“நரேந்திர மோடி பதவி விலக வேண்டும்”: ராகுல், மம்தா போர்க்கொடி!
‘பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், இன்னும் 3 நாட்களுக்குள் சீராகவில்லை என்றால், நரேந்திர மோடி பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நிறைவுபெற்றபோது, மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக 16 எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் துணத் தலைவர் ராகுல் காந்தி ஒருங்கிணைத்தார். எனினும், கடந்த 16ஆம் தேதி விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக மோடியை ராகுல் சந்தித்த பிறகு, சில கட்சிகள் ஒதுங்கியுள்ளன.
இந்நிலையில், பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் நேற்று எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி விவாதித்தனர். அதில், காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஐயூஎம்எல், ஏஐயூடிஎப் ஆகிய 8 கட்சிகள் பங்கேற்றன.
இடதுசாரிகள், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய எதிர்க்கட்சிகள் அதில் பங்கேற்கவில்லை. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இடையே குறைந்தபட்ச செயல் திட்டம் வகுக்க இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
பின்னர் ராகுல்காந்தி, மம்தா உள்ளிட்டோர் கூட்டாக இணைந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். ராகுல் காந்தி கூறும்போது, ‘பண மதிப்பு நீக்க நடவடிக்கை எனும் தன்னிச்சையான பொருளாதார பரிசோதனை முயற்சியை உலக வரலாற்றில் முதல்முறையாக பிரதமர் மோடி மேற்கொண்டுள்ளார். இதுபோன்ற பரிசோதனையை சீனாவில் மாவோ ஆட்சிக் காலத்தில்கூட செய்யவில்லை.
மத்திய அரசின் இந்நடவடிக்கை, கறுப்புப் பணத்தின் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக நாட்டு மக்களின் பொருளாதார சுதந்திரத்தை பறித்துவிட்டது. தோல்விக்குப் பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’ என்றார்.
மம்தா பானர்ஜி கூறும்போது, ‘நாடாளுமன்றத்தைப் பொருட்படுத்தாது, இவ்வளவு பெரிய முடிவை பிரதமர் எடுத்திருக்கிறார். இந்தியா விடுதலை பெற்ற பிறகு, இதுதான் மிகப் பெரிய ஊழலாக இருக்கும்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்படும் சிரமங்கள் தீர, 50 நாட்கள் அவகாசம் வேண்டுமென பிரதமர் கேட்டார். வாழ்வாதாரத்தை இழந்தபோதிலும், பட்டினியால் இறக்க நேரிட்டாலும், அவகாசத்தை மக்கள் அளித்தார்கள். 47 நாட்கள் கடந்துவிட்டன. 50 நாள் கெடு முடியப் போகிறது.
அடுத்த 3 நாட்களுக்கு நாங்கள் பொறுத்திருந்து பார்ப்போம். நிலைமை சீரடையாமல் இதே போன்ற சூழல் தொடருமானால், அதற்கு பொறுப்பேற்று, பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்ய வேண்டும்” என்றார்.
திமுக எம்பி திருச்சி சிவா கூறும்போது, ‘புழக்கத்தில் இருந்த 500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்து நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையால், பெரும் பொருளாதார பிரச்சினையை நாடு எதிர்கொண்டுள்ளது.
வெறும் 6 சதவீத கறுப்புப் பணம் மட்டுமே ரொக்கமாக உள்ளது. இதை குறி வைப்பதற்காக, நாடு முழுவதும் உள்ள மக்களைப் பிரதமர் பிரச்சினைக்கு ஆளாக்கி விட்டார். இந்நடவடிக்கையால் இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை. எதிர்காலத்தில் கறுப்புப் பணம் உருவாகாது என்பதற்கு இத்திட்டத்தில் எந்த உத்தரவாதமும் இல்லை. வங்கிகளில் எவ்வளவு கறுப்புப் பணம் செலுத்தப்பட்டது, எவ்வளவு மீட்கப்பட்டது போன்ற புள்ளிவிவரங்களும் இல்லை.
ஆக, தவறாக திட்டமிட்டு, மோசமாக செயல்படுத்தப்பட்ட நடவடிக்கையாகவே இதை கருத வேண்டியிருக்கிறது’ என்றார்.
பண மதிப்பு நீ்க்க நடவடிக்கைக்கு ராஷ்ட்ரிய ஜனதா கட்சி தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருவதாக அக்கட்சி யைச் சேர்ந்த ஜெய்பிரகாஷ் யாதவ் குறிப்பிட்டார்.