“நெடுவாசல் போராட்டத்தை கைவிட வேண்டும்”: எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்!
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெடுவாசல் கிராமப் பிரதிநிதிகளை கேட்டுக் கொண்டார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”தமிழக முதல்வர் எடப்பாடி மு.பழனிசாமியை இன்று தலைமைச் செயலகத்தில், நெடுவாசல் கிராமப் பிரதிநிதிகள் சி.வேலு, ஏ.ராமநாதன், கே.தட்சிணாமூர்த்தி, ஆர்.எஸ்.விஜயகுமாரன், வை.கோ.ராமநாதன், ஏ.எஸ்.பன்னீர், வை.ராஜேந்திரன், சோ.வேல்சாமி, கே.வி.செந்தில்தாஸ், ஆர்.ராம்குமார், வை.பார்த்திபன் ஆகியோர் சந்தித்து, புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில் செயல்படுத்தப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை மத்திய அரசு கைவிட வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்துமாறு கோரிக்கை மனுவினை அளித்தார்கள்.
தற்போது நெடுவாசல் கிராமத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் தனியார் நிறுவனம் மூலம் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வெகுவாக பாதிக்கும் என்றும் காவிரி கடைமடை பகுதியில் உள்ள இக்கிராமத்தில் போதிய நீர் ஆதாரம் இன்றி நிலத்தடி நீர் மூலமே விவசாயம் தற்போது நடைபெறுவதாகவும் கிராமப் பிரதிநிதிகள் கூறினர்.
மேலும், ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் தங்களது விவசாயம் பாதிக்கப்படும் எனவும், மாநில அரசு இத்திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளிக்கக் கூடாது என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிட முதல்வர் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் நெடுவாசல் கிராமப் பிரதிநிதிகள் கேட்டுக் கொண்டனர்.
நெடுவாசல் கிராமப் பிரதிநிதிகளின் கோரிக்கையை கவனமாக கேட்டுக்கொண்ட முதல்வர், இது குறித்து கடந்த 27-ம் தேதி அன்று பிரதமரை தான் நேரில் சந்தித்தபோது நெடுவாசல் விவசாயிகளின் பிரச்சினைகளை எடுத்துரைத்ததாகவும், அதை அப்போதே ஊடகம் மூலம் தெரிவித்ததாகவும் கூறினார்.
நெடுவாசல் கிராம மக்களின் உணர்வுகளை பிரதமரிடம் நேரடியாக கொண்டு சென்ற தமிழக முதல்வருக்கு நெடுவாசல் கிராமப் பிரதிநிதிகள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் தமிழக அரசு விவசாயிகளுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்கும் என்று முதல்வர் உறுதியளித்தார். மேலும், இத்திட்டத்திற்கு நெடுவாசல் கிராமத்தில் வணிக ரீதியாக உற்பத்தி செய்வதற்கு பெட்ரோலியம் சுரங்க குத்தகை உரிமம் மாநில அரசு வழங்கவில்லை எனவும், விவசாயிகள் இத்திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளதால் நெடுவாசல் கிராமத்தில் இத்திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி வழங்காது என்றும், எனவே நெடுவாசல் மக்களும், விவசாயிகளும் எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவித்தார்கள்.
முதல்வர் எடப்பாடி மு.பழனிசாமி, தமிழகத்தில் விவசாயிகள் பாதிப்படையக் கூடிய எந்தத் திட்டமானாலும், அதனை ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக அரசு செயல்படுத்தாது எனவும் மாநில அரசின் இந்த உறுதியை ஏற்று, நெடுவாசலில் நடைபெற்று வரும் போராட்டத்தை கைவிட வேண்டுமென்றும் நெடுவாசல் கிராமப் பிரதிநிதிகளை கேட்டுக் கொண்டார்” என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.