நீட்: “தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் தர முடியாது!” – மோடி அரசு திடீர் பல்டி
நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரும் தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மோடி அரசு தெரிவித்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (நீட்) தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்திவந்தது. இதற்காக அவசரச் சட்டம் இயற்றியது. இந்நிலையில் தான் அண்மையில் சென்னை வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு கிடைக்காது. ஆனால், ஓராண்டு மட்டும் விலக்கு அளிக்க மாநில அரசு அவசரச் சட்டம் இயற்றி அனுப்பினால், மத்திய அரசு உதவி செய்யும்’ என தெரிவித்திருந்தார்.
அடுத்தகட்ட நடவடிக்கையாக நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு மட்டும் விலக்கு அளிக்கும் அவசரச் சட்ட முன்வரைவுக்கு 3 மத்திய அமைச்சகங்கள் ஒப்புதல் அளித்தன. நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசும் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், நீட் தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்று கோரி சிபிஎஸ்ஈ மாணவர்கள் சார்பில் நளினி சிதம்பரம் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் நீட் தேர்விலிருந்து ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்க முடியாது எனத் தெரிவித்தார்.
அனைத்து மாநிலங்களும் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை நடத்த ஒத்துழைத்துள்ள நிலையில் தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிப்பதால் மற்ற மாநிலங்களும் இதனை கேட்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, நீட் தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் உடனடியாக மருத்துவ கலந்தாய்வை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 4-ம் தேதிக்குள் மருத்துவ கலந்தாய்வை நடத்தி முடிக்கவும் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.