நட்சத்திரம் நகர்கிறது – விமர்சனம்

நடிப்பு: துஷாரா விஜயன், கலையரசன், காளிதாஸ் ஜெயராம் மற்றும் பலர்

இயக்கம்: பா.இரஞ்சித்

தயாரிப்பு: யாழி ஃபிலிம்ஸ் & நீலம் புரொடக்சன்ஸ்

இசை: தென்மா

ஒளிப்பதிவு: கிஷோர் குமார்

படத்தொகுப்பு: ஆர்.கே.செல்வா

மக்கள் தொடர்பு: குணா

# # #

தான் ஒரு காதல் படம் எடுக்கப் போகிறேன் என்று ரஞ்சித் அறிவித்தபோதே சுதாரித்துக் கொண்டேன். இது வழக்கமான காதல் படமாக இருக்காது என்று அப்போதே ஒரு உள்ளுணர்வு சொல்லியது. ‘நட்சத்திரம் நகர்கிறது’ ஒரு காதல் படம்தான். ஃபிரேமுக்கு ஃபிரேம் காதல் பற்றிப் பேசுகிறது. காதல் பற்றி விவாதிக்கிறது. வித விதமான காதலர்களை சித்தரிக்கிறது. ஆனால் அவை எதுவும் காதல்கள் இல்லை என்ற உணர்வை நமக்கு கொடுத்துக் கொண்டே இருக்கிறது படம்.

அங்கேதான் ரஞ்சித் நிற்கிறார். காரணம், வழக்கமான இந்தியக் காதலை இந்த அளவு ஆக்ரோஷமாக சாடி வெளிவந்த வேறு ஒரு படத்தை நான் பார்க்கவில்லை. ஒரு ஃபிரெஞ்சு படத்துக்கான திரை மொழியுடன் துவங்கும் படம் காதல் என்றால் என்ன என்ற கேள்வி கேட்கிறது. படத்தில் உலவும் வெவ்வேறு கதாபாத்திரங்களின் காதல்களை அலசி இது உண்மைக் காதலா இது உண்மைக் காதலா என்று நம்மை நோக்கி கேட்கிறது. ஒரு லெஸ்பியன் காதல், ஒரு ஹோமோ செக்சுவல் காதல், ஒரு திருநங்கையின் காதல், ஒரு ஆணின் ஒருதலைக் காதல், ஏற்பாட்டு திருமண நிச்சயதார்த்ததுக்குப் பின் அதனைக் காதல் என்று எண்ணிக்கொள்ளும் காதல், ஒரு பெண்ணின் இரண்டாவது, மூன்றாவது அல்லது பத்தாவது காதல்…

இவற்றில் எது உண்மைக் காதல் என்ற கேள்விகளை கேலிகளுடன் நாம் பார்க்கிறோம். அந்தக் கேள்வியே அவசியமா என்பதுதான் படம் முன்வைக்கும் வாதம். அதேநேரம் காதல் என்பது சுயநலம் மட்டுமே என்று கலாச்சாரத்தில், சாதி-நம்பிக்கைகளில் ஆழமாக மூழ்கிய ஒரு பாத்திரம் சொல்கிறது. குடும்பத்தையும், சுற்றத்தையும் மதிக்காத ஒருவன் அல்லது ஒருத்திதான் காதலில் ஈடுபடுவார்கள் என்ற கலாச்சார பிற்போக்குப் புரிதல் சுட்டிக் காட்டப்படுகிறது.

0a1b

காதலுக்குப் பின்னான அரசியலும் அடக்குமுறையும்கூட பேசப்படுகிறது. நிச்சயிக்கப்பட்ட பெண்ணிடம் ஸ்லீவ்லெஸ் போடாதே என்று கண்டிக்கிறான் ஆண். (‘போடா,’ என்று அவள் நிச்சயதார்த்தத்தை உதறிவிட்டுக் கிளம்புகிறாள்.) காதலர்கள் இடையே வழக்கமாக வரும் சண்டையில் தலித் காதலி கோபத்தில் ஏதோ சொல்லப் போக, இடைசாதி காதலன் ‘சாதி புத்தியை காட்டிட்டியே!’ என்று ஏசுகிறான். (‘போடா,’ என்று அவளும் காதலை முறித்துக்கொண்டு கிளம்புகிறாள்.) ஒரு இடைசாதி ஆண் ஒரு ‘எஸ்சி’ பெண்ணை காதலிப்பதை குடும்பமே வீட்டில் எழவு விழுந்தது போலப் பேசுகிறது. ஒரு திருநங்கையின் காதல் அவள் எதிரிலேயே எள்ளலாக கேலி செய்யப்படுகிறது. காதலை ‘நல்ல காதல்’, ‘நாடகக் காதல்’ என்று வகை பிரிக்கும் சாதிவெறியர்கள் பற்றிப் பேசுகிறது. அந்த சாதிவெறியர்கள் அரங்கேற்றும் ஆணவக் கொலைகள் பற்றிச் சீறுகிறது.

