”சாதி ஒழியாத வரை நம் சமூகம் அடிமையாகத் தான் இருக்க வேண்டும்!” – சீமான்

ஆதி திரைக்களம் தயாரிப்பில் மு.களஞ்சியம் எழுதி இயக்கியுள்ள படம் முந்திரிக்காடு. இதில் சீமான், புகழ், சுபப்பிரியா, ”தியேட்டர்லேப்” ஜெயராவ், கலைசேகரன், அ.வெ.பார்த்திபன், சக்திவேல், சோமு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இசை : ஏ.கே.பிரியன்; ஒளிப்பதிவு : ஜி.ஏ. சிவசுந்தர்; படதொகுப்பு : எல்.வி.கே.தாசன்; கலை : மயில்கிருஷ்ணன்; பாடல்கள் : கவிபாஸ்கர் – இளையகம்பன்; மூலக்கதை : எழுத்தாளர் இமையம்; மக்கள் தொடர்பு : மெளனம் ரவி.

இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினர்களாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஆர்.நல்லகண்ணு, சி.மகேந்திரன், இயக்குனர்கள் ச்சி, ராஜு முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

m9

விழாவில் இயக்குநர் மு.களஞ்சியம் பேசுகையில், “அண்ணன் சீமான் சாதிய கட்டமைப்பிற்கு எதிரான எங்கள் ’முந்திரிக்காடு’ படத்தை மிகவும்  கவனமாகப் பார்த்துக்கொண்டார். அண்ணன் சீமானுக்கு இப்பட டீம் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது. சசி சார் என்றால் எங்களுக்குப் பயம் உண்டு. அவர் எனக்கு ஒரு சகோதரர் போல. விவேகானந்தன்  சார் எனக்கு முதல் படம் கொடுத்ததற்கான காரணம் என்னுடைய செயல்பாடுகளை அவர் கவனித்து வந்தது தான். இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் நன்றியினைக் கூறிக்கொள்கிறேன்” என்றார்.

இசையமைப்பாளர் ஏ.கே.பிரியன் பேசுகையில், “நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் எதாவது ஒன்றை நமக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். எனக்கு களஞ்சியம் அங்கிள் மூலமாக நிறைய அனுபவம் கிடைத்தது. பெரும்பாலும் லைவ்- இன்ஸ்ட்ருமெண்ட் யூஸ்  பண்ண எந்த தயாரிப்பாளரும் சம்மதிப்பதில்லை. ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் எனக்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்து கொடுத்தார். பாடல்கள் தான் இந்தப்படத்தின் ஜீவன். அதைச் சரியாக்க் கொண்டு வர இயக்குநர் எனக்கு மிகவும் சப்போர்ட் பண்ணினார். பாடலாசிரியர்கள் மற்றும் பாடகர்கள் மிகச் சிறப்பாக பங்காற்றி இருக்கிறார்கள். படத்தின் பாடல்கள், பேக்ரவுண்ட் மியூசிக் இரண்டும் நன்றாக வந்திருக்கிறது. படமும் சிறப்பாக வந்திருக்கிறது” என்றார்

இப்படத்தில் நடித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், “களஞ்சியத்தின் கனவுப்படைப்பாக ’முந்திரிக்காடு’ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் நான் இடம் பெற்றதற்காக மிகவும் மகிழ்கிறேன். தம்பி பிரியன் இசை அமைத்து பாடல்களை என்னிடம் போட்டுக் காட்டினார். நான் கேட்டுவிட்டுப் பாராட்டினேன். பின்னணி இசையும் அருமையாக வந்திருக்கிறது. தம்பி களஞ்சியம் இமையத்தின் எழுத்தை அப்படியே திரையில் வார்த்தெடுத்திருக்கிறார். இமையத்தின் எழுத்தை நம்பி தான் மு.களஞ்சியம் இந்த படத்தைத் தயாரித்து இருக்கிறார்.

சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் கலக்கட்டும் என்று கவிதை எழுதும் நிலையில் சமூகம் இருக்கிறது. தலைக்கு தொப்பி தைக்கிறவன் உயர்ந்தவன், காலுக்குச் செருப்பு தைத்தவன் கீழானவன் என்கிறான். இந்த ’முந்திரிக்காடு’ படம் ’பரியேறும் பெருமாள்’ ஏற்படுத்திய தாக்கத்தைவிட அதிக தாக்கத்தை ஏற்படுத்தும்.

சாதி ஒழியாத வரை நம் சமூகம் அடிமையாகத் தான் இருக்க வேண்டும். நமக்குள் இருக்கும் சாதி மத உட்பகை தான் நம்மை வீழ்த்துகிறது. நம்மை ஓர்மைப்படாமல் பார்த்துக்கொள்கிறது. ‘சாதிய எண்ணம் கொண்டவன் இறைவனை வணங்குவதற்கே தகுதி இல்லாதவன். அவன் அரசியலுக்கு வந்தால் நாடு நாசமாகப் போய்விடும்’’’’’’ என்கிறார் முத்துராமலிங்கத்தேவர்.

சாதிய விடுதலை, மத விடுதலை, பொருளாதார விடுதலை… எதுவுமே இன்னும் இந்தியா பெறவில்லை. வெறும் அரசியல் விடுதலை மட்டும் தான் பெற்றுள்ளோம்.

மருத்துவமனையில் ரத்தம் தேவைப்படும்போது எவனும் சாதி பார்ப்பதில்லை. காரணம் சாதிக்கு ரத்தவெறி இருக்கு. ரத்தத்திற்கு சாதி வெறி இல்லை. கோயில்களில் இருக்கும் சாதி திரையரங்குகளில் செத்துப்போய்விட்டது. அதனால் இப்போது திரையரங்குகளை அதிகப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

இந்திய நிலத்திலே பெருமைக்குரியவர் அய்யா நல்லக்கண்ணு அவர்கள் தான். நாங்கள் பொழுது போக்கிற்காக போராடவில்லை. எங்களுக்கு அடுத்த தலைமுறையாவது நன்றாக வாழவேண்டும் என்று தான் போராடுகிறோம். அப்படியான போராட்டக்காரர்களில் ஒருவனான தம்பி களஞ்சியம் இயக்கி இருக்கும் ’முந்திரிக்காடு’  பெரிய மாற்றத்தை உண்டுபண்ணும். இதைப் படமாக நான் பார்க்கவில்லை. ஒரு அரசியல் களமாகப் பார்க்கிறேன். இந்தப்படம் பெரிய அதிர்வலைகளை கிளப்பும்” என்றார்