புத்தாண்டில் திமுகவுக்கு குடி போகிறார் ‘இன்னோவா’ புகழ் நாஞ்சில் சம்பத்!
அதிமுகவில் இருந்து கடந்த இரண்டரை மாதங்களாக ஒதுங்கி இருக்கும் தலைமைக் கழக பேச்சாளரும் செய்தி தொடர்பாளர்களில் ஒருவருமான நாஞ்சில் சம்பத் புத்தாண்டில் திமுகவில் இணைய உள்ளதாக திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
மதிமுகவில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிமுகவில் இணைந்தார். அங்கு அவருக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியும், ‘இன்னோவா’ காரும் அளிக்கப்பட்டது. கடந்த தேர்தலின்போது, இப்பதவியில் இருந்து நீக்கப்பட்ட அவர், பிறகு செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார்.
கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி பறிபோனதில் இருந்தே கட்சியில் அவ்வளவாக பிடிப்பில்லாமல் இருந்தார் சம்பத். இதற்கிடையில், உடல்நலக் குறைவு ஏற்பட்டு வாய் பேசமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட அவருக்கு சிறந்த சிகிச்சை அளிக்க ஜெயலலிதா ஏற்பாடு செய்தார். இந்த ஒரு காரணத்துக்காகத்தான் அவர் அதிமுகவில் நீடிக்கிறார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சேர்க்கப்பட்டதில் இருந்து, அதிமுகவில் இருந்து சம்பத் ஒதுங்கத் தொடங்கினார். சசிகலாவின் தலைமைக்கு ஆதரவு தெரிவிக்குமாறு தூத்துக்குடி மாவட்ட அதிமுகவினர் வலியுறுத்தியும், அவர் பிடிகொடுக்காமல் இருந்துள்ளார்.
இந்த சூழலில், திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் மகேஷ் பொய்யாமொழி, ஜோயல் மற்றும் சேகர்பாபு உள்ளிட்டவர்கள் மூலமாக சம்பத்திடம் பேச்சு நடத்தப் பட்டுள்ளது. திமுக பொருளாளர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனுடனும், பின்னர் ஸ்டாலினுடனும் செல்போனில் சம்பத் பேசியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இது குறித்து அறிவதற்காக நேற்று அவரது இல்லத்தை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, நாஞ்சில் சம்பத், சபரிமலைக்குப் போயிருப்பதாகத் தெரிவித்தனர். அவரை திமுவுக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள திமுக பிரமுகர்களிடம் பேசியபோது, ‘‘நாஞ்சில் சம்பத் திமுகவில் இணைவது நூறு சதவீதம் உறுதியாகி விட்டது. இந்த நிமிடம் வரை அவர் திமுக பிரமுகர்களுடன்தான் இருக்கிறார். அநேகமாக தைப் பொங்கல் நாளன்று சம்பத் திமுகவில் இணையலாம்’’ என்றனர்.