சமீபத்தில் ஒரு பேட்டியில் ரஞ்சித் பேசுகையில் தான் தீவிரமாக திரை மொழியை பல்வேறு வகைகளில் கையாண்டாலும் பார்வையாளர்களுக்கு தனது படங்களின் வசனங்கள்தான் முக்கியமாகப் படுகிறது; அவைதான் சர்ச்சையாகிறது என்று குறிப்பிட்டு இருந்தார். இந்தப் படத்திலும் வசனங்கள் பலவும் கத்தி போல நம் மீது ஏவப்படுகின்றன. ஆனால் அவற்றுக்கு நடுவே ஒரு புதிய திரை மொழி அறிமுகமாகிறது. அமைதியான, ஆரவாராமில்லாத எடிட்டிங், குளுமையான நிறத் தேர்வுகள், மயக்கம்தரும் இசை என்று ஆசுவாசம் தருகிறது. கூடவே ரஞ்சித்தின் குறியீடுகள் படம் முழுக்க விரவிக் கிடக்கின்றன. மாட்டுக்கறி பற்றிய எள்ளலான ஒரு காட்சி வருகிறது. தலித் வாழ்வியல் பற்றிய சுகிர்தராணியின் அருமையான ஒரு கவிதை ஆக்ரோஷமான ஒரு காட்சியமைப்பில் படிக்கப்படுகிறது. LGBTQI+ குழுவினரின் பெருமையை குறிக்கும் வானவில் வண்ணம் படம் முழுவதும் பல்வேறு இடங்களில் காட்சி தருகிறது. ரஞ்சித்தின் ஆதர்சமான அம்பேத்கருடன் இப்போது புத்தரும் சேர்ந்திருக்கிறார். பௌத்தம் பற்றிய ரஞ்சித்தின் நேரடியான கருத்து நான் மேற்சொன்ன பேட்டியில் கிடைக்கிறது. நாம் யாரும் தவற விடக் கூடாத முக்கிய பேட்டி அது. குறிப்பாக ரஞ்சித்தை சாடும் சாதி-அபிமானிகள் பார்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறேன்.

காதல் படம், ரொமான்ஸ் என்று தமிழில் வரும் படங்கள் பொதுவாக என்னை முழுமையாக திருப்திப்படுத்தியதில்லை. அவற்றில் பலவற்றில் நாயகன் நாயகிக்கு வருவது காதலா அல்லது காஜியா என்று படம் குழம்பி நிற்கும். அல்லது நச்சு ஆணியம் – Toxic Musculinity – விரவிக் கிடக்கும். அல்லது கண்டதும் காதல் போன்ற மூட சிந்தனைகள் கொண்டாடப்படும். அல்லது டெலிஃபோனில் காதல், லெட்டர் மூலம் காதல் என்று நம்மை பதினைந்தாம் நூற்றாண்டுக்கு கொண்டு போகும்.

அப்படியெல்லாம் கலாச்சார ஜல்லியடிகள் இல்லாமல், ஆண்-பெண் உறவைப் பற்றிய முழுமையான அறிவியல் தெளிவு கொண்ட படம் ஏதாவது தமிழில் வராதா என்று ஏங்கிக் கொண்டிருந்தேன். அது ஏன் வெறும் ஆண்-பெண்ணோடு நிறுத்த வேண்டும் என்று, ஆண்-பெண், ஆண்-ஆண், பெண்-பெண், ஆண்-திருநங்கை என்று உலகின் அனைத்து காதல்களையும் பற்றி ஒரே படத்தில் பேசி விட்டார் ரஞ்சித். அதையும் முழுமையான தெளிவுடன் பேசி இருக்கிறார். அதையும் தமிழ்த் திரைமொழிகளின் கலாச்சார பாசாங்குகள் இல்லாமல், ஃபிரெஞ்சு புதிய அலை நுண்ணுணர்வுகளுடன் (French New Wave sensibilities) கொடுத்திருக்கிறார்….

தமிழின் ஆகச்சிறந்த காதல் படத்தை பார்த்த திருப்தியுடன் அரங்கில் இருந்து வெளியே வந்தேன்.

– ஸ்ரீதர் சுப்ரமணியம்