விடுதலை போரில் இஸ்லாமியர்கள்: வரலாறு காட்டும் செயலி!

ஸ்மார்ட் போன் செயலிகளில் பலவிதம் இருக்கின்றன. செயலிகள் உருவாக்கப்படும் நோக்கத்திற்கு ஏற்ப அவற்றின் பயன்பாடும் பலவிதமாக அமைகின்றன. பொதுவாக, தினசரிப் பயன்பாட்டுக்கான‌ செயலிகள், பொழுதுபோக்கு சார்ந்த செயலிகள் போன்றவைதான் அதிகம் அறியப்பட்ட செயலிகளாக இருக்கின்றன. ஆனால், குறிப்பிட்ட விஷயம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் செயலிகளைப் பயன்படுத்தலாம். இதற்கு அழகான உதாரணமாக அமைகிறது ‘முஸ்லிம் ஃப்ரீடம் ஃபைட்டர்ஸ்’ (Muslim Freedom Fighters) எனும் செயலி.

பெயரே சொல்கிறதே, இது எப்படியான செயலி என்று! இந்தச் செயலி இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்களின் பங்களிப்பை எடுத்துச் சொல்கிறது.

இருட்டடிப்புக்கு உள்ளாகும் பங்களிப்பு

பன்முகத்தன்மைதான் இந்தியாவின் பலமாக இருந்துவருகிறது. இந்தியச் சுதந்திரப் போராட்டமும் இதற்குச் சாட்சியாக இருக்கிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் சுதந்திரத்திற்காகப் போராடியபோது சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் சாதி, மத வேறுபாடுகளின்றி அதில் பங்கேற்றனர். இக்காலத் தலைமுறைக்கு இதை எடுத்துச்சொல்லும் வகையில் இந்தச் செயலி அமைந்துள்ளது.

ஹைதராபாதைச் சேர்ந்த மென்பொறியாளரான சையது காலீத் சைபுல்லா என்பவர் இந்தச் செயலியை உருவாக்கியுள்ளார். இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்களிப்பை ஒருசில குழுக்கள் இருட்டடிப்பு செய்ய முயன்று வருவதாகவும், அதில் அவர்கள் வெற்றியும் பெற்றுவரும் நிலையில், முஸ்லிம்களின் பங்களிப்பைப் புரிய வைக்கும் வகையில் இந்தச் செயலியை உருவாக்கியதாக காலீத் கூறுகிறார்.

“பொதுவாகவே முஸ்லிம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள் மக்கள். ஐந்து முஸ்லிம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பெயரைக் கூறுமாறு கேட்டால் 95 சதவீதம் பேருக்கு அது சாத்தியமாவதில்லை. இந்த நிலையைப் போக்கவே, இந்த விஷயம் தொடர்பாக விரிவான தகவல்களை அளிக்கும் செயலியை உருவாக்கும் எண்ணம் ஏற்பட்டது” என்கிறார் காலீத்.

செயலிக்கு அடிப்படை புத்தகம்

இந்த எண்ணத்துடன் ஆய்வு செய்வதவர் ஆரம்பத்தில் போதிய தகவல்கள் கிடைக்காமல் அல்லாடினாலும், பின்னர் சையது நஸீர் அகமது எனும் பத்திரிகையாளர் இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தில் முஸ்லிம்களின் பங்களிப்புப் பற்றி விவரித்து எழுதிய ‘தி இம்மார்ட்டல்ஸ்’ எனும் புத்தகத்தைக் கண்டறிந்தார். நூலாசிரியர் 20 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியா முழுவதும் ஆய்வு செய்து அரிய தகவல்களைச் சேகரித்து இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்.

இந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு 155 முஸ்லிம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய தகவல்களைச் செயலியாக அமைத்துள்ளார். இந்தச் செயலியை இவர் உருவாக்கியுள்ள விதம் இதை மிகவும் சுவாரசியமாக ஆக்குகிறது. பெண்கள், வழக்கறிஞர்கள், மன்னர்கள், தியாகிகள், பத்திரிகையாளர்கள், படைப்பாளிகள், மதகுருமார்கள் எனப் பல்வேறு தலைப்புகளில் முஸ்லிம் சுதந்திரப் போராளிகள் தொடர்பான தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு தலைப்பையும் கிளிக் செய்தவுடன் அதில் பட்டியலிடப்பட்டுள்ள வீரர்களின் சுருக்கமான வாழ்க்கைச் சித்திரத்தைத் தெரிந்துகொள்ளலாம். அதோடு ஒவ்வொரு வீரர்கள் தொடர்பான தேர்விலும் பயனாளிகள் பங்கேற்கலாம். அதாவது அவர்கள் தொடர்பாக உருவாக்கப்பட்டுள்ள கேள்விகளுக்குப் பதில் அளிப்பதன் மூலம் இந்தத் தேர்வில் பங்கேற்கலாம். ஒவ்வொரு தேர்வாகச் சரியாகப் பதில் அளித்து அடுத்த வீரர் தேர்வுக்கு முன்னேறலாம்.

