நண்பன் ஒருவன் வந்த பிறகு – விமர்சனம்
நடிப்பு: ஆனந்த், பவானிஸ்ரீ, குல்லபுலி லீலா, குமரவேல், விஷாலினி, ஆர்ஜே விஜய், இர்ஃபான், வில்ஸ்பட், தேவ், கேபிஒய் பாலா, மோனிகா, ஆர்ஜே ஆனந்தி, சபரிஷ், குகன், ஃபென்னி ஆலிவர், தர்மா, வினோத், பூவேந்தன், மதன் கௌரி, ஜெரோம் ரெமிகாஸ், பிரவீன், சாய் வெங்கடேஷ், தங்கதுரை, வெங்கட் பிரபு, ஐஸ்வர்யா.எம் மற்றும் பலர்
இயக்கம்: ஆனந்த்
ஒளிப்பதிவு: தமிழ்செல்வன்
படத்தொகுப்பு: ஃபென்னி ஆலிவர்
இசை: ஏஹெச்.காஷிஃப்
தயாரிப்பு: ‘மசாலா பாப்கார்ன்’ & ’ஒய்ட் ஃபெதர் ஸ்டூடியோஸ்’ – ஐஸ்வர்யா.எம் & சுதா.ஆர்
வழங்கல்: வெங்கட் பிரபு
பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா
‘காதல் தேசம்’ திரைப்படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துப் பாடிய “முஸ்தபா… முஸ்தபா” என்ற பிரபலமான பாடலில் வரும் “நண்பன் ஒருவன் வந்த பிறகு” என்ற வரியை தலைப்பாகக் கொண்டிருப்பதிலிருந்தே இந்த திரைப்படம் பிரதானமாக நட்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் என்பதை எளிதில் உணர்ந்துகொள்ளலாம்.
படத்தின் ஆரம்பத்தில், சிங்கப்பூரிலிருந்து சென்னைக்குச் செல்லும் விமானத்தில் பயணிப்பதற்காக வருகிறார் கதையின் நாயகன் ஆனந்த். அவரது பக்கத்து சீட்டில் சக பயணியாக அமர்ந்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. இருவருக்கும் இடையே அறிமுகமும், சினேகமும் ஏற்படுகிறது. பேச்சினூடே ஆனந்த் தனது பள்ளிப்பருவம், கல்லூரிப்பருவம், நட்பு, காதல், பிரிவு என சகல அனுபவங்களையும் வெங்கட் பிரபுவிடம் பகிர்ந்து கொள்ளத் தொடங்குகிறார்…
சென்னை ’ஆனந்தம் காலனி’யில் வசிக்கும் நாயகன் ஆனந்த், நாயகி கண்ணம்மா (பவானிஸ்ரீ), இவர்களது நண்பர்களான ஆதி (ஆர்ஜே விஜய்), பாபு (இர்ஃபான்), ராஜேஷ் (வில்ஸ்பட்), பிரவீன் (தேவ்), கார்த்தி (கேபிஒய் பாலா), சைலா (மோனிகா), வித்யா (ஆர்ஜே ஆனந்தி), ஸ்ரீகாந்த் (சபரிஷ்) ஆகியோர் சிறுவயது முதல் – ஒரு நட்புக்குழுவாக – ஒன்றாக இருக்கிறார்கள். ஒன்றாகவே பள்ளியில் படிக்கிறார்கள். ஒன்றாகவே கல்லூரிப் படிப்பை முடிக்கிறார்கள்.
அடுத்து வேலைக்குச் செல்லும்போதும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அதற்காக ஆனந்த் முன்வைக்கும் ஐடியாவைக் கேட்டு, அனைவரும் சேர்ந்து, நவீன யுகத்துக்கு ஏற்றாற்போல் ‘ஈவண்ட் மேனேஜ்மெண்ட்’ நிறுவனம் ஒன்றை தொடங்குகிறார்கள். ஆனால், அந்த நிறுவனத்தின் வளர்ச்சி அவர்கள் எதிர்பார்த்தது போல் அமையாமல் போவதோடு, அதன் மூலமாக நண்பர்களுக்கு இடையே மோதலும், விரிசலும் ஏற்பட்டு பிரிந்தும் போய் விடுகிறார்கள்.
