நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல – விமர்சனம்

ஷாரியா தனது அண்ணன், அப்பாவுடன் வசித்து வருகிறார். இவருடைய அப்பா நேர்மையான போலீஸ் அதிகாரி. இந்நிலையில், ஷாரியாவின் அண்ணன் ஒரு விபத்தில் இறக்க, அவரது இறுதிஊர்வலத்தில் கலந்துகொள்ள வரும் ஷாரியா அண்ணனின் நண்பர்களான கார்த்திக்கேயன், இவன்ஸ்ரீ, ஜெகதீஷ் ஆகியோரின் நட்பு ஷாரியாவுக்கு கிடைக்கிறது. அன்றுமுதல், இவர்கள் நான்கு பேரும் நண்பர்களாகிறார்கள்.

கார்த்திகேயன், ஷாரியாவுக்கு வேண்டிய உதவிகள் எல்லாம் செய்கிறார். கார்த்திகேயன், இவன்ஸ்ரீ, ஜெகதீஷ் மூன்று பேரும் தங்களது கைசெலவுக்காக அவ்வப்போது சிறுசிறு வழிப்பறி கொள்ளைகள் செய்து பிழைப்பை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இவர்கள் செய்யும் வேலை ஒருநாள் ஷாரியாவுக்கு தெரிய வருகிறது.

உடனே, நண்பர்கள் தாங்கள் வழிப்பறி கொள்ளை செய்வதற்கான காரணத்தை ஷாரியாவுக்கு விளக்கிச்சொல்ல அதையும் அவர் நம்புகிறார். இந்நிலையில், வெளிநாடு செல்ல ஆசைப்படும் ஷாரியாவுக்கு போதிய பணம் இல்லாததால், இவர்களுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபடுகிறார்.

இந்நிலையில், இவர்களுக்கு பேங்கில் இருந்து ஒருவர் ரூ.5 லட்சம் எடுக்கப் போவதாக தெரிய வருகிறது. உடனே, நண்பர்கள் அனைவரும் அதை திருடுவதற்கான திட்டம் போடுகின்றனர். அதன்படி, அந்த பணத்தை அவரிடமிருந்து திருடிக் கொண்டு செல்லும்போது, கடைசியில் ஷாரியாவின் கைக்கு அந்த பணம் முழுவதும் கிடைக்கிறது.

இந்நிலையில், போலீஸ்காரர் ஒருவர் ஷாரியாவை பின்தொடர, பதட்டத்தில் கையில் இருக்கும் பணப்பையை ஒரு காலி மைதானத்தில் போட்டுவிட்டு செல்கிறார். பின்னர், திரும்பி வந்து பார்க்கும்போது, அந்த பணப்பை காணாமல் போகிறது. உடனே, நண்பர்கள் அனைவரும் ஷாரியா மீது சந்தேகப்படுகிறார்கள்.

அவர்களில் கார்த்திகேயன், ஷாரியாவிடம் இன்னும் ஒரு வாரத்தில் ரூ.5 லட்சம் பணத்தை எப்படியாவது திருப்பிக் கொடுக்கவேண்டும். இல்லையென்றால், பெரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்து அனுப்புகிறார்.

ஷாரியாவும் என்னசெய்வதென்று தெரியாமல் வீட்டுக்கு வருகிறார். திருடு போன பணத்தை திருப்பி கொடுக்க ஷாரியா என்ன செய்தார்? நண்பர்களால் இவருக்கு என்ன நேர்ந்தது? கடைசியில் திருடு போன பணம் இவர்களுக்கு கிடைத்தா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை.

கதாநாயகன் கார்த்திகேயனுக்கு அதிகமான வசனங்கள் இல்லாவிட்டாலும், அவரது நடிப்பிலேயே வில்லத்தனம் கலந்து நடித்திருப்பது சிறப்பு. வில்லத்தனமான கதாபாத்திரத்தை இவர் ரொம்பவும் அழகாக ஏற்று நடித்திருக்கிறார். படம் முழுக்க Life is Good என்ற ஒரு வார்த்தையை அடிக்கடி உபயோகிக்கிறார். அவர், சொல்லுகிற இடம், சொல்லுகிற ஸ்டைல் எல்லாமே நன்றாகவே இருக்கிறது.

நண்பர்களாக வரும் ஷாரியா, இவன்ஸ்ரீ, ஜெகதீஷ் ஆகியோரில், இவன்ஸ்ரீ சீரியசாக செய்யும் விஷயங்கள் எல்லாம் நமக்கு நகைச்சுவையை கொடுத்திருக்கிறார். ஷாரியா, வெகுளியான இளைஞன் எப்படி நடந்துகொள்வானோ அதற்கேற்ற நடிப்பை அழகாக பிரதிபலித்திருக்கிறார். தனது நடிப்பில் எதார்த்தம் மாறாமல் அழகாக நடித்திருக்கிறார். ஜெகதீஷும் தனது கதாபாத்திரத்திற்கேற்ற சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

படத்தில் நிறைய சஸ்பென்ஸ் காட்சிகள் உள்ளன. ஒரு கிரைம் கதையை விறுவிறுப்பாக கொண்டு போயிருக்கிறார் இயக்குனர் தினேஷ் செல்வராஜ். கிரைம் கதையில் கொஞ்சம் விறுவிறுப்பு கொடுத்து அனைவரும் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.

நவீன் மற்றும் பியோன் சரோவின் இசையில் கதையோடு ஒட்டிய ஒரேயொரு பாடல்தான். மற்றபடி, பின்னணி இசையில் கிரைம் கதைக்கு தேவையான விறுவிறுப்பை அழகாக கொடுத்திருக்கிறது. பகத்சிங் ஒளிப்பதிவில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். இன்றைக்கு உள்ள தொழில்நுட்பத்தோடு ஒப்பிட்டு பார்க்கும்போது, இந்த படம் பழைய படத்தை பார்ப்பதுபோன்ற ஒரு உணர்வை கொடுத்திருக்கிறது.

மொத்தத்தில் ‘நாலு பேருக்கு நல்லதுனா எதுவும் தப்பில்ல’ நல்லா இருக்கு.