நானும் ரௌடி தான் – விமர்சனம்

வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கைதேர்ந்தவர் என்ற பெயரை பெற்றுள்ள விஜய் சேதுபதியும், அழகில் சிறந்த நம்பர் ஒன் நாயகி என்ற பெயரை தொடர்ந்து தக்க வைத்துவரும்  நயன்தாராவும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள படம், அடுத்தடுத்து வெற்றிப்படங்களை தயாரித்து வழங்கும் நடிகர் தனுஷ், தனது உண்டர்பார் நிறுவனத்தின் மூலம் தயாரித்திருக்கும் படம், நிஜ வாழ்க்கையில் நயன்தாராவின் காதலர் என்று ஏகத்துக்கும் கிசுகிசுக்கப்படும் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இரண்டாவது படம் போன்ற காரணங்களால் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வெளிவந்திருக்கிறது  ‘நானும் ரௌடிதான்’.

பாண்டிச்சேரியில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருக்கிறார் ராதிகா சரத்குமார். தன் மகன் விஜய் சேதுபதியும் தன்னைப் போலவே போலீசாக வேண்டும் என்று அவர் விரும்புகிறார். ஆனால், விஜய் சேதுபதியோ, போலீஸைவிட ரௌடிதான் கெத்து என்ற எண்ணத்தில் போலி ரௌடியாக உதார் காட்டிக்கொண்டு ஊர் சுற்றித் திரிகிறார். நயன்தாராவைப் பார்த்ததும், அவரது அழகில் மனதை பறி கொடுக்கிறார். காதலுடன் அவரை பின்தொடருகிறார்.

தன் அப்பா, அம்மாவின் கொடூர மரணத்துக்கும், தனது செவிகளின் கேட்கும் திறன் பறிபோனதற்கும் காரணமான வில்லனைப் பழி வாங்க நினைக்கும் நயன்தாரா, இதற்கு உதவக்கூடிய ஒரு ரௌடி தனக்கு வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார். இதை தெரிந்துகொள்ளும் விஜய் சேதுபதி, நயனை இம்ப்ரஸ் பண்ணுவதற்காக, “நானும் ரௌடி தான்” என்று பீலா விடுகிறார்.

நயன்தாரா இந்த போலி ரௌடியுடன் சேர்ந்து வில்லனை பழிவாங்கினாரா, இல்லையா? தன் மகனை போலீஸ் ஆக்க வேண்டும் என்ற ராதிகாவின் ஆசை நிறைவேறியதா, இல்லையா? நயன்தாரா மீது விஜய் சேதுபதி கொண்ட காதல் கைகூடியதா, இல்லையா? என்பது மீதிக்கதை.

விஜய்சேதுபதி அசத்தியிருக்கிறார். அசத்தலான பாய்ச்சலுடன் மீண்டும் ஃபார்முக்கு வந்திருக்கிறார் நடிப்பில் புதிய உயரம் தொட்டிருக்கிறார். துறுதுறு இளைஞனாக படம் முழுக்க வலம் வந்திருக்கிறார். அளவான வசனங்கள், அழகான மேக்கப் என பட்டையை கிளப்பியிருக்கிறார். இதுவரை கிராமத்து இளைஞன், லோக்கல் பையன் என பார்த்த இவரை, இதில் கொஞ்சம் மாடர்னாக பார்க்கும்போது, ரொம்பவும் அழகாகவே தெரிகிறார். அதேபோல், வசனங்கள் உச்சரிப்பிலும் தனது திறமையை நிரூபித்திருக்கிறார். “மை நேம் இஸ் பாண்டி பாண்டி” என நயன்தாராவிடம் அறிமுகம் செய்துகொள்வது, நயன்தாரா இவரை கண்டுகொள்ளாமல் போனதும் “ப்ப்ப்பா…” சொல்வது, நயனை “தங்கச்சி” என கூப்பிடுமாறு அம்மா சொல்லும்போது, “தங்கமே” என சொல்லிச் சமாளிப்பது, நயன்தாராவின் கதைப்பெயரான ‘காதம்பரி’யை சுருக்கி “காதுமா…காதுமா…” என்று கொஞ்சுவது, வில்லனை அடித்து தூள் பண்ணிவிடுவதாக வெற்று சவடால் விடுவது, காதலில் கிறங்குவது, ரௌடியாக காட்டிக்கொள்ள பகீரத முயற்சிகளில் இறங்குவது என ஒவ்வொரு ஃபிரேமிலும் நடிப்பில் பிச்சு உதறியிருக்கிறார்..

