நடுவன் – விமர்சனம்
நடிப்பு: பரத் / பரத் நிவாஸ், அபர்ணா வினோத், கோகுல் ஆனந்த், பேபி ஆரத்யாஸ்ரீ, அருவி பாலா, ஜார்ஜ் மரியான்
இயக்கம்: ஷாரங்
தயாரிப்பு: லக்கி சாஜர்
இசை: தரண்குமார்
ஒளிப்பதிவு: யுவா
’நடுவர்’ என்ற சொல்லுக்கு என்ன பொருளோ அதே பொருள்தான் ’நடுவன்’ என்ற சொல்லுக்கும். அதாவது, நடுநிலை தவறாமல் நீதி வழங்குபவன் என்பது பொருள். அதோடு எமன் என்ற சிறப்புப் பொருளும் இதற்கு உண்டு, இந்த இரு பொருள்களுக்கும் பொருந்துகிற விதமாக கதை இருப்பதால் இப்படத்துக்கு நடுவன் என பெயர் சூட்டியிருக்கிறார்கள்.
கொடைக்கானலில் வசித்து வருகிறார் நாயகன் கார்த்திக் (பரத் / பரத் நிவாஸ்). அவருடைய மனைவி மது (அபர்ணா வினோத்). இத்தம்பதியருக்கு கவி (பேபி ஆரத்யாஸ்ரீ) என்றொரு பெண்குழந்தை.
கார்த்திக் தன் நண்பன் ஷிவாவுடன் (கோகுல் ஆனந்துடன்) சேர்ந்து தேயிலைத் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். நண்பன் ஷிவா தொழிற்சாலை நிர்வாகத்தில் ஈடுபாடு காட்டாமல் முழுநேர குடிகாரராக இருப்பதால், கார்த்திக் தான் மொத்த நிர்வாகப் பணிகளையும் செய்து வருகிறார். ஆனால் ஷிவாவோ நண்பன் கார்த்திக்கிற்கு தெரியாமல் அவரது மனைவி மதுவுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு உல்லாசமாக இருந்துவருகிறார்.
இந்த கள்ளக்காதல் விவகாரம், கார்த்திக்கின் வீட்டில் தங்கி அவரது தொழிற்சாலையில் வேலை பார்க்கும் கார்த்திக்கின் உறவுக்கார இளைஞனான குருவுக்கு (அருவி பாலாவுக்கு) தெரிந்துவிடுகிறது. இதை அறிந்த ஷிவா குருவை பயங்கரமாக மிரட்டி வைக்கிறார். இதையடுத்து, குரு என்ன செய்கிறான்? அதனால் ஏற்படும் பிரச்னைகள், மோதல்கள் என்ன என்பதே மீதிப் படம்.
ஏற்கனவே முன்னணி நாயக நடிகராக இருக்கும் பரத், என்ன காரணத்தாலோ தன் பெயரை பரத் நிவாஸ் என மாற்ரிக்கொண்டு இப்படத்தில் நாயகன் கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆலை முதலாளிக்குரிய கம்பீரத்தையும், எதையும் எளிதில் நம்பிவிடும் அப்பாவித்தனத்தையும் சிறப்பாக நடித்துள்ளார். அவரது மனைவியாக வரும் அபர்ணா வினோத், வில்லனாக வரும் கோகுல் ஆனந்த் உள்ளிட்ட அனைவரும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
இரு நண்பர்கள், திருமணத்தைத் தாண்டிய ஒரு கள்ளஉறவு, ஒரு சிறிய திருட்டுக் கும்பல், ஒரு கொலை என ஒரு எளிமையான த்ரில்லர் கதை. அப்படியே எளிமையாக எடுத்திருந்தால் நன்றாகவும் வந்திருக்கக்கூடும். ஆனால், படத்தின் துவக்கத்தில் முகமூடி, மனிதனின் மறுபக்கம் என ஏதேதோ பேசப்படுவதாலும், இந்தப் படத்தை ஐந்து – ஆறாகப் பிரித்து பல்வேறு துணைத் தலைப்புகளோடு தொகுத்திருப்பதாலும் சுவாரஸ்யத்துக்குப் பதிலாக சோர்வுதான் அதிகரிக்கிறது திரைக்கதையில் உள்ள இந்த அபத்தங்களைத் தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாக ரசித்திருக்க முடியும்.
’நடுவன்’ – பார்க்கலாம்!