‘முத்தின கத்திரிக்கா’ – முன்னோட்டம்
சுந்தர்.சி – குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘முத்தின கத்திரிக்கா’. ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தமிழகமெங்கும் வெளியிடும் இத்திரைப்படம் நாளை (ஜீன் 17ஆம் தேதி) திரைக்கு வருகிறது.
நகைச்சுவை நாயக கதாபாத்திரத்தில் பின்னி எடுப்பவர் என பெயர் பெற்ற இயக்குனர் சுந்தர்.சி இதில் நாயகனாக நடித்துள்ளார். அழகிலும், கவர்ச்சியிலும் கலங்கடிக்கும் பூனம் பாஜ்வா நாயகியாக நடித்திருக்கிறார். நாயகியின் அம்மாவாக ‘ஜெமினி’ புகழ் கிரண், காமெடி கலந்த வில்லனாக விடிவி கணேஷ் நடித்துள்ளார்கள். இவர்களுடன் சதீஷ், வைபவ், சிங்கம்புலி, சிங்கப்பூர் தீபன் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
சுந்தர்.சி.யின் பல படங்களில் இணை இயக்குனராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றிய வேங்கட் ராகவன் இப்படத்தை இயக்கியுள்ளார். சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.
இப்படம் குறித்து நாயகன் சுந்தர்.சி கூறுகையில், “வயது அதிகமான ஒருவன், தன்னைவிட வயது குறைந்த இளம்பெண் மீது காதல் வயப்படுவதும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் தான் கதை. எனக்கு ஜோடியாக பூனம் பாஜ்வா நடித்துள்ளார். குடும்பப் பாசம், நகைச்சுவை, காதல் என அனைத்து அம்சங்களுடன் சிறந்த படமாக தயாராகி, தற்போது திரைக்கு வருகிறது. அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்” என்றார்.
படத்தின் இயக்குனர் வேங்கட் ராகவன் கூறுகையில், ”தற்போது பேய் கதைகள், போலீஸ் கதைகள், காதல் கதைகள் என எல்லா கோணத்திலும் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. வெளிவராத ஒரு கோணத்தில் ஒரு படம் இயக்கலாம் என யோசித்தபோது, அரசியல் களத்தினை தேர்வு செய்தோம். பிஜு மேனன், நிக்கி கல்ராணி நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘வெள்ளி மூங்கா’ என்ற படத்தின் ஒரு வரியை மட்டும் எடுத்துக் கொண்டு, தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப திரைக்கதை அமைத்துள்ளோம்.
ஒரு அரசியல்வாதியின் இயல்பான வாழ்க்கை எப்படியிருக்கும்? என்பதை நகைச்சுவை கலந்து இப்படத்தில் சொல்லியிருக்கிறோம். ரொம்ப வருடங்கள் திருமணமாகாத, 40 வயதான அரசியல்வாதிதான் கதை நாயகன். அவர் வாழ்க்கையிலும் சரி, அரசியலிலும் சரி, எதுவும் சாதிக்க முடியாமல் இருக்கும் சூழ்நிலையில், ஒரு பெண் மூலமாக அவருடைய வாழ்க்கையில் பெரும் திருப்பம் ஏற்படுகிறது. அது, அவரை வாழ்க்கையிலும், அரசியலிலும் எந்த அளவுக்கு கொண்டு செல்கிறது என்பதே கதை.
சிரிப்புக்கு 100 சதவிகித உத்தரவாதத்துடன், குடும்பத்தோடு பார்த்து ரசிப்பதற்கு உரிய ‘யு’ சான்றிதழ் தாங்கி வருகிறது ‘முத்தின கத்திரிக்கா” என்றார்.