“மனித உரிமை போராளிகளுக்கு தேசிய விருதை சமர்ப்பிக்கிறேன்!” – ராஜூமுருகன்
‘ஜோக்கர்’ படத்துக்கு கிடைத்த தேசிய விருதை மனித உரிமை போராளிகளுக்கு சமர்ப்பிப்பதாக இயக்குநர் ராஜூமுருகன் தெரிவித்தார்.
64-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டது. இதில் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளியான ‘ஜோக்கர்’ சிறந்த தமிழ் படத்திற்கான விருதை வென்றுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் பிரபு தயாரித்துள்ளார்.
கிராம மக்களின் சுகாதார பிரச்சினையை மையமாக வைத்து, அரசியல்வாதிகளை கடுமையாக சாடிய பாடம் ‘ஜோக்கர்’. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், ‘ஜாஸ்மீன்’ பாடலைப் பாடிய சுந்தராஐயருக்கு சிறந்த பின்னணிப் பாடகர் விருதைப் பெறவுள்ளார்.
‘ஜோக்கர்’ சிறந்த படமாக தேர்வானது குறித்து இயக்குநர் ராஜூமுருகன் கூறுகையில், “இந்த விருது எனக்கு கிடைத்த விருதல்ல. இந்தப் படத்துக்கு மட்டும் கிடைத்த விருதல்ல.
உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கும் மனித உரிமை போராளிகளுக்கும், அதனைச் சார்ந்த அமைப்புகளுக்கும், அவர்களுடைய செயல்பாடுகளுக்கும் கிடைத்த ஒரு அங்கீகாரமாக நினைக்கிறேன். அவர்களுக்கு இந்த விருதை சமர்ப்பிக்கிறேன்.
அதிகாரத்தை நோக்கித் தான் படைப்பாளிகள் குரல் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். ‘ஜோக்கர்’ படமும் அதிகாரத்தை நோக்கிக் குரல் கொடுத்த படம் தான். இதற்கு விருது கொடுத்திருப்பதை ஆரோக்கியமான விஷயமாகத் தான் பார்க்கிறேன்” என்று தெரிவித்தார்.