முன்னோடி – விமர்சனம்

படித்து முடித்துவிட்டு வீட்டுக்கு அடங்காமல் சுற்றும் நாயகன் ஹரிஷ், தனது அம்மா தம்பி மீது மட்டும் அதிக பாசம் காட்டுவதால் அவர் மீது வெறுப்பாக இருக்கிறார். இந்த நிலையில் உள்ளூர் தாதாவான அர்ஜுனாவின் உயிரை காப்பாற்றும் ஹரிஷ், அவருடனேயே இருந்து அடியாள் வேலையும் செய்கிறார்.

இந்நிலையில் கல்லூரி மாணவியான நடிகை யாமினி பாஸ்கரை பார்த்ததும் காதல் வலையில் விழும் ஹரிஷ், அவள் பின்னாலேயே சுற்றுகிறார். இதற்கிடையில், தாதா மைத்துனருக்கு ஹரிஷை பிடிக்காமல் போகவே, ஹரிஷையும், அர்ஜுனாவையும்யும் பிரிக்க நினைக்கிறார்.

இதற்கிடையில் தான் காதலித்த யாமினி தனது தம்பியை காதலிப்பதாக நினைத்து ஆவேசப்படும் ஹரிஷ், அவனை கொலை செய்வதற்காக கத்தி எடுத்துக்கொண்டு செல்லும் வேளையில், தனது தம்பி தனது காதலை சேர்த்து வைக்க முயற்சிப்பது கண்டு நெகிழ்ந்து போகிறார். அதேபோல், தம்பி மீது மட்டும் அவளது அம்மா ஏன் பாசம் காட்டுகிறாள் என்கிற உண்மையும் அவருக்கு தெரிய வருகிறது.

இதனால், தனது தாய் மற்றும் தம்பி மீது பாசம் ஏற்பட்டு அவர்களுக்காக வாழத் தொடங்குகிறார். அதேநேரத்தில் தாதாவை விட்டும் விலகுகிறார். ஹரிஷ் தங்களைவிட்டு பிரிந்தால் போலீசுக்கு ஏதாவது தகவல் கொடுத்துவிடுவான் என்று சதித்திட்டம் தீட்டி, அவனை கொலை செய்ய அர்ஜுனனை தூண்டிவிடுகிறார் அவரது மைத்துனர். இவனது சதி வலையில் அவரும் விழுந்துவிட, ஹரிஷை கொல்ல ஆள் அனுப்புகிறார்.

ஆனால், இந்த தாக்குதலில் ஹரிஷின் தம்பியை ரவுடிகள் குத்தி கொன்றுவிடுகின்றனர். அவர்களை பழிவாங்க ஹரிஷ் துடிக்கிறார். இறுதியில், தம்பியை கொன்றவர்களை ஹரிஷ் பழிவாங்கினாரா? தம்பியை ஏன் அவர்கள் கொன்றார்கள்? என்பதற்கு விடை கொடுத்திருக்கிறார்கள்.

துறுதுறுவென கதாபாத்திரத்தில் ஹரிஷ் நம்மை கவர்கிறார். படம் முழுக்க யதார்ததமான நடிப்பால் கவர்ந்திருக்கிறார். சண்டைக் காட்சியிலும் அசர வைத்திருக்கிறார்.

யாமினி பாஸ்கருக்கு படத்தில் பெரிதாக வேலையில்லை. வழக்கமான கதாநாயகிகள் போலவே இப்படத்தில் நாயகனுடன் ரொமான்ஸ் செய்ய மட்டுமே பயன்பட்டிருக்கிறார்.

தாதாவாக வரும் அர்ஜுனா மிரட்டியிருக்கிறார். கோவிலில் தன்னை சுற்றி வளைக்கும் ரவுடிகளிடமிருந்து இவர் தப்பிக்கும் காட்சிகள் எல்லாம் பலே சொல்ல வைக்கிறது. நாயகனின் தாயாக நடித்திருக்கும் சித்தாரா அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

இயக்குனர் குமார் தாதா கதையை குடும்ப பாச உறவுகளுடன் விறுவிறுப்பாக நகர்த்தி சென்றிருக்கிறார். ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் அடுத்து வரும் காட்சிகள் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறது.

படத்தில் வரும் டுவிஸ்டுகள் எல்லாம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.

பிரபு சங்கர் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கின்றன. பின்னணி இசையிலும் ஓகே சொல்ல வைத்திருக்கிறார். வினோத் ரத்தினசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ’முன்னோடி’ முன்னேற்றம்.