இயக்குனர் பா.இரஞ்சித்துடன் இணைந்து ‘நீலம்’ அமைப்பை உருவாக்கிய முத்தமிழ் கலைவிழியின் கதை!

‘நீலம்’ அமைப்பை இயக்குநர் பா.இரஞ்சித்துடன் இணைந்து உருவாக்கிய முத்தமிழ் கலைவிழியின் கதை இது. ஒரு தலித் பெண்ணாக அவர் இன்று அடைந்துள்ள உயரத்தின் பின்னால் உள்ள வலிகளும் அவர் கடந்து வந்த பாதையும் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய ஒன்று. எப்போதும் பின்னிழுக்கும் குடும்பத்தை மீறி அவர் எடுத்த முடிவுதான் இன்று அவரை இந்நிலையில் வைத்துள்ளது. ஒவ்வொரு பெண்ணும் வாசிக்க வேண்டிய கதை இவருடையது. தன் வாழ்க்கையை அவர் சொல்லச் சொல்ல, உணர்வெழுச்சியில் பொங்கும் கண்ணீரை மறைத்தபடியும் வியப்பில் ஆழ்ந்தபடியும் கேட்டுக்கொண்டிருந்தேன். வாசியுங்கள் நண்பர்களே!

                                                                     ###

முதல் நாள் சைக்கிளில் வந்து, மறுநாளே ஸ்கூட்டரில் பறந்து, அதற்கு அடுத்த நாளே காரில் வந்து பங்களாவின் போர்டிக்கோவில் இறங்கும் சினிமாத்தனமான காட்சி அல்ல அவர் வாழ்க்கை. வறிய சூழலில் பிறந்த தலித் பெண்ணான முத்தமிழ் கலைவிழியின் வாழ்க்கை அத்தனை வலிகள் நிறைந்தது. கடந்த ஆண்டு  ஐ.நா சபை ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. இந்தியாவில் தலித் பெண்கள் அரசியலில் நுழைய தடையாக உள்ள பிரச்னைகளையும், மீறி  அரசியலில் நுழையும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் குறித்து உரையாற்றினார் முத்தமிழ் கலைவிழி. இவர் சென்னையில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் நீலம் அமைப்பின் நிறுவனரும் கூட.

“அப்பாவுக்கு ரயில்வேயில் வெல்டர் பணி. அயனாவரம் தாகூர்நகர்தான் நான் வளர்ந்த இடம். மிகவும் வறுமையான நிலையில்தான் என் பால்யமும் இளமையும் கழிந்தன. ரயில்வேயில் உள்ள சாரணர் இயக்கத்தில் அப்பா என்னை சேர்த்துவிட்டார். மேலும் அப்பா திமுக வட்டச் செயலாளர் என்பதால் நான் கழக மேடைகளில் சிறு வயதிலே பேசத் துவங்கிவிட்டேன். நான் வகுப்பறையில் கற்றதைவிட சாரணர் இயக்கத்தில் கற்றதே அதிகம்.

சாரணர் இயக்கத்தில் என் செயல்பாட்டுக்காக 2005ம் ஆண்டுக்கான குடியரசுத் தலைவர் விருதினை அப்துல்கலாமிடம் பெற்றேன். கல்லூரி படிப்பைத் துவங்கியபோது சாரணர் இயக்க ஈடுபாடு எனக்குள் சமூக சேவை ஆர்வத்தை வளர்த்திருந்தது.  ‘மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க்’ கல்லூரியில் சேர்ந்தேன். அப்பா பணி ஓய்வு பெற்ற நிலையில் பெற்றோரின் வற்புறுத்தலால் ரயில்வே வேலைக்கு குரூப் டி தேர்வு எழுதியிருந்தேன். ஜனாதிபதியிடம் விருது பெற்றவள் என்ற அடிப்படையில் எனக்கு ரயில்வேயில் வேலை கிடைத்தது.

