“டப்ஸ்மாஷ்” புகழ் மிருணாளினி ‘நகல்’ படத்தின் கதாநாயகி!
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2017/03/0a1-2.jpg)
இயக்குநர்கள் சசி, சுசீந்திரன் ஆகியோரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் எஸ்.குமார் இயக்கிவரும் திரைப்படம் ‘நகல்’. ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே மையமாகக்கொண்டு உருவாகிவரும் இந்த ‘நகல்’ படத்தை, ‘கரிஸ்மாட்டிக் கிரியேஷன்ஸ்’ சார்பில் தயாரிக்கிறார் மணிகண்டன் சிவதாஸ்.
‘நகல்’ படத்தின் கதாநாயகியாக நடிக்க தற்போது ‘டப்ஸ்மாஷ்’ புகழ் மிருணாளினி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
“எங்கள் ‘நகல்’ படத்தில் ஒரே ஒரு பெண் கதாபாத்திரம் மட்டும் தான். அதனால் எங்கள் படத்தின் கதாநாயகியை தேர்வு செய்யும் பணி எங்களுக்கு சற்று சவாலாகவே இருந்தது. தன்னுடைய பாவனைகளால் இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் தரக் கூடிய ஒரு நடிகை தான் எங்கள் படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு, நாங்கள் மிருணாளினியை தேர்வு செய்தோம்.
குறுகிய காலத்தில், தன்னுடைய டப்ஸ்மாஷ் காணொளிகளால், தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை சமூக வலைத்தளங்களில் உருவாக்கி இருக்கிறார் மிருணாளினி. நகல் படத்தின் கதையை கேட்ட அடுத்த கணமே அவர் நடிக்க ஒப்புக்கொண்டார். ஒரு பெண்ணின் அமானுஷ்ய அனுபவங்களை மையமாகக்கொண்டு தான் ‘நகல்’ படத்தின் கதை நகரும்” என்கிறார் இயக்குநர் சுரேஷ் எஸ்.குமார்.