நாம் அறிவோம்
எங்களின் தங்கை இருக்கிறாள்
நாமறிவோம் – எங்கள்
தலைவனின் பிள்ளை எங்கிருக்கிறாள்
நன்கறிவோம்
தாயகப் புதல்வி அவள் நாமறிவோம்
கானகம் துயின்ற கதை நாமறிவோம்
சாயங்களற்ற அவள் சாயல் நாமறிவோம்
காயங்களாற்ற அவள் பயின்றதையும் நாமறிவோம்
அலங்காரப் பொருளேதும் அணிந்ததில்லை
அடம்பிடித்தேனும் ஏதொன்றும் கேட்டதுமில்லை
அதிகாரத் தொனியேனும் துளியுமில்லை
அவள் பெயரில் தனியாக எதுவும் இருந்ததுமில்லை
அவள் அன்று விரும்பிக் கேட்டதெல்லாம்
எம் மக்களுக்கு பணி செய்யும் பாத்திரமே
மனதார அவள் அணியக் கேட்டதெல்லாம்
புலி மங்கையர் தரிக்கும் உடை மாத்திரமே
இன்று யார் யாரோ ஏதேதோ சொல்கிறார்
கூர் கூராய் சொல்லம்பை எய்கிறார்
வெவ்வேறாய் நாம் சிதைந்து போனதாலோ
ஒவ்வொன்றாய் பொய்புரளி நெய்கிறார்
எங்களின் தங்கை இருக்கிறாள்
நாமறிவோம் – எங்கள்
தலைவனின் பிள்ளை எங்கிருக்கிறாள்
நன்கறிவோம்
நிலம் காக்கப் போரிட்ட புலியின் பிள்ளை
எம் குலம் காக்க சரிந்திட்டாள் நாமறிவோம்
தனித்தாளப் பிறக்கின்ற தமிழர் எல்லை
வரலாற்றில் வாழ்ந்திருப்பாள் நாமறிவோம்.
–க.குவேந்திரன்
30.11.2023
(குவேந்திரன் கணேசலிங்கம் முகநூல் பதிவு)