குடும்பத்தினரின் வற்புறுத்தலினால் கல்லூரிப் படிப்பை கைவிட வேண்டிய நிலை வந்தது. வேறு வழியின்றி ரயில்வே பணியில் சேர்ந்தேன். ரயில்வேயில் வேலை என்றவுடன் போய் சேர்ந்துவிட்டேன். ஆனால் அங்கு எனக்கு அளிக்கப்பட்ட வேலைகள் என்னை மனச்சோர்வுக்குள்ளாக்கின. கேன்டீனில் பாத்திரம் கழுவுதல், இடத்தைப் பெருக்கிச் சுத்தம் செய்தல், தோட்ட வேலை போன்றவை எனக்கு வழங்கப்பட்டது. ஒரு நாளைக்கு ஆயிரம் பாத்திரங்கள் கூட வரும். இருப்பதிலேயே சின்னப்பெண்ணான நானே அதிக வேலைகளைச் செய்யவேண்டி இருந்தது.

சாரணர் இயக்கத்தில் இருந்து துடிப்புடன் இயங்கி, ஜனாதிபதியின் கரங்களில் தேசிய விருதைப் பெற்ற, ஒரு படித்த பெண்ணுக்கு கொடுக்கப்படும் வேலையா இது என்ற எண்ணம் என் மனநிலையை மிகவும் பாதித்தது. 19 வயதில் ரயில்வே கேன்டீனில் பெரிய பெரிய பாத்திரங்களுக்கு நடுவில் அதை சுத்தம் செய்யும் பணி என் உடல் ஆரோக்கியத்தையும் மனநிலையையும் சேர்த்தே கெடுத்தது. குடும்பச் சூழலால் இத்தனையையும் தாங்கிக் கொண்டேன்.

என் உடன் படித்தவர்கள் நான் ரயில்வே காலனிப் பகுதிகளைப் பெருக்கி சுத்தம் செய்கையில் பார்த்தும் பார்க்காததுபோல் செல்வதையும், பேசத் தயங்கி கடந்து செல்வதையும் பார்க்கும்போது, அத்தனை வலிக்கும்.! பெற்றோரும் என்னைப் புரிந்துகொள்ளவில்லை. அதே வேளையில் லயோலா கல்லூரியில் மாலைநேர படிப்பாக பிஎஸ்ஸி சைக்காலஜி மற்றும் தொலைதூரக் கல்வியில் ஈவென்ட் மேனேஜ்மென்ட் படிப்பில் இணைந்து படிப்பையும் தொடர்ந்தேன். எனக்குக் கிடைத்த ஊதியம் ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே. அதில் என் படிப்பு, குடும்பச் செலவு, பெற்றோரின் செலவு எல்லாவற்றையும் சேர்த்தே கவனித்தேன்.

இரண்டு ஆண்டுகள் ரயில்வேயில் வேலை பார்த்து பிஎஸ்ஸி முடித்த பிறகு மேலே படிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அப்போதுதான் எனது நண்பர் மூலம் சமூக சேவை சார்ந்த மேல்படிப்புக்காக மும்பையில் இயங்கி வரும் ‘டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் (TISS)’ பற்றித் தெரிய வந்தது. அதில் இணைவதற்காக என் வீட்டிற்குத் தெரியாமல் விண்ணப்பித்தேன். சாரணர் இயக்க முகாமுக்குச் செல்வதாக பொய் கூறிவிட்டு, நுழைவுத் தேர்வுக்குச் சென்று எழுதித் தேர்வானேன். நேர்முகத் தேர்விலும் எனக்கு வெற்றி.

விடுதியில் இலவசமாகத் தங்கி ஸ்காலர்ஷிப் மூலமாக எம்.ஏ. சோஷியல் ஒர்க் படிக்க வாய்ப்பும் கிடைத்தது. துணிந்து எனக்கான முடிவை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். அங்கு படிக்கச் சென்றுவிட்டால் என் ரயில்வே பணி, குடியிருக்கும் ரயில்வே குவார்ட்டஸ் உள்பட என் குடும்பத்தினரின் ஆதரவு என பலவற்றையும் இழந்தே ஆக வேண்டும். என் மாத வருமானம் ஐந்தாயிரத்தையும் என் குடும்பம் இழக்கும். இந்நிலையில் குடும்பத்தினரின் பயங்கர எதிர்ப்புகளை சந்திக்க நேர்ந்தது. நான் வேலையை விட்டேன். அதன்பின் என் குடும்பத்தினர் என்னுடன் இரண்டு ஆண்டுகள் பேசவில்லை. தொடர்பிலும் இல்லை.

