்?
நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம். சட்டப்படி ஏற்பது தமிழக அரசின் கடமை. நீட் விவகாரத்தில் அதிமுக மீது பழி சுமத்துவது ஏற்புடையதல்ல. காங்கிரஸ் – திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டதுதான் நீட் தேர்வு. காங்கிரஸ் குடும்பத்தைச் சார்ந்தவர்தான் நீட் தேர்வுக்கு ஆதரவாக வழக்கு தொடர்ந்தார். நீட் தேர்வால் தமிழகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு அதிமுக காரணமல்ல, முந்தைய அரசுகளே காரணம்.
காவிரி பிரச்சினைக்கும் திமுகதான் காரணம். காவிரி உரிமையில் தமிழகத்துக்கு திமுக துரோகம் செய்துவிட்டது. அனைத்துத் தவறுகளையும் செய்துவிட்டு திமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
நீட் தேர்வு விவகாரத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசை மீண்டும் வலியுறுத்துவோம். தமிழக மாணவர்களின் நலனுக்காக தமிழக அரசு தொடர்ந்து முயற்சி செய்யும்” என்று தம்பிதுரை கூறினார்.