“சிவா, நீங்க சூப்பர் ஃபிகர்”: சிவகார்த்திகேயனை கலாய்த்த விஜய் சேதுபதி!

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், சுதீப் நாயகனாக நடிக்கும் ‘முடிஞ்சா இவன புடி’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் சிவகார்த்திகேயன் பேசுகையில், “நான் ஈ’ படத்தில் சுதீப்பின் நடிப்பைப் பார்த்து மிரண்டுபோன கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன். எதிரே இல்லாத ஈ-ஐ, இருப்பதாக கற்பனை செய்து நடிப்பது ரொம்ப கடினமான விஷயம். அதை அவர் பிரமாதமாகச் செய்திருந்தார்.

“நான் பார்த்து வியந்த இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரின் பட இசை வெளியீட்டு விழாவில் நான் அவர் அருகில் அமர்ந்து இருப்பது எனக்கு மகிழ்ச்சி. ‘ரெமோ’ படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டு எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்தார். ‘ரெமோ’வில் நான் பெண் வேடத்தில் நடிக்கையில் அது எனக்கு பெரிதும் உதவியது.

“இக்கால ரசிகர்கள் ரசிக்கும் வகையிலான மிகச் சிறந்த படைப்பாக ‘முடிஞ்சா இவன புடி’ நிச்சயம் இருக்கும். படத்தின் முன்னோட்டம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

“இந்த மேடையில் எனக்கு அந்த பக்கம் விஜய் சேதுபதி, இந்தப் பக்கம் தனுஷ் சார்னு பார்க்கவே சந்தோசமா இருக்கு. இதுக்கெல்லாம் காரணம் கே.எஸ்.ரவிக்குமார் தான்.  இது நடக்குமா, சாத்தியமா என்று எல்லோரும் யோசிக்கிறாங்க. அப்படியெல்லாம் இல்லை. நாங்க அடிக்கடி பேசிக்கவும், சந்திக்கவும் செய்வோம்.

“இறுதியாக, என்னைவிட வயதில் மூத்தவர் விஜய் சேதுபதி என்பதை இங்கே பதிவு செய்கிறேன். (சிரித்தவாறு). கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவர் என் பக்கம் திரும்பி, ‘சிவா, நீங்க சூப்பர் ஃபிகர்’ என்று சொன்னாரு. ரொம்ப நாள் கழித்து பார்க்கும்போது பேச இந்த ஒரு விஷயம் தான் இருக்கா? என்று கேட்டேன். நாங்க மூன்று பேரும் ஒண்ணா இங்க வந்ததே எனக்கு சந்தோசம் தான்” என்றார்.

0a4d

விஜய் சேதுபதி பேசுகையில், “நான் சிவா நடித்த ‘ரெமோ’ படத்தின் முன்னோட்டதைப் பார்த்தேன். நிஜமாகவே மிகவும் அருமையாக நடித்திருக்கிறார். ‘முடிஞ்சா இவன  புடி’ ட்ரைலர் நிஜமாகவே அருமையாக உள்ளது. இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் எப்போதும் இயக்குநர் ஜாம்பவான் தான். அவர் சிறந்த நடிகரும் கூட.

“கே.எஸ்.ரவிக்குமார் சாரோட நடிக்கும்போது, அவரிடம் இருந்த இயக்குநர் என்ற முகம் வெளிவரவே இல்லை. ஆனா, இயக்குநர் என்ற கர்வம் எப்போதும் அவரிடம் இருக்கும். முக்கியமா தனுஷூக்கு அப்பாவா ‘தங்கமகன்’ படத்துல கலக்கியிருப்பாரு. அவர் இன்னும் நிறைய படங்கள் நடிக்கணும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார் விஜய் சேதுபதி.