எனது இருசக்கர வாகனத்தை விற்றுக் கிடைத்த ஐந்தாயிரம் ரூபாயுடன் படிப்பிற்காக துணிந்து மும்பை சென்றேன். வேற்று மாநிலத்தில் முகம் தெரியாத, வேற்று மொழி பேசும் மாணவர்களுடன், தமிழ் மட்டுமே பேசத் தெரிந்த நான் விழிபிதுங்கி நின்றேன். ஆங்கிலம் எனக்கு அப்போது சரளமாகப் பேச வராது. ரெகுலர் கல்லூரி சென்ற அனுபவமும் எனக்கில்லை. மிகவும் திண்டாடிப் போனேன்.

பின்தங்கிய மிகவும் தாழ்த்தப்பட்ட நிலையில் இருந்து என்னைப்போல கல்வி பயில வந்த மாணவர்கள் ஒரு சிலரின் நட்பான அணுகுமுறை மற்றும் பின்தங்கிய கிராமப் பகுதிகளில் இருந்து வந்து எனக்கு கல்வி போதித்த பேராசிரியர்களின் அறிவுரைகள் ஆகிய இவையே என்னை நிலைப்படுத்தின. வேலையும் இல்லை வீட்டினரின் ஆதரவும் இல்லை. இந்த நிலையில் படிப்பை பாதியில் விட்டுச் செல்லக்கூடாது, மற்றவர்களுக்கு நான் ஒரு தவறான முன்னுதாரணமாக மாறிவிடக் கூடாது என்ற எண்ணம் எழுந்தது. மனதில் எனக்கிருந்த அந்தத் தடையை வெளியில் தூக்கி எறிந்தேன்.

என்னை நானே திடப்படுத்திக் கொண்டேன். எல்லோரும் ஆங்கிலத்தில் பேசுவதை கூர்ந்து கவனிக்கத் தொடங்கினேன். நான் அவர்களை கவனிக்க ஆரம்பித்த பிறகு எனக்கு எல்லாமும் சுலபமானது. புரிந்துகொள்ள முடிந்தது. படிப்பில் கொஞ்சம் கொஞ்சமாக கவனம் செலுத்த ஆரம்பித்தேன். எந்த நேரமும் நூலகத்திலேயே கிடப்பேன். கல்லூரியின் அனைத்துத் துறைக்கும் செல்வேன். அனைவர் பேசுவதையும் கவனிப்பேன். தயக்கம் உடைந்து மொழி என் வசப்பட்டது.

இரண்டாம் ஆண்டில் தலித் மற்றும் பழங்குடியினர் தொடர்பான பொருளடக்கத்தை எடுத்து அது தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை படிக்கத் துவங்கினேன். என் சீனியர்கள் சிலர் என் ஆர்வம் மற்றும் செயல்பாட்டைப் பார்த்து மாணவர் பேரவைத் தேர்தலில் என்னை நிற்க வைத்தார்கள். டிஸ்(TISS) கல்வி நிறுவனத்தின் 75 ஆண்டுகால வரலாற்றில், மாணவர் தலைவராக ஒரு பெண் அதுவும் தலித் பெண் அதுவரை இருந்தது இல்லை.

அதற்கும் நான் நிறைய நிறைய எதிர்ப்புகளை சந்திக்க நேர்ந்தது. அவற்றை சக மாணவ நண்பர்களின் உதவியோடு தகர்த்தெறிந்து தேர்தலில் நின்றேன். வெல்லவும் செய்தேன். கல்லூரியில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தேன். மாணவர்கள் மத்தியிலும் எனக்கு கல்வி பயிற்றுவித்த பேராசிரியர்கள் மத்தியிலும் அங்கு பணியாற்றிய கடைநிலை ஊழியர்கள் மத்தியிலும் எனக்கும் எனது நேர்மையான  செயல்பாட்டுக்கும் பாராட்டு கிடைத்தது” என்கிறார் முத்தமிழ்.

