தீக்குளித்து உயிர் நீத்த விக்னேஷ் உடலுக்கு பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி!

நாம் தமிழர் கட்சி சார்பில் காவிரி உரிமை மீட்புப் பேரணி சென்னையில் வியாழனன்று நடைபெற்றது. அதில் இயக்குனர்கள் சீமான், அமீர், சேரன் உட்பட பெரும் திரளானோர் கலந்து கொண்டனர். இந்த பேரணியின்போது, நாம் தமிழர் கட்சியின் திருவாரூர் மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் பா.விக்னேஷ் திடீரென தன் மீது நெருப்பு வைத்து தீக்குளித்தார்.

தீயில் கருகிய அவரை அங்கிருந்தோர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 95 சதவீத தீக்காயம் ஆகி விட்டதால், சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.

பிரேத பரிசோதனை முடிந்ததும் விக்னேஷின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. விக்னேஷின் சொந்த ஊரான மன்னார்குடி கொண்டு செல்வதற்காக அவரது உடல் ஆம்புலன்ஸ் வாகனத்தின் ஏற்றப்பட்டது.

அப்போது விக்னேஷ் உடலை சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்று அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்க வேண்டும் என சீமான் தெரிவித்தார். ஆனால், இதற்கு போலீஸார் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீஸாருக்கும், சீமான் தரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது.

இறுதியில், விக்னேஷ் உடலை நாம் தமிழர் கட்சி அலுவலகத்துக்கு கொண்டு செல்ல போலீஸ் அனுமதி வழங்கியது. இதனையடுத்து, நாம் தமிழர் கட்சி அலுவலகத்துக்கு விக்னேஷ் உடல் போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டது. மாலை 6 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சியினரும், பொதுமக்களும் கண்ணீர் மல்க, மலர் வளையம் வைத்து விக்னேஷ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

0a1c

சனிக்கிழமை காலை 11 மணிக்கு விக்னேஷின் சொந்த ஊரான மன்னார்குடியில் அவரது இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது. “அமைதியான முறையில் விக்னேஷ் உடல் மன்னார்குடியில் அடக்கம் செய்யப்படும்” என்று சீமான் கூறினார். மேலும், ”தற்கொலை மூலம் எந்த பிரச்சினைக்கும் தீர்வு கிட்டாது. விக்னேஷ் எடுத்த முடிவை இனி எவரும் எடுக்கக்கூடாது” என்றார் அவர்.

0a1h

முன்னதாக, தீக்குளிப்பதற்குமுன் விக்னேஷ் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:

காவேரியில் நீரை பெற்று விவசாயத்தை மீட்டு எடுக்க போராடுங்கள்.

என் தாய் மண் மன்னார்குடியில் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதை நிறுத்த போராடுங்கள்.

எம் மண்ணை மலடாக்கும் மன்னையில் இயங்கும் சாராய ஆலையை மூட போராடுங்கள்.

இந்தி திணிப்பால் தமிழ் மொழி அழிந்து விடும் என்று 800 க்கும் மேற்பட்ட மொழிப்போர் மறவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தார்கள். அதுபோல புதிய கல்விக் கொள்கையால் சமஸ்கிருதம் திணிக்கப்பட்டு நம் தாய்மொழி சாகக் கூடாது என்பதற்காக முதல் மற்றும் இறுதி உயிராக என்னுயிர் இருக்கட்டும். அதற்காக போராடுங்கள்.

நம் மண்ணில் அந்நிய முதலீட்டை தவிர்த்து தமிழ்த் தேசிய முதலாளிகளை உருவாக்க போராடுங்கள்.

நான் வைத்த கோரிக்கைகள் சரியாக இருப்பின் இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராடும் தமிழர்களுக்கு இனி வாக்குச் செலுத்துங்கள்.

இவ்வாறு அக்கடிதத்தில் விக்னேஷ் கூறியிருந்தார்.