”உண்மையிலேயே ‘நந்தன்’ சிறந்த திரைப்படம்”: இயக்குநர் ஹெச்.வினோத் பாராட்டு!

Era Entertainment தயாரிப்பில், Trident Arts ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலை பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன். எதிர்வரும் இருபதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை- ஊடக -பண்பலை- நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில் …

இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் பேசியதாவது…

ஒரு சினிமா நமக்கு எவ்வளவு கற்றுக் கொடுக்கும்  என்பதை, மீண்டும் மீண்டும் ஒரு நல்ல சினிமா சொல்லிக் கொண்டே இருக்கிறது. நாங்க எல்லாம் சென்னையிலேயே பிறந்து எதுவும் தெரியாமல் வளர்ந்து விட்டோம், ஆனால் கிராமத்து பக்கம், இன்னும் இது மாதிரி சம்பவங்கள், தொடர்ச்சியாக நடந்து கொண்டே இருக்கிறது என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. அதை ஒரு படமாக உங்கள் முன்னால் கொண்டு வரும் இயக்குநர்களில் ஒருவராக இரா. சரவணன் போன்ற இயக்குனர்கள் இருப்பது மகிழ்ச்சி. இயக்குனர் இரா சரவணனின் எழுத்துக்களை படித்திருக்கிறேன். அவரது எழுத்துக்களுக்கு நான் ரசிகன். விஷுவலாகவும்  திரைப்படத்தை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். மாற்றத்தை பேசும் மாமன்னர்கள் இருக்கும் சமூகத்தில் அதை அடிமட்டத்தில் இருந்து சமத்துவத்தை பேசும் நந்தனார்களும் நமக்குத் தேவை. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னா பேசியதாவது…

இயக்குநர் இரா. சரவணன் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர், நாம் நிறைய பேரோடு பழகுவோம், ஆனால் சிலருடன் மட்டும்தான் நெருக்கமாக இருப்போம், அந்த வகையில் இரா. சரவணன் மிக அற்புதமான நண்பர், அவரோடு நிறைய சினிமா பற்றி பேசுவேன். ‘உடன்பிறப்பே’ படத்திற்கு பிறகு, அவர் பெரிய இடத்தை அடைவார் என வாழ்த்தினேன்.  இப்போது ‘நந்தன்’ படத்திற்கு பிறகு, அவருக்கு அந்த இடம் கிடைக்கும். பல தடைகளையும், கஷ்டங்களையும் தாண்டி,  இந்த படத்தை அவர் செய்துள்ளார். நடிகர்கள்,  தயாரிப்பு குழுவினர், படக் குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.  படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

இயக்குநர் ஹெச்.வினோத் பேசியதாவது…

நண்பர் இரா. சரவணன் இப்படத்தை பார்க்க சொல்லி, கடந்த சில மாதங்களாக என்னை கேட்டுக் கொண்டிருந்தார்.  ஆனால் நான் தவிர்த்துக் கொண்டே இருந்தேன், அவரது முந்தைய படம் “உடன்பிறப்பே” மிகவும் எமோஷனலான படம், அதனால் அவர் படமே வேண்டாம் என, தவிர்த்து வந்தேன், ஆனால் ஒரு கட்டத்தில் நண்பர்களுடன் இந்த திரைப்படத்தை பார்த்தேன். படம் ஆரம்பித்த பத்து நிமிடத்திற்கு பிறகு, கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இழுத்துக் கொண்டது. நான் கிராமத்திலேயே வளர்ந்து இருந்தாலும், படம் எனக்கு மிகப் பெரும்  அதிர்ச்சியாகத் தான் இருந்தது. என்னைப் பொறுத்தவரை எது நல்ல படம் என்றால், ஒரு மனிதனை இன்னும் கொஞ்சமாவது  நல்லவனாக மாற்ற முயற்சிக்கும் சினிமா தான் நல்ல சினிமா என்பேன், அந்த வகையில் இந்த திரைப்படம் மனிதனின் மனதை மாற்றும் சினிமாவாக இருக்கிறது. சசிகுமார் பொருட்காட்சியில் வைக்கும் அளவு, சிறந்த மனிதர் என்பதாலோ, சரவணன் பத்திரிக்கை துறையில் இருந்து வந்திருக்கிறார் என்பதாலோ, இதை சொல்லவில்லை, உண்மையிலேயே இது சிறந்த திரைப்படம்.  அனைவருக்கும் நன்றி.


நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசியதாவது….

இன்று நந்தன் இசை வெளியீடு,   இறைவனைக் காண இசை பாடல் பாடிய வரலாறு நம்மிடம் இருக்கிறது.  ஆனால் இந்த இசை வெளியீடு, இறைவனைக் காண அல்ல,  மனிதனைக் காண !.  மனிதனைக் காண்பதற்கு வெளியிடும் இசைதான் இந்த நந்தன். நாம் ரசிப்பதற்கு அல்ல,  இந்த இசை, நாம் ஆழ்ந்து யோசிப்பதற்குத் தான் இந்த இசை.  இந்த இசையை  உருவாக்கி இருக்கும் நண்பர் ஜிப்ரானுக்கு என் வாழ்த்துக்கள்.

ஒரு சில திரைப்படங்கள் மட்டும் தான், நாம் பார்த்த பிறகும் நம் மனதில் தாக்கத்தை உருவாக்கும் படி இருக்கும். அப்படி ஒரு திரைப்படத்தைத் தான் நம் நண்பர் நம் இயக்குநர் இரா சரவணன் உருவாக்கி இருக்கிறான்.  பல நூறு ஆண்டுகளாக இந்த இனம் தூக்கிச் சுமந்து வரும் வலியை, திரை மொழியில் பதிவு செய்து இருக்கிறான் இரா சரவணன்.

இந்தப்படம் மிகப்பெரும் தாக்கத்தைப் பார்த்த பிறகும் இன்றும் தந்துகொண்டு இருக்கிறது. என் தம்பி சசி நடித்த அயோத்தி திரைப்படத்தைப் பார்த்து நான் பாராட்டி இருந்தேன். அந்த திரைப்படத்தில் அவன் சசியாகவே இருந்தான்,  ஆனால் இந்த நந்தன் திரைப்படத்தில் முதல் காட்சியிலிருந்தே கூழுப்பானையாகவே மாறி இருக்கிறான் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறான். அப்படி ஒரு உடல் மொழி,  அருமையான உச்சரிப்பு, அவ்வளவு அருமையான நடிப்பு, அதே போல் மிகச்சிறப்பான நடிப்பை, வழங்கி இருக்கிறார் நடிகை ஸ்ருதி. அவர் நடிப்பும் கண்டிப்பாகப் பேசப்படும். அதேபோல் மிக முக்கியமான பாத்திரத்தில் நண்பன் சமுத்திரகனி  மிக அருமையாக நடித்து இருக்கிறான். படத்தை தாங்கி நிற்கும் தூணாக மிக முக்கியமான பாத்திரத்தில் பாலாஜி சக்திவேல் நடித்திருக்கிறார்.

மிக அற்புதமான இசையை வழங்கியிருக்கிறார் ஜிப்ரான், ஒருவர் கூட ஒரு சிறு முகச்சுழிப்பை கூட தவறாக நடிக்கவில்லை, அத்தனை அற்புதமாக நடித்துள்ளனர்.

மனதைத் தாக்கும் மிக நல்ல படைப்புகளை பாலு மகேந்திரா, பாரதிராஜா போன்ற ஆளுமைகள் வழங்கி வந்தார்கள். இப்போது அப்படியான படைப்புகள் வருவதே இல்லை. அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் ஒரு சிறந்த படைப்பாக இந்த திரைப்படம் வந்திருக்கிறது. மிக அருமையாக நாம் வாழும் நிலத்தின் கதையை வழங்கி இருக்கிறான்  சரவணன். வலியின் மொழி தான் இந்த திரைப்படம், வலி உங்களுக்குப் புரிந்தால் இந்தப்படம் உங்களுக்குப் பிடிக்கும்.  ஒரு ஒரு ஆகச் சிறந்த படைப்பு, என் தம்பிகள் இணைந்து மிகச் சிறந்த படைப்பை வழங்கியிருக்கிறார்கள். அவனோடு இணைந்து ஒத்துழைத்து, இப்படைப்பை வழங்கிய அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்.