”தைரியமாக இருங்கள்; உண்மை பேசுங்கள்”: இளம் இயக்குநர்களுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் அறிவுரை
இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தனது 79 -வது வயதில் 71-வது படைப்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் ‘நான் கடவுள் இல்லை’ இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.
விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்ற இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மேலும் பேசும்போது, “இங்கே வந்திருக்கும் விஜய் ஆண்டனி அவர்களுக்கு நன்றி .இப்போது அவருக்கு 103 டிகிரி காய்ச்சல் அடிக்கும்போதும் இங்கு வந்திருக்கிறார். அவர் ஒரு இசையமைப்பாளராகவும், நடிகராகவும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் வெற்றி பெற்றவர். கடுமையான உழைப்பாளி. எப்போதும் அவர் பேசும்போது பாசிட்டிவான வார்த்தைகளைப் பேசுபவர். முடியும் என்கிற நம்பிக்கை கொண்டவர். அவர் இங்கே வந்திருப்பது அந்த நம்பிக்கையே இங்கு வந்திருப்பதாக நினைக்கிறேன்.
எப்போதும் ‘எப்படி இருக்கிறீர்கள்’ என்று கேட்டால் “சூப்பர் சார்”என்பார். அவரது படம் நாளை வெளியாக இருக்கிறது. அந்த பரபரப்பான நிலையில் இங்கே வந்திருக்கிறார். இதைப் பார்க்கும்போது எனக்கு ஒரு பழைய ஞாபகம் வருகிறது. நான் காமன்கோட்டையில் எட்டாம் வகுப்பு படித்தபோது தேர்வு எழுதுவதற்கு திருப்பாச்சி செல்ல வேண்டும். அங்குள்ள எங்கள் உறவினர் வீட்டில் தங்கி தேர்வு எழுதினேன். நாளை கணக்கு பாடத் தேர்வு எழுத வேண்டும். ஆனால் இன்று இரவு நான் எம்.ஜி.ஆர் படத்துக்குப் போய்விட்டு வந்து நன்றாக தூங்கினேன். மறுநாள் தேர்வு எழுதினேன். எனக்கு நூற்றுக்கு நூறு மதிப்பெண் கிடைத்தது. சொன்னால் நம்ப மாட்டீர்கள். அந்த சான்றிதழ் உள்ளது. எப்படி என்னால் முடிந்தது? என் ஆசிரியர் அறிவுரை கூறுவார். “வருடம் பூராவும் ஒழுங்காகப் படித்தால் போதும். தேர்வுக்கு என்று படிக்க வேண்டாம்” என்பார். அப்படித்தான் எப்போதும் உழைத்துக்கொண்டிருக்கும் விஜய் ஆண்டனிக்கு அதற்கான கூலியைக் கடவுள் கொடுப்பார். இனி ரிலாக்ஸ் ஆக இருக்கலாம். உழைப்பில் அவ்வளவு பெரிய முதலீடு செய்துள்ளார்.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனியைப் பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். அவர் ஒரு இயக்குநராக, நடிகராக மட்டுமல்ல, ஒரு மனிதராகவும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டார். அவரிடம் இந்தக் கதையை சொல்லி நான் விவரித்தபோது, ”அதெல்லாம் விரிவாக பேச வேண்டாம். நான் உங்கள் படத்தில் இருக்கிறேன்” என்று சொன்னார். அதுவே எனக்குப் பெருமையாக இருந்தது.
படப்பிடிப்பில் இன்னொரு டேக் என்று நான் சொல்வதற்கு முன்பாக அவர் தயாராக இருப்பார். நான் அவரிடம் கேட்பதற்கு யோசனையாக இருக்கும்போதே ,உடனே அடுத்த டேக் போகலாமா என்று மீண்டும் நடிக்க வேண்டுமா என்று கேட்டு நடித்துக்கொடுத்தார். உங்கள் விருப்பப்படி பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சர்வ சுதந்திரம் கொடுத்தார். ஓர் இயக்குநருக்கு அதைவிட வேறென்ன வேண்டும்’? நான் இத்தனை படங்கள் எடுத்து இருந்தாலும், எண்ணிக்கை முக்கியமல்ல. அவரது படங்கள் சிறப்பானவை. அவரை எப்படி வேலை வாங்குவது என்று ஆரம்பத்தில் பயந்தேன். ஆனால் அவர் இயக்குநரின் நடிகர் ஆகிவிட்டார்.
