‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ – விமர்சனம்

நடிப்பு: செந்தூர் பாண்டியன், பிரீத்தி கரண், சுரேஷ் மதியழகன், பூர்ணிமா ரவி, தமிழ்செல்வி மற்றும் பலர்

எழுத்து & இயக்கம்: பிரசாத் ராமர்

ஒளிப்பதிவு: உதய் தங்கவேல்

படத்தொகுப்பு: ராதாகிருஷ்ணன் தனபால்

இசை: பிரதீப் குமார்

தயாரிப்பு: ‘பூர்வா புரொடக்‌ஷன்ஸ்’ பிரதீப் குமார்

பத்திரிகை தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் ஏ நாசர்

“Sexual Hormones donot know Bible” என்று கிண்டலாகக் குறிப்பிடுவார் தத்துவ மேதை ஓஷோ. ஆம், பாலியல் ஹார்மோன்களுக்கு பைபிள் மட்டுமல்ல, எந்த மத நூல்களின் ஒழுக்க விதிகளும் தெரியாது. அவை சிறுவர் – சிறுமியர் உடம்பில் திடீரென அளவுக்கு அதிகமாக சுரந்து அவர்களை விடலைப் பருவம் அடையச் செய்யும்; விடலைப் பருவத்துக்குரிய கிளர்ச்சிகளைத் தூண்டிவிடும். அவற்றை அதன் போக்கில் விட்டால் தவறான நடத்தைக்குள் பிடித்துத் தள்ளும். அதே நேரத்தில் அவற்றை கட்டுப்படுத்தி நல்வழிப்படுத்தினால் உயர்ந்த லட்சியங்களுக்குள் உந்தித்தள்ளும். இத்தகைய முரண்பட்ட இருவேறு திசைகளில் பயணிக்கும் இருவர் பற்றிய, ‘Coming of Age’ ஜானர் கதை தான் ‘அடல்ட் கண்டெண்ட்’ கொண்ட இந்த “நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே” திரைப்படம்.

‘ஆண்கள் செக்ஸ் இன்பம் துய்ப்பதற்கான அழகு பொம்மைகள் தான் பெண்கள்’ என்று எண்ணுகிற ஒரு யுவன், ஒரு யுவதியை முதல்முறையாகச் சந்திக்க மதுரையிலிருந்து மயிலாடுதுறைக்கு கையில் ஆணுறைப் பாக்கெட் சகிதம் செல்கிறான். அங்கே அந்த ஒருநாள் சந்திப்பில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதே இப்படத்தின் ஒருவரிக் கதை.

0a1k

மதுரையைச் சேர்ந்த நாயகன் ரவிச்சந்திரன் (செந்தூர் பாண்டியன்) படித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் ‘பொம்பள பொறுக்கி’யாகச் சுற்றித் திரிகிறார். சொந்த காசில் சிகரெட் வாங்கக் கூட துப்பில்லாமல் நண்பனைச் சார்ந்திருக்கும் அவர், காதல் என்ற பெயரில் செல்போன் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் இளம்பெண்களை கரெக்ட் பண்ணுவது, கூட்டமில்லாத திரையரங்குக்கு அழைத்துச் சென்று இயன்ற மட்டும் பலான வேலை செய்வது என்றிருக்கிறார்.

இந்நிலையில், முகநூல் மூலம் நட்பான மயிலாடுதுறையைச் சேர்ந்த நாயகி அரசியை (ப்ரீத்தி கரண்) போனில் தொடர்புகொள்ளும் ரவிச்சந்திரன், அரசியின் பிறந்தநாளன்று மயிலாடுதுறைக்கு நேரில் சென்று அவருக்கு பிறந்தநாள் கிஃப்ட் கொடுக்க விரும்புவதாகச் சொல்ல, “சரி வா” என்கிறார் அரசி. “எங்கே வரணும்?” என்று கேட்க, “வீட்டுக்கு வா. அப்பா அம்மா இருக்க மாட்டாங்க. நான் மட்டும் தான் இருப்பேன்” என்று சொல்ல, ரவிச்சந்திரனின் இடுப்புக்குக் கீழே பட்டாம்பூச்சிகள் பறக்கின்றன.

மறுநாள் அதிகாலை. நண்பன் காந்தி (சுரேஷ் மதியழகன்) டூ வீலரில் வர, அதில் ரவிச்சந்திரன் ஏறிக்கொள்ள, பைக்கிலேயே இருவரும் மயிலாடுதுறை நோக்கிப் பயணிக்கிறார்கள். வழியில், ஞாபகமாக காந்தியை ஒரு மெடிக்கல் ஷாப்புக்கு அனுப்பி, ஆணுறை பாக்கெட் வாங்கி வர வைத்து, அதை பத்திரப்படுத்திக் கொள்கிறார் ரவிச்சந்திரன்.