நண்பர்களைப் பிரிந்து, மனம் நொந்து, அப்பா (குமரவேல்) ஆலோசனைப்படி மேற்படிப்புக்காக சிங்கப்பூர் சென்றுவிடும் ஆனந்த், தனது ஐடியாவை வெற்றிகரமாக செயல்படுத்தி சாதிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுகிறார். அவரது முயற்சி வெற்றி பெற்றதா?, அவர் மீண்டும் தனது நண்பர்களுடன் சேர்ந்தாரா? சாதித்தாரா? என்பது தான் ’நண்பன் ஒருவன் வந்த பிறகு’ திரைப்படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் ஆனந்த், அவரது காதலியாக நடித்திருக்கும் பவானி ஸ்ரீ, இவர்களது நண்பர்களாக நடித்திருக்கும் ஆர்ஜே விஜய், இர்ஃபான், வில்ஸ்பட், தேவ், கேபிஒய் பாலா, மோனிகா, ஆர்ஜே ஆனந்தி, சபரிஷ் உள்ளிட்டோர் இயல்பாகவும், கலகலப்பாகவும், அவ்வப்போது எமோஷனலாகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் நாயகனுக்கு வில்லன் போல் லலித் என்ற கதாபாத்திரத்தில் வரும் குகன், பின்னர் நாயகனுக்கு மற்ற எவரையும் விட முக்கியமான உதவிகள் செய்து உயர்ந்து நிற்கிறார். இரண்டாம் பாதியில் அழகராக வரும் வினோத் ரகளையாக நடித்து ரசிக்க வைக்கிறார்.
நாயகனின் அப்பா ரவியாக நடித்திருக்கும் குமரவேல், அம்மா சுமதியாக நடித்திருக்கும் விஷாலினி, பாட்டியாக நடித்திருக்கும் குல்லபுலி லீலா ஆகியோர் தத்தமது கதாபாத்திரத்துக்கு தேவையான அனுபவம் வாய்ந்த நடிப்பை வழங்கியிருக்கிறார்கள்.
விமானத்தில் நாயகனின் சக பயணியாக வரும் இயக்குநர் வெங்கட் பிரபு, நாயகனின் ஆசிரியை மாயாவாக வரும் இப்படத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா.எம் ஆகியோர் சில காட்சிகளில் வந்தாலும் குறைவின்றி நிறைவாக நடித்திருக்கிறார்கள்.
ஏறக்குறைய ஆட்டோபயோகிராஃபி போல, சொந்த அனுவங்களிலிருந்து சம்பவங்களை எடுத்து கதையாக்கி, இக்கால இளைஞர்களுக்குப் பிடிக்கிற விதமாய் திரைக்கதை அமைத்து, போரடிக்காமல் விறுவிறுப்பாக படத்தை நகர்த்திச் சென்றுள்ளார் நாயகனாக நடித்திருக்கும் இயக்குநர் ஆனந்த். தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக வடிவமைத்திருப்பதைப் போல நண்பர்களின் கதாபாத்திரங்களையும் அதிக அக்கறையுடன் வடிவமைத்திருந்தால் படத்தை இன்னும் கூடுதலாக ரசித்திருக்கலாம்.
ஏஹெச்.காஷிஃப் இசையில் தனுஷ், யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் ஹிப்ஹாப் தமிழா என ஒரு நட்சத்திர பட்டாளத்தையே தலா ஒரு பாடல் பாட வைத்திருப்பது சிறப்பு. பின்னணி இசையில் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் வருகிற காட்சிகள் அருமை.
ஏலகிரி மலையழகையும், சிங்கப்பூர் நகர பிரமாண்ட்த்தையும் ஒளிப்பதிவாளர் தமிழ்ச்செல்வன் தன் காமிராவில் அள்ளி வந்து பார்வையாளர்களுக்கு காட்சிவிருந்து படைத்திருக்கிறார்.
‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ – இளைஞர்கள் பட்டாளத்தின் இளமைத் திருவிழா! நண்பர்களோடு போய் கண்டு, கொண்டாடி மகிழலாம்!