“டெல்லி எஜமானர்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றி இருக்கிறார் ஈபிஎஸ்!” -நாஞ்சில் சம்பத்
“டெல்லி எஜமானர்கள் இட்ட கட்டளையை நிறைவேற்றி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்று ஆளும் அதிமுக (அம்மா) கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், டிடிவி தினகரனின் ஆதரவாளருமான நாஞ்சில் சம்பத் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக (அம்மா) கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் அறிவிப்புகள் எதுவும் கட்சியைக் கட்டுப்படுத்தாது என்று ஈபிஎஸ் தலைமையிலான கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கழக சட்ட விதிகளின்படி, டிடிவி தினகரனின் துணை பொதுச்செயலாளர் நியமனமே செல்லாது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், ”டெல்லி எஜமானர்கள் இட்ட கட்டளையை சரியாக நிறைவேற்றி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் அவர்களின் தீர்மானம் எங்களைக் கட்டுப்படுத்தாது.
இந்த நிமிடம் வரை எடப்பாடி ஆட்சியைக் கலைக்க தினகரன் விரும்பவில்லை. ஆனால் அவர்களின் தீர்மானத்துக்குப் பிறகு இந்த ஆட்சி வேண்டுமா என்று கட்சித் தொண்டர்கள் எண்ண ஆரம்பித்து விட்டனர்.
இன்னும் கால் நூற்றாண்டுக்கு அசைக்க முடியாத சக்தியாக இருக்கவல்ல அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற வல்லாதிக்கங்களின் திட்டத்துக்கு தமிழக முதலமைச்சர் பலியாகி இருக்கிறார்.
கட்சிக்கு இதுவரை எடப்பாடி பழனிசாமி எந்த பங்களிப்பும் செய்யவில்லை. இந்த தீர்மானத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை” என்றார்.
இதுபோல் டிடிவி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களான வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோரும் ஈபிஎஸ் அணியின் தீர்மானத்துக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்கள்.