பருத்திவீரன் சரவணனிடம் இந்தப் படத்தின் பாத்திரத்தைப் பற்றி விவரித்தபோது அவர் பயந்தார். என்னால் முடியாது என்று மறுத்துவிட்டார். அவர் ஏற்கவில்லை. பொதுவாக எல்லா படங்களிலும் கதாநாயகனைத் தான் சக்தி மிக்கவர்களாகக் காட்டுவார்கள். ஆனால் இந்தப்படத்தில் வில்லனை சக்தி மிக்கவனாகக் காட்டுகிறேன். அந்தப் பாத்திரத்தைப் பற்றி புரிந்துகொண்டதும் பிறகு ஒருவழியாக ஒப்புக்கொண்டார். டப்பிங் பேசிவிட்டு ‘என்னைப் பார்க்க எனக்கே பயமாக இருக்கிறது” என்றார்.
கதாநாயகிகளுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நடித்து விடுவதோடு சரி. டப்பிங் பேசவோ, ப்ரமோஷன் செய்யவோ வர மாட்டார்கள். அதுதான் அவர்களது போக்காக இருக்கிறது. ஆனால் என்னுடைய கதாநாயகிகள் இனியாவும் சரி, சாக்ஷி அகர்வாலும் சரி, அப்படிப்பட்டவர்கள் அல்ல. நன்றாக நடித்து ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இந்தப்படத்தின் விழா என்று சொன்னதும் ‘அடுத்த படத்தின் படப்பிடிப்பை இங்கேயே தொடங்கி விடலாமா?’ என்று சாக்ஷி அகர்வால் கேட்டார். அப்படிப்பட்டவர்கள்தான் என் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
இங்கே தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ இருக்கிறார். அவர் எனது உறவினர் என்பதால் வரவில்லை ஒரு தயாரிப்பாளராக இங்கே இருக்கிறார். 1993 -ல் விஜய் படத்திற்கு பைனான்ஸ் செய்தார்கள். அவர்கள் நினைவாக அவர்கள் பெயரிலேயே பி.வி கம்பைன்ஸ் சார்பில் அந்த படம் தயாரிக்கப்பட்டது. பிறகு சேவியர் பிரிட்டோ ‘மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளரானார். அந்தப் படத்தை பெரிய அளவில் உயர்த்தினார்.
இங்கே வந்துள்ள கலைப்புலி தாணுவிடம் எப்போது பேசினாலும் “எங்கே வர வேண்டும்? எப்போது வர வேண்டும்?” என்று கேட்பார். ‘துப்பாக்கி’ படத்தை முதலில் நாங்கள் தொடங்கினோம். தவிர்க்க இயலாத காரணங்களால் தொடர முடியாமல் அவரை தயாரிக்கச் சொன்னேன். அந்தப் படத்தை பெரிய அளவில் வணிகம் செய்து பெரிய படமாக அவர் தயாரித்தார். .அதற்குப்பிறகு விஜய்யின் வணிக மதிப்பு பெரிய அளவில் மாறியது.
இங்கே வந்திருக்கும் இயக்குநர் ராஜேஷ், பொன்ராம் என் பள்ளி மாணவர்கள் என்று நான் சொல்வதில் மகிழ்ச்சி. என்னிடம் உதவியாளர்களாக வருபவர்கள் தங்களுக்கு திறமை இல்லை என்று சொல்வார்கள். நேரத்தை மதித்து நடந்து கொள்ளுங்கள். நான் உங்களை திறமைசாலியாக உருவாக்கிக் காட்டுகிறேன் என்று நான் சொல்வேன்.
‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘சாட்சி’, ‘நான் சிகப்பு மனிதன்’, ‘நீதிக்கு தண்டனை’ போன்று எனக்கென்று ஒரு வகையான பாணியில் படங்கள் எடுத்து வந்தேன். ஒரு குடும்பம் ,சென்டிமெண்ட், கிரைம், திரில்லர் இப்படித்தான் படம் எடுத்துக் கொண்டிருந்தேன். அதில் சட்டம் எப்படி புகுந்து விளையாடுகிறது என்கிற வகையில் படம் எடுப்பேன்.’ சட்டம் சந்திரசேகர்’ என்ற பெயரே எனக்கு இருந்தது .என் மகன் நடிக்க ஆசைப்பட்டதால் 1992-ல் என் பாணியை மாற்றிக் கொண்டேன்.
‘ரசிகன்’,’ விஷ்ணு’ போன்ற படங்களை இளைஞர்களுக்காக எடுத்தேன். இப்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய பழைய பாணியில் சோஷியல் த்ரில்லரை சமூக அக்கறை கொண்ட படமாக எடுத்திருக்கிறேன். எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் நான் மீண்டும் பிறந்து வருவேன் என்று கீதையில் சொல்லப்பட்டுள்ளது. அதே கருவை மையமாக வைத்து ‘நான் சிகப்பு மனிதன்’ எடுத்தேன். பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படமும் அப்படி ஒரு கருவை வைத்து உருவாகியிருக்கிறது. நிச்சயம் இந்தப் படத்தில் ஒரு புது விஷயம் சொல்லி இருக்கிறேன். இதுவரை தமிழில் வராத விஷயத்தை நான் சொல்லியிருக்கிறேன். சமூகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை, தீயவர்களால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதுகிறது. அது கேட்கப்படுகிறதா, இல்லையா என்பதுதான் கதை.
