’முரசொலி’ செல்வம் காலமானார்
முன்னாள் முதல்வர் கலைஞரின் சகோதரியின் மகனும், மூத்த மகள் செல்வியின் கணவருமான முரசொலி செல்வம் மாரடைப்பால் வியாழக்கிழமை (அக்டோபர் 10) பெங்களூரு மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 82.
முரசொலி செல்வம், மக்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர். ‘முரசொலி’யின் ஆசிரியராகவும், நிர்வாகியாகவும் இருந்தவர். ‘சிலந்தி’, என்ற புனைப்பெயரில் ‘முரசொலி’யில் எழுதி வந்தார். 50 ஆண்டு காலம் ‘முரசொலி’க்குத் தூணாக இருந்தவர். கருத்துரிமைக்காக தமிழ்நாடு சட்டப்பேரவையில் கூண்டில் நிறுத்தப்பட்டவர். அப்பொழுதும் கம்பீரமாக நின்ற துணிச்சல்காரர்.
முரசொலி செல்வத்தின் உடல் பெங்களூருவில் இருந்து சென்னை கோபாலபுரம் இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் பலர் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், ”முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடி போல என் நெஞ்சத்தைத் தாக்கி, வேதனைக் குருதியை வடியச் செய்கிறது. நான் சாய்வதற்குக் கிடைத்த கடைசித் தோளை, கொள்கைத் தூணை இழந்து நிற்கிறேன்.என்னை நானே ஆற்றுப்படுத்த முடியாத நிலையில், கழகத்திலும் குடும்பத்திலும் யாருக்கு எப்படி ஆறுதல் சொல்லப் போகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.