நயன்தாரா அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!
‘அன்னபூரணி’ படத்துக்காக நயன்தாரா மன்னிப்புக் கோரி இருக்கிறார். அதே அறிக்கையில் கொட்டை எழுத்தில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
இதை இந்துத்துவர்கள் வெற்றியாக கொண்டாடுகிறார்கள். மதவாத அரக்கி தலை விரித்து ஆடும் சமூகங்களில் இதைத் தவிர வேறு எதுவும் நடக்காது. என்னையே பிடித்து வைத்து ஒரு உருட்டுக் கட்டையை காட்டி மிரட்டினால் நானும் உயிர்ப் பயத்தில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்லி தப்பிக்கத் தான் முனைவேன்.
தெருவெங்கிலும் இந்துத் தீவிரவாதிகள் உலவுகிறார்கள். ஆட்சிக் கட்டிலில் இருப்பவர்கள் அந்தத் தீவிரவாதிகளுக்கு ஆயுதம் தந்து ஊக்குவிக்கிறார்கள். அப்படிப்பட்ட சமூகத்தில் உயிருக்கும் உடமைக்கும் பயந்தவர்கள் சொல்லித்தான் தப்பிக்கப் பார்ப்பார்கள்.
எனவே, நயன்தாராவை ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷம் போட வைத்து விட்டோம் என்பதில் இந்துத்துவர்களுக்கு எந்த வெற்றியும் இல்லை. அதில் ராமருக்கோ அல்லது இந்து மதத்துக்கோ எந்தப் பெருமையும் இல்லை.
‘ஜெய் ஸ்ரீராம்’ என்பது வெறித்தனத்தின் எக்களிப்பு. அறிவீனத்தின் கீதம். வன்முறைக்கான அறைகூவல். அடக்குமுறையின் பாடல். இந்துத் தீவிரவாதிகளின் அடையாளம். அந்த கோஷம் இப்படியெல்லாம் உருமாறி பத்து ஆண்டுகள் நிறைவு பெறப் போகிறது.
நயன்தாரா அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் பிள்ளைகளாவது, இந்துத்துவம் ஒழிந்து போன நற்சமூகத்தில் சுதந்திரத்துடனும் மகிழ்வுடனும் வாழ்வார்கள் என்ற கனவைத் தொடர்ந்து காண்போம்.
– ஸ்ரீதர் சுப்ரமணியம்