”நடிகர் நானா படேகர் மீதான பாலியல் புகாருக்கு ஆதாரம் இல்லை!” – காவல் துறை
கடந்த ஆண்டு ‘மீ டூ’ என்ற அடைமொழியுடன் பல பிரபலங்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் பகிரங்கப்படுத்தப்பட்டன. அந்த வரிசையில் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படத்தில் வில்லனாக நடித்த பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா கடந்த 2018ஆம் ஆண்டு பரபரப்பான பாலியல் புகார் அளித்தார். ‘ஹார்ன் ஓகே பிளஸ்’ என்ற திரைப்பட படப்பிடிப்பின் பாடல் காட்சியின்போது, நானா படேகர் தன்னை தொடக் கூடாத இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று அவர் மும்பை ஒசிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி மும்பை அந்தேரியில் உள்ள மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ‘பி ரிப்போர்ட்’ என்னும் அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். அதில் நானா படேகருக்கு எதிரான பாலியல் புகாருக்கு ஆதாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு எதிரான வழக்கைத் தொடர்ந்து நட்த்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல் துறையின் இந்த அறிக்கையை நானா படேகரின் வழக்கறிஞர் வரவேற்றுள்ளார். அதேநேரத்தில், இது காவல்துறையின் அலட்சியத்தைக் காட்டுவதாகவும், இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்வோம் என்றும் தனுஸ்ரீ தத்தாவின் வழக்கறிஞர் நிதின் சாத்புதே கூறியுள்ளார்.