நந்தன் – விமர்சனம்
நடிப்பு: எம்.சசிகுமார், ஸ்ருதி பெரியசாமி, மாதேஷ், மிதுன், பாலாஜி சக்திவேல், சமுத்திரக்கனி, கட்ட எறும்பு ஸ்டாலின், வி.ஞானவேல், ஜி.எம்.குமார், சித்தன் மோகன், சக்தி சரவணன் மற்றும் பலர்
எழுத்து & இயக்கம்: இரா.சரவணன்
ஒளிப்பதிவு: ஆர்.வி.சரண்
படத்தொகுப்பு: நெல்சன் ஆண்டனி
இசை: ஜிப்ரான் வைபோதா
தயாரிப்பு: ‘இரா என்டர்டைன்மெண்ட்’ இரா.சரவணன்
வெளியீடு: டிரைடென்ட் ஆர்ட்ஸ்
பத்திரிகை தொடர்பு: யுவராஜ்
ஒரு ஜனநாயக நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலுள்ள சாதிய அரசியலின் மோசமான தாக்கம் என்ன என்பதை தோலுரித்துக் காட்டி அம்பலப்படுத்துவதற்காக வந்திருக்கிறது இயக்குநர் இரா.சரவணனின் `நந்தன்’.
புதுக்கோட்டை மாவட்டம் வணங்கான்குடியின் ஊராட்சி மன்றத் தலைவராக இடைநிலை ஆதிக்க சாதியைச் சேர்ந்த கோப்புலிங்கம் (பாலாஜி சக்திவேல்) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு, ஆண்டாண்டு காலமாக ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில் அந்த ஊராட்சியை பட்டியல் சாதியினர் மட்டுமே போட்டியிடும் தனி (ரிசர்வ்) தொகுதியாக அரசு அறிவித்துவிடுகிறது. இதனால், “கூழ் பானை” என்று இழிவாக அழைத்தாலும், அது குறித்து எதிர்ப்புத் தெரிவிக்காமல், தன்னிடம் விசுவாசமான எடுபிடியாக இருந்துவரும் பட்டியல் சாதியைச் சேர்ந்த அம்பேத்குமாரை (சசிகுமார்) பெயருக்கு ஊராட்சி மன்றத் தலைவராக்கிவிட்டு, அதிகாரத்தைத் தானே வைத்துக்கொள்கிறார் கோப்புலிங்கம். இதனால் என்னென்ன பிரச்சனைகள் வருகின்றன? தன்னை வெறும் பொம்மை போல் வைத்துக்கொண்டு, கோப்புலிங்கம் அதிகாரம் செய்து வருவதை அம்பேத்குமார் உணருகிறாரா? அவரும் அவரைச் சேர்ந்தவர்களும் அதிகாரத்தை உண்மையிலேயே கையிலெடுக்க என்ன செய்கிறார்கள்? அவற்றை கோப்புலிங்கம் எப்படி எதிர்கொள்கிறார்? அரசு எந்திரம் யாருக்கு ஆதரவாக வருகிறது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறது ‘ நந்தன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
நாயகன் கதாபாத்திரத்தில், ‘கூழ் பானை’ என்ற அம்பேத்குமாராக சசிகுமார் நடித்திருக்கிறார். இதுவரை நாம் பார்த்த சசிகுமாரிலிருந்து முற்றிலும் விலகி, வேறு ஒரு பரிமாணத்தைக் கொண்டு வர ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். எந்நேரமும் வெற்றிலையை மென்றுகொண்டே இருப்பது, அழுக்கு உடை, ஒழுங்கற்ற நடை, எஜமான் காலால் இட்ட பணிகளை தன் தலையில் தாங்கி செய்து முடிப்பது என ஒரு கிராமத்து பட்டியல் சாதிக்காரரை பிரதிபலிக்கும் புதிய பரிணாமத்தில் உடல்மொழியால் கவனிக்க வைக்கிறார். அம்மணமாக்கப்பட்டு அடித்து உதைக்கப்படும் காட்சியில் அனுதாபத்தைச் அள்ளுகிறார்.
வில்லன் கதாபாத்திரத்தில், ஊராட்சி மன்ற தலைவர் கோப்புலிங்கமாக பாலாஜி சக்திவேல் நடித்திருக்கிறார். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை இடைநிலை ஆதிக்க சாதித் திமிரேறிய அரசியல்வாதியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நாயகனின் மனைவி செல்வியாக வரும் ஸ்ருதி பெரியசாமி, வட்டார வளர்ச்சி அதிகாரி மருது துரையாக வரும் சமுத்திரக்கனி, கோப்புலிங்கத்தின் அப்பா பெரியய்யாவாக வரும் ஜி.எம்.குமார், மாவட்டமாக வரும் வி.ஞானவேல், அழகனாக வரும் மாதேஷ், நந்தனாக வரும் மிதுன், எழுத்தராக வரும் கட்ட எறும்பு ஸ்டாலின், தண்டபாணியாக வரும் சித்தன் மோகன், பொதியப்ப ராசுவாக வரும் சக்தி சரவணன் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
‘கத்துக்குட்டி’, ‘உடன்பிறப்பே’ ஆகிய படங்களை இயக்கிய இரா.சரவணன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஊரக உள்ளாட்சியமைப்புகளில் உள்ள தனி (ரிசர்வ்) தொகுதிகளில் தலித் ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு நிகழும் தீண்டாமைக் கொடுமைகளையும், அவர்கள் அனுபவிக்கும் வலிகளையும் இதில் பேசியிருக்கிறார் இயக்குநர் இரா.சரவணன். ஊராட்சிப் பதவிகள் ஏலம் விடப்படும் அக்கிரமத்தை அப்பட்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். தேர்தல் அறிவிக்கப்பட்டதும் கோப்புலிங்கத்துக்கு வரும் நெருக்கடியும் தொடர்ந்து வரும் காட்சிகளும் முதல் பாதியை விறுவிறுப்பாக நகர்த்துகின்றன. சொந்த சாதிக்காரனை அவமானப்படுத்த, தனக்காகக் காலமெல்லாம் உழைக்கும் ஒருவனைப் பயன்படுத்தும் ஆதிக்கச் சாதி மனோபாவம், ‘கூழ்பானை’ என இழிபெயர் சூட்டி அழைக்கிறது. தங்களைச் சார்ந்து பிழைக்கும் பட்டியல்சாதி மக்களை எவ்வாறெல்லாம் அடக்குமுறைக்கு ஆளாக்குகிறார்கள், எதிர்ப்பவர்களை என்ன செய்வார்கள் என்பதை உண்மைக்கு நெருக்கமாகச் சித்தரித்திருக்கிறார் இயக்குநர். இரண்டாம் பாதியில் வரும் சில திருப்பங்களும், அதற்கான காரணங்களும் சுவாரஸ்யம் தருகின்றன. பாராட்டுகள் இரா.சரவணன்.
ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவும், ஜிப்ரான் வைபோதாவின் இசையும் கதைக்கும் காட்சிகளுக்கும் வலு சேர்த்துள்ளன.
‘ நந்தன்’ – நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காகவாவது பார்க்கலாம்!