தேர்வில் பங்கேற்காமலேகூட தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம் என்றாலும், தேர்வில் பங்கேற்று சரியான பதில்களை அளித்தால் செயலி மூலம் அதற்கான சான்றிதழையும் பெற்றுக்கொள்ளலாம். இந்த விவரங்களை நண்பர்களுடன் சமூக ஊடகத்திலும் பகிர்ந்து கொள்ளலாம். இந்தச் செயலியைப் பயன்படுத்த முதலில் அதில் உறுப்பினராகப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

விழிப்புணர்வு தரும் மனநிறைவு

முதல் சுதந்திரப் போர் என வர்ணிக்கப்படும் 1857 சிப்பாய்க் கிளர்ச்சியில் பங்கேற்ற பேகம் ஹஸ்ரத் மஹால், இந்தியாவின் முதல் பெண் அமைச்சரான மசுமா பேகம், பகத்சிங் விடுதலைக்காகச் சட்டப் போராட்டம் நடத்திய முகமது ஆசிப் அலி, இரு தேசக் கொள்கையை எதிர்த்த டாக்டர் சையது முகமது, மாணவராக இருந்ததே சுதந்திரப் போராட்டத்தில் இணைந்த டாக்டர் சாதிக் அலி, இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காகப் பாடுபட்ட டாக்டர் குன்வர் முகமது அஷரப், சீர்திருத்தக் கருத்துகளை முன்வைத்துப் போராடிய ஆகா சுல்தான் முகமது ஷா என சுதந்திரப் போராட்டத்தில் சுடர் விட்ட பல ஆளுமைகளை இந்தச் செயலி மூலம் அறிந்து கொள்ளலாம்.

மென்பொருள் துறையில் 12 ஆண்டுகள் அனுபவம் மிக்க காலீத் 4 மாத காலம் முயற்சி செய்து இந்தச் செயலியை உருவாக்கியுள்ளார். இதில் உள்ள கேள்விகளை வடிவமைக்க அவரது நண்பரான அமானுல்லா கான் உதவியுள்ளார்.

மறக்கப்பட்ட இந்தியச் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் குறித்த விழிப்புணர்வை இந்தச் செயலி மூலம் ஏற்படுத்துவது மிகுந்த மனநிறைவைத் தருவதாக காலீத் சொல்கிறார். “இந்தச் செயலியை உருவாக்குவதில் எந்தச் சிக்கலும் இல்லை. இதை மக்களிடம் கொண்டு செல்வதுதான் சவாலாக இருக்கிறது” என்கிறார். எனினும் இந்தச் செயலி மெல்ல கவனத்தை ஈர்த்து வருகிறது.

அடுத்துத் தமிழிலும்…

சுதந்திர தினத்தன்று அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இதுவரை 6,400 பேருக்கு மேல் இதைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தியிருக்கின்றனர். அதுமட்டுமல்ல, பலரும் ஆர்வத்துடன் இதில் உள்ள தேர்வில் பங்கேற்று வருவதாகவும் அவர் உற்சாகத்துடன் சொல்கிறார்.

இந்தச் செயலிக்குக் கிடைத்துள்ள வரவேற்பை அடுத்து தமிழ், உருது உள்ளிட்ட மொழிகளிலும் இதைக் கொண்டுவர இருப்பதாகச் சொல்கிறார். ஏற்கெனவே பலரிடம் இருந்து இதற்கான கோரிக்கைகள் வரத் தொட‌ங்கியிருக்கின்றன.

அடுத்த கட்டமாக, இந்து-முஸ்லிம் ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் செயலியைப் பிரபல சமூகச் செயற்பாட்டாளரான டாக்டர் ராம் புனியானியின் வழிகாட்டுதலுடன் உருவாக்கியிருப்பதாகவும், குடியரசு தினத்தன்று இதை அறிமுகம் செய்யவிருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

ஆண்ட்ராய்டு போன்களில் தரவிறக்கம் செய்ய: http://bit.ly/2ghlcPD

Courtesy: tamil.thehindu.com

 (மேலே உள்ள படத்தில் –

Syed Mohammad Sharfuddin Quadri: Syed Mohammad Sharfuddin Quadri was born in the year 1901 in Nawada district of Bihar and he was Unani Physician by profession. When Mahatma Gandhi announced the Salt March of 1930, he joined the Indian Independence Movement. Syed Mohammad Sharfuddin Quadri was in the same Cell of Cuttack Jail where Gandhi was imprisoned. Syed Quadri with the help of his father treated the Frist President of India Dr. Rajendra Prasad when we was ill due to respiratory issues. In the year 2007, Government of India awarded him the Padma Bhushan. He died on 30th December 2015, at the age of 114.)