மயிலாடுதுறை வந்ததும், “நீ இங்கே எங்காவது இரு. முடிச்சுட்டு கால் பண்றேன்” என்று காந்தியை கழற்றிவிட்டுவிட்டு, ரவிச்சந்திரன் பைக்கை எடுத்துக்கொண்டு அரசியின் வீட்டுக்கு வருகிறார். வீட்டில் அரசி மட்டும் தனியாக இருப்பார்; புகுந்து விளையாடலாம் என்ற நினைப்பில் காலிங் பெல்லை அழுத்தினால், கதவை அரசியின் பாட்டி திறக்க, அப்செட் ஆகிறார். அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், சிறிது நேரம் வீட்டில் இருந்துவிட்டு அரசியோடு வெளியே கிளம்புகிறார். “பெர்த் டே கிஃப்ட் எங்கே?” என்று அரசி கேட்க, “தர்றேன். ஏதாவது ஒரு படத்துக்குப் போகலாமா?” என்று அரசியை ஒரு திரையரங்கத்துக்கு அழைத்துச் செல்ல முயலுகிறார். “திரையரங்கம் வேண்டாம்; பூம்புகார் போகலாம்” என்று அரசி சஜஸ்ட் பண்ண, இருவரும் பைக்கிலேயே பூம்புகார் செல்கிறார்கள். வழியில் “நீ என்ன படிக்கிறே?” என்று ரவிச்சந்திரன் கேட்க, “சிவில் சர்வீஸ் எக்ஸாமுக்குப் படிக்கிறேன்” என்று அரசி சொல்ல, அது ரவிச்சந்திரனின் மரமண்டையில் ஏறவே இல்லை.

பூம்புகாரில் என்ன நடந்தது? ரவிச்சந்திரனின் ஆசை நிறைவேறியதா? சிவில் சர்வீஸ் எக்ஸாமுக்குப் படிக்கும் அரசி எப்படி நடந்துகொண்டார்? என்பன போன்ற கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக, அடல்ட் காமெடியாக விடை அளிக்கிறது “நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே” திரைப்படத்தின் மீதிக்கதை.

நாயகன் ரவிச்சந்திரனாக செந்தூர் பாண்டியன் நடித்திருக்கிறார். அறிமுக நடிகர் போல் இல்லாமல் அனுபவம் வாய்ந்த நடிகர் போல அசால்டாக, இயல்பாக நடித்திருக்கிறார். இன்றைய இளம் தலைமுறையினரில் ஒரு முதிர்ச்சியற்ற பிரிவினரை பிரதிநிதித்துவம் செய்திருக்கும் அவர், அவர்களை கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதில் வெற்றி பெற்றுள்ளார்.

நாயகி அரசியாக மாடல் துறையைச் சேர்ந்த ப்ரீத்தி கரண் நடித்திருக்கிறார். கேர்ள் நெக்ஸ்ட் டோர் போல எளிமையாகவும் அதே நேரத்தில் பாந்தமான அழகுடனும் இருக்கிறார். பெண்கள் எவ்வளவு புத்திசாலியாகவும், தைரியசாலியாகவும் இருக்க வேண்டும் என்று உணர்த்துவதற்காக வடிவமைக்கப்பட்ட அவரது கதாபாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்தி, அதற்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

நாயகனின் நண்பன் காந்தியாக சுரேஷ் மதியழகன் நடித்திருக்கிறார். நண்பனை திட்டிக்கொண்டே அவருக்கு வேண்டிய சகல உதவிகளும் செய்யும் கதாபாத்திரத்தில் சிரிக்க வைக்கிறார். ரசிக்கவும் வைக்கிறார்.

நாயகியின் தோழி சோபியா பானுவாக நடித்திருக்கும் பூர்ணிமா ரவி, அவரது தங்கை சஃபீனா பானுவாக நடித்திருக்கும் தமிழ்செல்வி ஆகியோர் படத்தில் சிறிது நேரமே வந்தாலும் கலகலப்பூட்டி கவனம் ஈர்க்கிறார்கள்.

இன்றைய இளம் தலைமுறையின் போக்கு எப்படி இருக்கிறது என்பதை அடல்ட் காமெடிப்படமாக எடுத்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர் பிரசாத் ராமர். துடைப்பக்கட்டைக்கு பட்டுக்குஞ்சம் என்பது போல இந்த அடல்ட் கண்டெண்ட் படத்துக்குத் தலைப்பு ‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’வாம்!

சின்ன பட்ஜெட் படம் என்பதற்காக, ஒரு மலிவான குறும்படத்துக்கான சுமாரான தொழில்நுட்பங்கள் கையாளப்பட்டிருப்பது படத்துக்கு பெரிய மைனஸ்!

‘நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே’ – 18 வயது பூர்த்தியான அனைவரும் தாராளமாகக் கண்டு களிக்கலாம்!