மாணவர் பரிவர்த்தனை திட்டத்தின் மூலமாக அமெரிக்காவில் உள்ள துலேன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் சோஷியல் ஒர்க்குக்கு செல்லும் வாய்ப்பு கல்லூரி மூலம் இவருக்குக் கிடைத்தது. அமெரிக்கா சென்று தாழ்த்தப்பட்ட கறுப்பர் போராட்டங்களின் நிலை குறித்த ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார். பட்டம் பெறும் நாளும் நெருங்கியது. இந்நிலையில் கல்லூரி வளாகத் தேர்வில் வென்று ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள சுரங்க நிறுவனமான  ரியோ டின்டோவில் மாதம் நான்கு லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலையும் கிடைத்துவிட்டது.

“பட்டம் வாங்கும் நாளன்று பெற்றோர் இருக்கவேண்டும் என நினைத்தேன். இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னைக்கு வந்தேன். அம்மாவையும் அப்பாவையும் சமாதானப்படுத்தி மும்பைக்கு அழைத்துச் சென்றேன். எல்லா பாடங்களிலும் நான் முதலிடம் பெற்று, அனைவரின் பாராட்டு மழையிலும் நான் பட்டம் பெற்றதைக் கண்டு எனது அம்மாவும் அப்பாவும் சொல்ல வார்த்தையற்று நா தழுதழுக்க அழுதார்கள். இந்த தருணத்தைவிட என் பெற்றோர்க்கு நான் வேறு என்ன பெரிசாய் செய்துவிட முடியும்” என பழைய நினைவில் மூழ்கினார் முத்தமிழ்.

“வேலையில் இணைந்து ஆஸ்திரேலியாவும் சென்றேன். அங்குள்ள சுரங்க நிறுவனத்தில் பணியாற்றிய பழங்குடி இன மக்களின் மேம்பாட்டிற்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் சவாலான அந்தப் பணியினை மனப்பூர்வமாக ஏற்று அவர்களோடு அவர்களில் ஒருத்தியாக பணி செய்தேன். அவர்கள் மொழியினையும் கற்றுக் கொண்டேன். என் ஊதியத்தில் வீட்டுக்கடன் முழுவதையும் அடைத்தேன். என் பெற்றோருக்காக வீடு கட்டிக்கொடுத்தேன்.

எனக்கென்று கொஞ்சம் சேமிப்பையும் வைத்துக்கொண்டேன். மும்பை சென்று படிக்க வேண்டும் என்னும் முடிவை மட்டும் நான் துணிந்து எடுக்காமல் இருந்திருந்தால் என் நிலை என்னவாகியிருக்கும்? கடைசி வரை ரயில்வே கேன்டீனில் பாத்திரங்கள் துலக்கிக்கொண்டு இருந்திருப்பேன். என் நிலையை மாற்றிய அந்த நொடியை, என்னைப்போல திக்கற்று வாழ வழி அறியாது தவித்துக்கொண்டிருக்கும் பின்தங்கிய மாணவர்களுக்கு வழிகாட்டுபவளாக இருக்கவேண்டும் என்ற எண்ணமே என்னை ஆஸ்திரேலியா வேலையினை உதறிவிட்டு இந்தியா நோக்கித் திரும்பியது.

ஆஸ்திரேலியாவில் இருக்கும்போதே இதைப் பற்றி தீர்மானித்து அதற்கான வேலைகளை அங்கிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக என் நண்பர்கள் மூலம் தொடங்கிவிட்டேன்” என்கிறார். இந்த நிலையில் திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் முகநூல் மூலமாக எனக்கு நண்பரானார். அவருக்கும் என்னைப் போன்ற ஒத்த எண்ணம் இருந்ததால் நான் இந்தியா திரும்பியதும் அவருடன் இணைந்து பேசி முடிவு செய்து “நீலம்” அமைப்பை உருவாக்கினோம்.