நயனதாரா நடிப்பில் ஜொலிக்கிறார். அவரது அழகில் மெருகு கூடியிருக்கிறது. அவருக்கு அழுத்தமான கதாபாத்திரம். கிடைத்த அரிய வாய்ப்பை சரியாக பயன்படுத்தி பிரமாதமாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காது கேளாத காதம்பரியாக படம் முழுக்க வாழ்ந்திருக்கிறார். தனிமையில் தவிப்பது, இழப்பின் வலியை அனுபவிப்பது, அழுகையில் கரைவது என உணர்வுபூர்வமான நடிப்பில் மனதில் நிறைகிறார். உடல் மொழியிலும், குரல் மொழியிலும் கதாபாத்திரமாகவே மாறி இருக்கிறார். பிற்காலத்தில் நயன்தாரா தனது சிறந்த படங்களை நினைவு கூர்ந்தால், அந்த பட்டியலில் நிச்சயம் இந்த படத்தின் பெயரும் இருக்கும் என உறுதியாக கூறலாம்.

விஜய் சேதுபதியின் நண்பராக வரும் ஆர்.ஜே. பாலாஜி காமெடி வசனங்களில் வெளுத்துக்கட்டி கைதட்டல்களை அள்ளுகிறார். விஜய் சேதுபதி ரௌடியாக மாற பயிற்சி கொடுக்கும் நான் கடவுள் ராஜேந்திரன் வரும் காட்சிகள் எல்லாம்  செம கலகலப்பு.

கிள்ளிவளவன் என்ற மெயின் வில்லனாக வரும் பார்த்திபன் நகைச்சுவையாகவும், ஆக்ரோஷமாகவும் தூள் கிளப்பி ‘புதிய பாதை’ அமைத்திருக்கிறார். ராதிகா, அழகம்பெருமாள், ஆனந்தராஜ், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் தத்தமது கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி அளவாய் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

‘போடா போடி’ படத்துக்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் படம். சரியான கதாபாத்திரங்கள், அளவான வசனங்கள் என அனைத்தையும் சரியாக செய்திருக்கிறார். காதல், காமெடி, செண்டிமெண்ட் ஆகியவற்றை படம் முழுக்க நிரவிவிட்டு, ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் காட்சிகளை அமைத்தது சிறப்பு. இப்படத்தின் மூலம் மிகச் சிறந்த பொழுது போக்கு இயக்குனர் என்று பெயர் பெறுகிறார் விக்னேஷ் சிவன்.

அனிருத் அதிரடி இசையுடனும் அழகிய மெலோடிகளுடனும் அசத்துகிறார். பின்னணி இசையில் பின்னி எடுத்திருக்கிறார் ஜார்ஜ் சி வில்லியம்சின் ஒளிப்பதிவு படத்திற்கு மற்றொரு பலம்.. இவருடைய கேமரா கண்கள் காட்சிகளை மிகவும் துல்லியமாகவும், அழகாகவும் படம்பிடித்து காட்டியிருக்கிறது

தயாரிப்பாளராக தனுஷ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இந்த ஆண்டின் வெற்றிப்படங்களில் ‘நானும் ரௌடி தான்’ படமும் ஒன்று என்பது உறுதி.

‘நானும் ரௌடிதான்’ – வெற்றிகரமான காமெடி சரவெடி!.