அமெரிக்காவில் கூட ஒரு சிறுவன் கடவுளுக்கு கடிதம் எழுதி வெள்ளை மாளிகையில் இருந்து உதவி வந்ததாக சமீபத்தில் வாட்ஸ்-அப்பில் படித்தேன். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
இந்தப் படம் போன லாக்டவுன் கொரோனா காலத்தில் தொடங்கப்பட்டது. அதாவது போன ஆண்டு மே மாதம் முதல் ஐந்து மாதங்கள் நான் சேவியர் பிரிட்டோவின் ரிசார்ட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு தங்கியிருந்தேன். அப்போது என்ன செய்வது? என்னால் உழைக்காமல் இருக்க முடியாது. அப்போது தனி ஒருவனாக என்னால் உருவாக்கப்பட்டது தான் இக்கதை. செப்டம்பரில் படப்பிடிப்பை தொடங்கி முடித்துவிட்டோம்.
இங்கே இயக்குநர்கள் இருக்கிறார்கள். எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். எப்போதும் நல்லதைச் சொல்ல வேண்டும். தவறுகளைச் சுட்டிக் காட்ட வேண்டும். உண்மைகளைப் பேச வேண்டும், அதனால் பாதிப்பு வந்தாலும் பரவாயில்லை. தயங்கக் கூடாது. நான் எல்லா இயக்குநர்களுக்கும் சொல்கிறேன், தைரியமாக உண்மையைப் பேசுங்கள். தைரியமாகக் கருத்துகளைச் சொல்லுங்கள். .எல்லா இயக்குநர்களும் தைரியமாக இருக்க வேண்டும். சமூக சிந்தனையுடன் இருக்க வேண்டும். சமூக நோக்கத்துடன் படம் எடுக்க வேண்டும்.
எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் மனிதராக இருக்க வேண்டும். சமுத்திரக்கனி ஒரு நல்ல மனிதராக இருப்பவர். என்னைப் போலவே சமூகக் கோபம் கொண்டவர். மனிதநேயம் மிக்கவர், பணமெல்லாம் அதற்குப்பிறகுதான் என்று இருப்பவர். இப்படத்தின் மூலம் நல்ல மனிதர்களுடன் பயணம் செய்த உணர்வு எனக்கு உள்ளது.
இரண்டு நாட்களுக்கு முன்பு நான் ஒரு பட விழாவில் பேசினேன், விஜய்க்கு எப்படிப் பெயர் வைத்தேன் என்று. விஜய் என்றால் வெற்றி என்ற அடையாளத்தில் வைத்தேன் என்று கூறி இருக்கிறேன். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு ஊடகங்களில் யாரோ சிலர் உட்கார்ந்துகொண்டு, விஜயின் தாத்தா வாகினி ஸ்டுடியோவில் வேலை பார்த்தாராம். பேரனைத் தூக்கிக்கொண்டு போய் பெயர் வைக்கக் கேட்டாராம். நாகிரெட்டி தான் விஜய் என்று பெயர் வைத்தாராம் என்று ஒரு கதை விடுகிறார்கள். மீடியாக்காரர்கள் உண்மையைச் சொல்லுங்கள். பொய் சொல்லாதீர்கள். தவறுகளைத் தைரியமாகச் சுட்டிக்காட்டுங்கள். அதற்காக தேவையில்லாத தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசாதீர்கள்.
உடனே அப்பா பிள்ளை சண்டை என்கிறார்கள். ஆமாம் எங்களுக்குள் சண்டைதான். இது எல்லா குடும்பத்திலும் நடப்பது தான். குடும்பத்தில் அப்பா பிள்ளைகள் சண்டை போட்டுக்கொள்வார்கள். பிறகு கட்டி அணைத்துக்கொள்வார்கள். இது சகஜமானதுதான்.
