நான் கடவுள் இல்லை – விமர்சனம்
நடிப்பு: சமுத்திரக்கனி, இனியா, சரவணன், சாக்ஷி அகர்வால், எஸ்.ஏ.சந்திரசேகரன், யுவன் மயில்சாமி மற்றும் பலர்
இயக்கம்: எஸ்.ஏ.சந்திரசேகர்
ஒளிப்பதிவு: மகேஷ் கே.தேவ்
இசை: சித்தார்த் விபின்
பத்திரிகை தொடர்பு: சக்தி சரவணன்
அதிபயங்கர ரவுடியான வீச்சருவாள் வீரப்பன் (சரவணன்), அவர் செய்த கொலைக்குற்றங்களுக்காக, அவரைப் பிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தி, தண்டனை வாங்கிக் கொடுத்து, சிறையில் அடைக்கிறார் போலீஸ் அதிகாரியான சமுத்திரக்கனி. இதனால் கடுப்பாகும் வீச்சருவாள் வீரப்பன், தான் சிறையிலடைக்கப்படக் காரணமான போலீஸ் அதிகாரி சமுத்திரக்கனி, வழக்கறிஞர், நீதிபதி ஆகியோரை பழி தீர்க்க வேண்டும் என்ற வெறியுடன் சிறையிலிருந்து தப்பிக்கிறார். வழக்கறிஞர், நீதிபதி ஆகியோரை அவர்களது குடும்பத்தினரோடு சேர்த்து கொலை செய்கிறார். அடுத்து சமுத்திரக்கனிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஸ்கெட்ச் போடுகிறார். முதலில் சமுத்திரக்கனியின் விடலைப்பருவ மகளைக் கடத்தி, நிர்வாணப்படுத்தி, வீட்டுக்கு விரட்டியடிக்கிறார். வீரப்பனைப் பிடித்து மீண்டும் சிறையில் அடைக்க சமுத்திரக்கனி போராடுகிறார். இந்த போராட்டத்தில் சமுத்திரக்கனி வெற்றி பெற்றாரா? அல்லது அவரை வீரப்பன் பழி தீர்த்தாரா? என்பது ‘நான் கடவுள் இல்லை’ படத்தின் மீதிக்கதை.
போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் சமுத்திரக்கனி. தன்மனைவியையும், மகளையும் காப்பாற்ற முயற்சிப்பது, வில்லன் வீரப்பனைப் பிடிக்க துடிப்புடன் இயங்குவது என்று நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
சமுத்திரக்கனியின் மனைவியாக வரும் இனியா, குடும்ப பெண்ணாக மனதில் பதிகிறார்.
சமுத்திரகனியின் தாயாக வருபவர் மிரட்டலான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
சமுத்திரக்கனிக்கு உதவியாளராக வரும் சாக்ஷி அகர்வால் கவர்ச்சியிலும், ஆக்ஷனிலும் கலக்கி இருக்கிறார்.
வில்லன் வீரப்பனாக நடித்திருக்கும் சரவணன், மிகக் கொடூரமானவராகத் தோன்றி ரசித்து நடித்திருக்கிறார்.
தன்னுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியது மட்டுமில்லாமல் இப்படத்தை இயக்கியும் இருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். உதவி தேவைப்படும்போது உதவுபவர்களே உண்மையான கடவுள் என்பதை சொல்லியிருக்கிறார். நல்ல போலீஸ்காரர்களுக்கு ஏற்ற படமாக உருவாக்கியதற்கு பெரிய பாராட்டுக்கள். விஜய்யின் போஸ்டர்கள், விஜய் பேசிய வசனங்கள் படத்தில் ஆங்காங்கே வருவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்துகிறது.
சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
மகேஷ் கே தேவ்-வின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
’நான் கடவுள் இல்லை’ – விறுவிறுப்பு.