“சொந்தக் குரலில் பேசாத எனக்கு தேசிய விருது”: ரித்திக்கா சிங் வியப்பு!
63-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. ‘இறுதிச்சுற்று’ படத்துக்காக நடிகை ரித்திகா சிங்குக்கு சிறப்பு விருது கிடைத்துள்ளது.
இது குறித்து ரித்திகா சிங் ட்விட்டர் தளத்தில் கூறியதாவது:
“கடவுளே! என் வாழ்க்கையில் இந்தளவுக்கு அழுததில்லை. என் வாழ்க்கையின் மிகச் சிறந்த தருணம்.
தேசிய விருது?
இதற்கு நான் தகுதியுடையவள் என்று நான் எண்ணியதே இல்லை. அந்தப் படத்துக்காக நான் சொந்தக் குரலில் பேசவே இல்லை. எனக்காக உமா மகேஸ்வரி டப்பிங் பேசினார். இந்த விருதுக்காக நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.
இறுதிச்சுற்று படத்தில் மதி கதாபாத்திரத்தில் நடிக்கக் காரணமாக இருந்த இயக்குநர் சுதா உள்பட அனைவருக்கும் நன்றி. இந்த மண்ணில் நான் தான் மிகவும் அதிர்ஷ்டமானவள். எனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.