0a1b

அவரின் சினிமாத்துறை சார்ந்த சில நண்பர்களும் அவரோடு இணைந்து கைகோர்க்க இந்த ‘நீலம்’ அமைப்பு இரண்டு ஆண்டுகளைக் கடந்து இயங்கிக் கொண்டிருக்கிறது. கல்வி இடைநிற்றலை இல்லாமல் செய்வதும், பின்தங்கிய பகுதி குழந்தைகளின் கல்வியை சமூகம் சார்ந்த கல்வியாக கலை மூலமாக கற்றுத் தருவதுமே ‘நீலம்’ அமைப்பின் நோக்கம். அவர்களின் தாழ்வு மனப்பான்மையினைக் களைந்து அவர்களை தைரியம் மிக்கவர்களாக மாற்றவேண்டும். அதற்கு மொழி ஒரு தடையாக அவர்களுக்கு உள்ளது.

சாரணர் இயக்கத்துல நான் இருந்தது மூலமாக பள்ளி வாழ்க்கையில எனக்குக் கிடைத்தவைதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறது. வெறும் கல்வி மட்டுமே வாழ்க்கை இல்லை. ஏட்டுக் கல்வியைத் தாண்டி எத்தனையோ கலை சார்ந்த விஷயங்கள் நிறைய உள்ளது. அவற்றை இந்த விளிம்பு நிலைக் குழந்தைகள் உள்வாங்கி அவர்களும் நாளை என்னைப் போன்று வெளியில் வர வேண்டும். அதற்கான களத்தை அமைத்துக் கொடுப்பவர்களாக நீலம் அமைப்பினர் பல வழிகளில் இயங்கிக் கொண்டிருக்கிறோம்” என்கிறார் முத்தமிழ்.

சென்னை மற்றும் அதைச் சுற்றி வியாசர்பாடி, அயனாவரம், கர்லப்பாக்கம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளில் தலித்  குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு கலை மூலம் கற்பதை பல வழிகளில் கொடுக்கிறது நீலம். இவை தவிர்த்து சாதியப் பிரச்னை, ஆணவக் கொலை தொடர்பான செய்திகளை ஆவணப்படுத்துவது போன்ற வேலைகளையும் செய்கிறது. மேலும் பழங்குடியினர், பெண்கள், தலித்துகள், மாற்றுப் பாலினத்தவர், சிறுபான்மையினத்தவர் குறித்த புத்தகங்களுக்கான விமர்சன நிகழ்வுகளையும் ஒருங்கிணைக்கிறது.

“வனதேவதை” என்னும் குறும்படத்தில் நடித்திருக்கிறார் முத்தமிழ். தற்போது தயாராகிக் கொண்டிருக்கும் “மின்மினிகள்” என்ற திரைப்படத்திலும் ஆசிரியராக நடித்திருக்கிறார். “ஏற்கனவே முன்னேறிய பெண்களுக்கு மட்டுமே ஆதரவு உள்ளது. முதல் தலைமுறையாக படித்து வெளியில் வரும் பெண்களுக்கும், தொழில் முனைவோராகும் பெண்களுக்கும் இந்த சமுதாயம் ஆதரவு தரவேண்டும். இப்பெண்களை வழி நடத்திச் செல்கிற அமைப்பு இங்கு குறைவு.

இயங்கும் ஒரு சில பெண்களும் சமூகம் தரும் அழுத்தம் தாங்காமல் காணாமல் போய்விடுகிறார்கள். பெற்றோர் தங்களின் பெண்கள் மீது அதிக நம்பிக்கை வைக்கவேண்டும். அந்த நம்பிக்கையை என் பெற்றோருக்கு என் செயல்பாடுகள் மூலம் வரவைத்தேன். ஒரு சுதந்திரமான பெண்ணாக  இயங்குகிறேன். இன்று என்னால் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடிகிறது” என்கிறார் முத்தமிழ் கலைவிழி.

சந்திப்பு: மகேஸ்வரி

 Courtesy: kungumam.co.in

 (Shared from Kavin Malar)