நந்திவர்மன் – விமர்சனம்

நடிப்பு: சுரேஷ் ரவி, ஆஷா வெங்கடேஷ், போஸ் வெங்கட், நிழல்கள் ரவி, கஜராஜ், மீசை ராஜேந்திரன், ஆடுகளம் முருகதாஸ், அம்பானி ஷங்கர், கோதண்டம், ஜே.எஸ்.கே.கோபி மற்றும் பலர்

இயக்கம்: ஜி.வி.பெருமாள் வரதன்

இசை: ஜெரால்டு ஃபெலிக்ஸ்

ஒளிப்பதிவு: சேயோன் முத்து

படத்தொகுப்பு: சான் லோகேஷ்

தயாரிப்பு: ஏகே ஃபிலிம் ஃபேக்டரி

தயாரிப்பாளர்: அருண்குமார் தனசேகரன்

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சுகு / தர்மதுரை / சதீஷ் (எய்ம்)

இரவு நேரம். செஞ்சியின் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் புதையல் தேடி தனி நபராய் வருகிறார் ஒரு இளைஞர். அவர் அமானுஷ்யமாய் அச்சுறுத்தப்பட்டு, மர்மமான முறையில் படுகொலை செய்யப்படுகிறார். அவரை கொல்ல பயன்படுத்தப்பட்ட ஆயுதம் எது என்பதை தடயவியல் நிபுணர்களாலேயே கூட கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படி தொடங்குகிறது ‘நந்திவர்மன்’ திரைப்படம்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சி புரிந்த நந்திவர்மன் என்ற பல்லவ மன்னன், செஞ்சிப் பகுதியில் கட்டிய சிவன் கோயில் ஒன்று மண்ணுக்குள் புதைந்திருப்பதாகவும், அந்த கோயிலில் விலை மதிப்புமிக்க புதையல் இருப்பதாகவும் அகழ்வாராய்ச்சித் துறைக்கு தகவல் கிடைக்கிறது. அகழ்வாராய்ச்சித் துறையின் தலைவரான சக்கரவர்த்தி (நிழல்கள் ரவி), தனக்குக் கீழ் பணிபுரியும் அகழ்வாராய்ச்சியாளர் போஸ் வெங்கடாசலம் (போஸ் வெங்கட்) தலைமையில் மாணவர் குழு ஒன்றை ஆய்வு மேற்கொள்ள அங்கு அனுப்புகிறார்.

ஆனால், இரவு நேரங்களில் அந்த பகுதியில் சில அமானுஷ்ய திகில் சம்பவங்கள் நடப்பதால் ஊர்மக்கள் அந்த இடத்திற்கு செல்வதைத் தவிர்ப்பதோடு, அங்கு ஆய்வு நடத்தவும் தடையாக இருக்கிறார்கள். பின்னர் மக்களை சமாதானப்படுத்தி, போஸ் வெங்கடாசலம் தலைமையிலான குழு அங்கு ஆய்வை மேற்கொள்ளும்போது, அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொல்லப்படுவதோடு, ஆய்வுக்குழுவில் இருந்த மாணவர் ஒருவரும் கொல்லப்படுகிறார்.

இந்த கொலைகள் பற்றிய விசாரணையை முடுக்கிவிடும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குரு வர்மன் (சுரேஷ் ரவி), அந்த ஊரை இறுக்கும் மர்ம முடிச்சுகளைக் கண்டுபிடித்து அவிழ்க்கும் முயற்சியில் இறங்குகிறார். அவருக்கு ஆய்வுக்குழுவைச் சேர்ந்த இலக்கியா (ஆஷா வெங்கடேஷ்) உதவுகிறார். இந்நிலையில், புலனாய்வுக்காக இரவு தன்னந்தனியே அந்த காட்டுப்பகுதிக்குள் செல்லும் சப்-இன்ஸ்பெக்டர் குரு வர்மனும் அமானுஷ்யமாய் தாக்கப்படுகிறார்.

அங்கு நடந்த கொலைகளுக்கான காரணத்தை சப்-இன்ஸ்பெக்டர் குரு வர்மன் கண்டுபிடித்தாரா? கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் பற்றி துப்பு துலங்கியதா? நந்திவர்மன் கட்டிய கோவிலும், புதையலும் அங்கு உண்மையிலேயே புதைந்திருந்தனவா? என்பன போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறது ‘நந்திவர்மன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குரு வர்மனாக நடித்திருக்கும் சுரேஷ் ரவி, காக்கி சீருடைக்குள் கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறார். போலவே, கதாபாத்திரத்துக்குள்ளும் கனகச்சிதமாகப் பொருந்தியிருப்பதோடு, காதல் காட்சிகளிலும் சண்டை காட்சிகளிலும் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அகழ்வாராய்ச்சி மாணவி இலக்கியாவாக நடித்திருக்கும் ஆஷா வெங்கடேஷ், துல்லியமான முகபாவங்களாலும், இயல்பான உடல்மொழியாலும் நடிப்புத் திறமையை அருமையாக உணர்த்தியிருக்கிறார்.

அகழ்வாராய்ச்சித் துறை தலைவர் சக்கரவர்த்தியாக வரும் நிழல்கள் ரவி, அகழ்வாராய்ச்சியாளர் போஸ் வெங்கடாசலமாக வரும் போஸ் வெங்கட், தர்மராஜாவாக வரும் கஜராஜ், பழனிவேல் ராயனாக வரும் மீசை ராஜேந்தர், ஜேசிபி மணியாக வரும் ஆடுகளம் முருகதாஸ், மற்றும் அம்பானி ஷங்கர், கோதண்டம் உள்ளிட்டோரின் நடிப்பும், கதாபாத்திர வடிவமைப்பும் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.

தமிழக வரலாற்றில் இடம் பெற்றிருக்கும் பல்லவ மன்னன் நந்திவர்மனின் பெயரை எடுத்துக்கொண்டு, அதைச் சுற்றி கற்பனைக் கதைக்கருவையும், கற்பனைச் சம்பவங்களையும் பின்னி திரைக்கதையாக்கி, போரடிக்காமல் கிரைம் திரில்லர் ஜானரில் படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் சென்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜி.வி.பெருமாள் வரதன். என்னதான் கற்பனையாக இருந்தாலும் நந்திவர்மனின் வாள் பற்றிய நம்ப முடியாத தகவல்களும், அந்த வாள் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதும் கொலைக்கருவியாக பயன்படுவதாகவும் சொல்லியிருப்பது முழம் முழமாக காதுல பூ!

சேயோன் முத்துவின் ஒளிப்பதிவும், ஜெரால்டு ஃபெலிக்ஸின் இசையும், முனி கிருஷ்ணனின் கலை இயக்கமும், சுகேஷின் சண்டைப் பயிற்சியும் இயக்குநரின் கதை சொல்லலுக்கு உறுதுணையாக இருந்திருக்கின்றன.

‘நந்திவர்மன்’ – கதையில் வரும் எதிர்பாராத திருப்பங்களுக்காகப் பார்க்கலாம்!