’வாடகைத் தாய்’ தொடர்பான விதிகளை நயன்தாரா – விக்னேஷ் சிவன் மீறவில்லை: தமிழ்நாடு அரசு
நயன்தாரா – விக்னேஷ்சிவன் ஜோடி இரட்டைக் குழந்தைகளுக்குப் பெற்றோர் ஆன விவகாரத்தில் விதிகள் மீறப்படவில்லை என தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
பிரபல நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி கோலாகலமாக திருமணம் செய்துகொண்டனர். கடந்த அக்டோபர் 9ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதாக, தாங்கள் இருவரும் குழந்தைகளின் காலில் முத்தமிடுவது போன்ற புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.
விக்னேஷ் சிவனின் இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது. அது எப்படி திருமணம் நடந்து நான்கு மாதங்களில் குழந்தை பிறந்தது என்றும், ஒருவேளை வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றார்கள் என்றால் விதிகளை மீறி பெற்றார்களா என்றும் விவாதங்கள் நடந்தன.
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்திய பிறகு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் சுகாதாரத்துறை உரிய விசாரணைகளை மேற்கொண்ட பிறகு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், வாடகைத் தாய் விவகாரத்தில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி எந்த விதிகளையும் மீறவில்லை என்று தெரிவித்துள்ளனர். அதாவது,
1.விசாரணையில், விக்கி – நயன் ஜோடி மற்றும் வாடகைத்தாய் ஆகியோருடைய வயது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவன செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பம் மற்றும் வாடகைத்தாய் முறைக்கான வழிகாட்டு நெறிமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2.ICMR வழிகாட்டுதல் நெறிமுறைகளின் பிரிவு 3.10.5 -ன் படி வாடகை தாய்க்கு சரியான வயதில் திருமணம் ஆகி, ஒரு குழந்தை உள்ளதும் தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
3.விக்கி – நயன் ஜோடிக்கு 2016, மார்ச் 11 -ல் பதிவு திருமணம் நடைபெற்றதாக மருத்துவமனை சார்ப்பில் பதிவு சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதன் உண்மைத்தன்மை பதிவு துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
4.ICMR வழிகாட்டுதல் நெறிமுறைகளின் பிரிவு 3.16.2 -ன் படி விக்கி – நயன் ஜோடி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்த மருத்துவச்சான்று விசாரணைக்குழுவிற்கு சம்ர்ப்பிக்கப்பட்டுள்ளது.
5.சினைமுட்டை சிகிச்சை சம்மந்தமான நோயாளியின் சிகிச்சை பதிவேடுகள் மருத்துவமனையில் முறையாக பராமரிக்கப்படவில்லை.
6.ஆகஸ்ட் 2020ஆம் ஆண்டில் நயன்தாராவின் சினைமுட்டையும், விக்னேஷ் சிவனின் விந்தணுவும் பெறப்பட்டு கருமுட்டை உருவாக்கப்பட்டது. அதன்படி, 2021 நவம்பர் மாதத்தில் வாடகை தாய் ஒப்பந்தம் போடப்பட்டது, மார்ச் மாதம் 22 ல் கருமுட்டைகள் வாடகை தாயின் கருப்பையில் செலுத்தப்பட்டு அக்டோபர் மாதம் குழந்தை பிரசவிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
எனவே, சுகாதாரத்துறையின் இந்த அறிக்கையின் மூலம் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி வாடகைத் தாய் சர்ச்சை விவகாரத்தில் எந்த விதிமீறல்களும் செய்யவில்லை என்பது உறுதியாகி முடிவுக்கு வந்தது.