நா.முத்துக்குமார் மரணம்: தலைவர்கள் இரங்கல்
திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ”திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார் தன்னுடைய 41 வயதிலேயே மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு மறைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும் மிகுந்த வருத்தமும் அடைந்தேன்.
தமிழ்த்திரை உலகில் தன்னுடைய பாடல்களால் தனி முத்திரை பதித்த கவிஞர் முத்துக்குமார் ‘தங்கமீன்கள்’ திரைப்படத்தில் “ஆனந்த யாழை மீட்டுகிறாள்” என்ற பாடலுக்காகவும், ‘சைவம்’ திரைப்படத்தில் “அழகே அழகே” என்ற பாடலுக்காகவும் தேசிய விருதுகள் பெற்ற கவிஞர்.
என் மீது மிகுந்த பற்றும் பாசமும் கொண்ட தம்பி நா.முத்துக்குமாரின் மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்” என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின்
திமுக பொருளாளர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ”திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா.முத்துக்குமார் தன்னுடைய 41 வயதிலேயே மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு மறைந்தார் என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சியும், பெரும் துயரமும் அடைந்தேன்.
‘தங்கமீன்கள்’ படத்தில் இவர் எழுதிய ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலுக்கும், ‘சைவம்’ படத்தில் எழுதிய அழகே அழகே பாடலுக்கும் தேசிய விருது பெற்ற கவிஞர். 2005- ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதினையும், பல பிலிம்பேர் விருதுகளையும் பெற்று தமிழ்த் திரையுலகின் சக்ரவர்த்தியாக திகழ்ந்த கவிஞர் நா.முத்துகுமாரின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கும், தமிழ் திரையுலகத்திற்கும் பேரிழப்பு.
கவிஞர் நா.முத்துக்குமாரின் மறைவினால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்திற்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
வைகோ
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட இரங்கல் செய்தியில், ”திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் இன்று மஞ்சள் காமாலை நோயால் மறைந்தார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரது மறைவு தமிழ்த் திரைப்பட உலகுக்கும் இலக்கிய உலகுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
மிகக் குறுகிய காலத்தில் 1,500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உச்ச புகழைத் தொட்ட, இரண்டு முறை தேசிய விருது பெற்ற கவிஞரான முத்துக்குமாரின் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்’ எனும் பாடல் தந்தைக்கும் மகளுக்குமான உயரிய அன்பை வெளிப்படுத்தியது.
அந்தப் பாடலைக் கேட்கிற ஒவ்வொரு தகப்பனின் உள்ளத்திலும் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கியது. இன்னும் திரையுலகில் மிகப் பெரிய சாதனைகளை அரங்கேற்றி தமிழ் உலகுக்கு பெருமை சேர்க்க வேண்டிய அந்த இளம் கவிஞர் நா.முத்துக்குமார் மறைவுக்கு எனது சார்பிலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று வைகோ கூறியுள்ளார்.
ஜி.ராமகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ”சிறந்த கவிஞரும், பாடாலசிரியருமான நா.முத்துக்குமார் மறைவு செய்தி அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அவருடைய மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்த நா.முத்துக்குமார், இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றத் தொடங்கி, சிறந்த பாடலாசிரியராக வளர்ந்தார். ‘தங்கமீன்கள்’ திரைப்படத்தில், மகளுக்கும் – அப்பாவுக்குமான உறவை பாடல்களில் வடித்தெடுத்த அவருக்கு ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலுக்காக தேசிய விருது கிடைத்தது. ‘சைவம்’ திரைப்படத்தில் அழகே எங்கும் நிறைந்திருக்கிறதென்ற அழகே, அழகே பாடலுக்காக இரண்டாவது முறை தேசிய விருது பெற்றார்.
திரைப்பாடல்கள் மூலமும், கவிதைகள் மூலமும் கலை உலகில் நீங்கா இடம்பெற்ற நா.முத்துக்குமார் இளம் வயதில் மரணித்திருப்பது ஆழ்ந்த வருத்தம் தருகிறது. அவரது இணையர் தீபலஷ்மி, குழந்தைகள், குடும்பத்தார், நண்பர்களுக்கு அனுதாபங்கள்” என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.