நாயாடி – விமர்சனம்

நடிப்பு: ஆதர்ஷ் மதிகாந்தம், காதம்பரி, ஃபப்பியன், நிவாஸ், அரவிந்த்சாமி, ரவிச்சந்திரன், கீதா லட்சுமி மற்றும் பலர்

இயக்கம்: ஆதர்ஷ் மதிகாந்தம்

ஒளிப்பதிவு: மோசஸ் டேனியல்

படத்தொகுப்பு: சி.எம்.இளங்கோவன்

இசை: அருண்

தயாரிப்பு: ஆதர்ஷ் மதிகாந்தம் பிக்சர்ஸ் & மாயா கிரியேஷன்ஸ்

பத்திரிகை தொடர்பு: நிகில் முருகன்

நாயாடி என்பது காட்டுக்குள் வசிக்கும் ஒரு பழங்குடிச் சமூகம். வேட்டையாடி பிழைக்கும் சமூகம். இந்த நாயாடிகளுக்கு காட்டு விலங்குகளாலும், ஊரில் வசிக்கும் மேல்சாதியினராலும் நிறைய ஆபத்துகள் ஏற்படுகின்றன. இந்த ஆபத்துகளிலிருந்து தங்களை தற்காத்துக்கொள்ள பில்லி சூனியம், மந்திர தந்திரங்கள், கூடுவிட்டு கூடு பாயும் வித்தை, நரபலிச் சடங்கு போன்றவற்றை கற்று சக்தி பெறுகின்றனர். என்றாலும் ஏராளமான நாயாடிகள் அழிக்கப்படுகிறார்கள்.

காட்டுக்குள் பதுங்கி வளரும் ஒரு நாயாடிப் பெண்ணை மன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டு அங்கேயே வசிக்கிறார். வீட்டுக்குள் மனிதர்களைப் பிடித்துவந்து நரபலி கொடுக்கிறார்கள். இதனால் பொங்கியெழும் ஊர்மக்கள் அவர்களை வீட்டோடு வைத்து எரித்துக் கொன்று விடுகிறார்கள்.

பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, தற்போதைய நாகரிக காலத்தில், காட்டில் நாயாடியை எரித்த இடத்தில் ரிசார்ட் கட்ட ஒருவர் திட்டமிடுகிறார். அந்த இடத்தில் நாயாடி தம்பதியரின் ஆவி உலவுவதாக சொல்லப்படுவதால், அது உண்மையா என்று கண்டுபிடிப்பதற்காக, நகரத்தில் யூடியூப் நடத்தும் நாயகன் ஆதர்ஷ் (ஆதர்ஷ் மதிகாந்தம்), நாயகி மித்ரா (காதம்பரி) மற்றும் ஃபப்பி (ஃபப்பியன்), நிவாஸ் (நிவாஸ் எஸ்.சரவணன்), அரவிந்த் (அரவிந்த் சாமி) உள்ளிட்ட ஐவர் குழுவை அணுகுகிறார்.

அவர்களும் பணத்துக்கு ஆசைப்பட்டு, அந்த இடத்தை வீடியோ எடுப்பதற்காக காட்டுக்குள் செல்கிறார்கள். அவர்களை முழுநீள கருப்பு உடை அணிந்த உருவம் ஒன்று பின்தொடர்கிறது. அந்த அமானுஷ்ய உருவம் அவர்களை ஒவ்வொருவராக கொலை செய்கிறது.

அமானுஷ்யத்திடம் இருந்து யாரெல்லாம் தப்பித்தார்கள்? எப்படி தப்பித்தார்கள்? என்பது ‘நாயாடி’ படத்தின் நெஞ்சை உறைய வைக்கும் மீதிக்கதை.

0a1a

நாயகன் ஆதர்ஷாக நடித்திருக்கும் ஆதர்ஷ் மதிகாந்தம், கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அறிமுக நடிகர் போல் இல்லாமல் அனுபவ நடிகர் போல் நேர்த்தியான நடிப்பை வழங்கியிருக்கிறார்.

நாயகி மித்ராவாக நடித்திருக்கும் காதம்பரி, கொடுத்த வேலையை நிறைவாக செய்திருப்பதோடு, இறுதிக்காட்சியில் எதிர்பாராத விதத்தில் மிரட்டவும் செய்திருக்கிறார்.

ஃபப்பியன், நிவாஸ் எஸ்.சரவணன், அரவிந்த் சாமி, ரவிச்சந்திரன், கீதா லட்சுமி உள்ளிட்ட ஏனையோரும் புதுமுகங்கள் என்ற போதிலும் தத்தமது கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பைக் கொடுத்து நியாயம் செய்திருக்கிறார்கள்.

நாயகனாக நடித்திருக்கும் ஆதர்ஷ் மதிகாந்தமே, இப்படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் பின்னணிக் குரல் மூலம் சொல்லப்படும் நாயாடி சமூகத்தின் வரலாற்றுக் கதை சுவாரஸ்யமாக இருக்கிறது. அதை கருவாக வைத்து இயக்குனர் அமைத்திருக்கும் திரைக்கதையிலும், காட்சிகளிலும் அதே அளவு சுவாரஸ்யத்துக்காக மெனக்கெட்டிருந்தால், படத்தை பிரமாதமாக ரசித்திருக்கலாம். என்றாலும், அமானுஷ்ய உருவம் கொலை செய்வது, திடீரென தீ பற்றுவது, காட்டிலிருந்து வெளியேறுபவர்கள் புறப்பட்ட இடத்திலேயே வந்து நிற்பது, எதிர்பாராத கிளைமாக்ஸ் ஆகியவற்றின் மூலம் படத்துக்கு விறுவிறுப்பைக் கூட்டியுள்ளார் இயக்குனர்.

மோசஸ் டேனியலின் கேமரா வனப்பகுதியில் சுழன்று கதையோடு பயணித்திருக்கிறது. அருணின் பின்னணி இசை படத்துக்கு பலம்.

‘நாயாடி’ – சஸ்பென்ஸ் மற்றும் திகிலுக்காக ஒருமுறை பார்க்கலாம்!

.