விஜய் ரகசியம் என்று ஏதேதோ சொல்கிறார்கள். விஜய் பற்றி ஏதாவது சொல்லித் தங்களுக்குப் பார்வையாளர்களை அதிகப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதைப் பார்க்கும்போது விஜய் பெயரைச் சொன்னால் பார்வையாளர்கள் கூடும் அளவிற்கு விஜய் வளர்ந்திருக்கிறார் என்று அதை நினைத்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது நல்ல மேடை. நல்லதைச் சொல்வோம். அன்பை விதைப்போம். .அன்பை அறுவடை செய்வோம்.” இவ்வாறு இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேசினார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட விஜய் ஆண்டனி பேசும்போது, “நான் சில ஆண்டுகளுக்கு முன்பு சமுத்திரக்கனி சாரிடம் பேசியபோது நாம் யாருக்காகவும் நம்மை மாற்றிக் கொள்ளக் கூடாது. நாம் நாமாக இருக்க வேண்டும் என்று கூறினார். அதை என்னால் மறக்க முடியாது. எஸ்.ஏ.சி. சார் 79 வயதில் 71 படங்கள் முடித்திருப்பது நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. எப்படி இதைச் செய்தார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.
சினிமாவில் நடிகர்கள் நடிக்கலாம். பல படங்களில் ஒரே நேரத்தில் நடிக்கலாம். ஆனால் இயக்குவது என்பது பெரிய வேலை. 24 டிபார்ட்மெண்ட்களையும் கட்டி மேய்க்க வேண்டிய ஒரு வேலை. அதனால் இதை எப்படிச் செய்தார் என்று என்று ஆச்சரியமாக இருக்கிறது. அவர் எப்போதும் நேரத்தைச் சரியாகப் பார்ப்பவர். காலையில் எழுவதும் சீக்கிரம் படுக்கப் போவதும் அவர் வழக்கம். அதனால்தான் இந்த வயதிலும் அவர் இளைஞராகத் தெரிகிறார்” என்று கூறி படக்குழுவினரை வாழ்த்தினார்.
இயக்குநர் நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, “இந்தப் படம் பற்றிய அனுபவம் பெரிய மறக்க முடியாத பயணமாக எனக்கு இருந்தது. முதலில் இயக்குநர் எஸ்.ஏ.சி சார் என்னுடன் பேச வேண்டும் என்று நண்பர் கூறியபோது, கொரோனா காலத்தில் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டியதுதானே என்று நான் நினைத்தேன் .ஆனால் அவர் உங்கள் அலுவலகம் எங்கே இருக்கிறது என்றார். சொன்னால், அங்கேதான் வந்து கொண்டிருக்கிறேன் என்றார். அவ்வளவு சுறுசுறுப்பானவர். அடுத்த பத்து நிமிடத்தில் வந்து சேர்ந்துவிட்டார். அவரைப் பார்க்கும்போது கண்டிப்பாக நேரம் தவறாமையைக் கடைபிடிக்கும் குணம் தெரிந்தது. அதைப் பார்க்கும்போது என் குருநாதர் பாலச்சந்தர் சார் நினைவில் வந்தார் .
பெரிதாகச் சாதித்தவர்கள் அனைவரும் நேரத்தை மதித்தவர்களாக இருந்திருப்பார்கள். என் குருநாதர் என்னிடம் சொல்வார், எங்கே போனாலும் பத்து நிமிடம் முன்பாகப் போய்ச் சேர். அது உன் வாழ்க்கையை மாற்றும் என்பார். எஸ்.ஏ.சி. சாரிடம் என் குருநாதரைப் பார்க்கிறேன். இந்தப் படப்பிடிப்பு காலை 7 மணி முதல் நள்ளிரவு 12.30 மணிவரை கூட நடந்திருக்கிறது .ஆனால் அவர் எப்போதும் சோர்வில்லாமல் உழைத்துக்கொண்டே இருப்பார். நான் காலையில் 7 மணிக்குச் செல்லும்போது அதற்கு முன்பே யாரையாவது வைத்து சில காட்சிகளை எடுத்து முடித்திருப்பார். அவரது இயக்கத்தில் மீண்டும் நடிப்பதற்கு அவர் எப்போது அழைத்தாலும் நான் வருவதற்குத் தயாராக இருக்கிறேன்” என்றார்.
முன்னதாக டீஸரை இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி வெளியிட, படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். ட்ரெய்லரை தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ வெளியிட, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பெற்றுக்கொண்டார்.
இவ்விழாவில் இயக்குநர்கள் எம்.ராஜேஷ், பொன்ராம், நடிகைகள் இனியா, சாக்ஷி அகர்வால், குழந்தை நட்சத்திரம் டயானா, நடிகர்கள் அபி சரவணன், யுவன் மயில்சாமி, தயாரிப்பாளர் விமலா பிரிட்டோ, இசையமைப்பாளர் சித்தார்த் விபின், ஒளிப்பதிவாளர் மகேஷ் கே.தேவ், படத்தொகுப்பாளர் பிரபாகர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.