முந்தல் – விமர்சனம்
புதிதாக கண்டுபிடிக்கப்படும் புற்றுநோய் தடுப்பு மருந்து அனைத்து மக்களுக்கானதா? அல்லது பெரிய அளவில் பணம் சம்பாதிக்க நினைக்கும் சில பேராசைக்காரர்களுக்கு ஆனதா? என்ற கேள்வியை மையமாக வைத்து பின்னப்பட்டது தான் ‘முந்தல்’ படக்கதை.
வி.எஸ்.ராகவன் சித்த மருத்துவர். ஓலைச்சுவடியில் எழுதப்பட்டிருக்கும் குறிப்புகளை வைத்து புற்றுநோய் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.
அவரது பேரன் நாயகன் அப்பு கிருஷ்ணா. தற்காப்புக் கலை நிபுணர். அவர் தாத்தாவுக்கு உதவியாக, புற்றுநோய் தடுப்பு மருந்துக்கு தேவையானவற்றை ஆழ்கடலுக்குச் சென்று சேகரித்து வருகிறார்.
விடாமுயற்சிக்குப்பின் புற்றுநோய் தடுப்பு மருந்தை கண்டுபிடித்து விடுகிறார் வி.எஸ்.ராகவன். இந்த விஷ்யம் விஞ்ஞானி நிழல்கள் ரவிக்கு தெரிய வருகிறது. அவர் வி.எஸ்.ராகவனை சந்தித்து, புதிய மருந்துக்கான ஃபார்முலாவை தன்னிடம் கொடுக்கும்படியும், அதை வைத்து நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்றும் கூறுகிறார். அப்படி கொடுத்தால் ஏழை எளிய மக்களுக்கு அந்த மருந்து கிடைக்காமல் போய்விடும் என்பதால் நிழல்கள் ரவியிடம் அதை தர மறுக்கிறார் வி.எஸ்.ராகவன்.
இதையடுத்து நிழல்கள் ரவியின் தூண்டுதலின் பேரில், உள்ளூர் ரவுடியான மொட்டை ராஜேந்திரன் அந்த ஓலைச்சுவடியை எடுக்க வருகிறார். ஆனால் நாயகன் அப்பு கிருஷ்ணா தற்காப்பு கலை நிபுணர் என தெரிந்து ஜகா வாங்குகிறார்.
புற்றுநோய் தடுப்பு மருந்து அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று அப்பு கிருஷ்ணா பல்வேறு நாடுகளுக்கு செல்கிறார். அப்பு கிருஷ்ணா, நிழல்கள் ரவி ஆகிய இருவரில் யாருடைய திட்டம் நிறைவேறியது என்பது மீதிக்கதை.
நாயகன் அப்பு கிருஷ்ணா தற்காப்பு கலையில் பின்னியெடுத்திருக்கிறார். ஆனால், நடிப்பில் சோபிக்கவில்லை. வசன உச்சரிப்பும் தகராறு தான்.
நாயகி முக்ஷா சில காட்சிகளில் மட்டுமே வந்து செல்கிறார். மொட்டை ராஜேந்திரனும் அப்படியே. வி.எஸ்.ராகவன், நிழல்கள் ரவி ஆகியோர் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்..
நல்ல கதை தான். ஆனால், திரைக்கதை அமைப்பதிலும், நடிப்புக் கலைஞர்களை வேலை வாங்குவதிலும் கோட்டை விட்டுள்ளார் இயக்குனர் ஜெயந்த். படத்தின் நீளம் மிகப்பெரிய டார்ச்சர்.
கே.ஜெய்கிருஷ் இசையமைப்பில் பாடல்கள், பின்னணி இசை சுமார் ரகம். ராஜா ஒளிப்பதிவு ஓகே. ரகம்.
‘முந்தல்’ – பிந்தல்!