மட்டி – விமர்சனம்
நடிப்பு: யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணா, அமித் ஷிவதாஸ் நாயர், அனுஷா சுரேஷ்
இயக்கம்: டாக்டர் பிரகபல்
இசை: ரவி பஸ்ரூர்
தயாரிப்பு: பிகே 7 கிரியேஷன்ஸ் சார்பில் பிரேமா கிருஷ்ணதாஸ்
காடு, மேடு, சேறு, சகதி நிறைந்த அபாயகரமான மண்சாலைகளில் பயங்கரமாய் நடக்கும் கார் பந்தயத்தை ‘மட்டி ரேஸ்’ என்பார்கள். இந்த மட்டி ரேஸை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் இந்தியப்படம் என்று விளம்பரப்படுத்தப்பட்டு, முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்க, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருக்கும் படம் ‘மட்டி’.
கதை மிகவும் எளிமையானது. அண்ணன் தம்பி இருவரும் ஒரு பிரச்சினையால் பிரிந்து வாழ்கிறார்கள். தம்பி கல்லூரியில் வில்லனை ஒரு விவகாரத்தில் சீண்ட, அந்த வில்லன் உன்னை மட்டி ரேஸில் தோற்கடித்து எப்படி அழிக்கிறேன் பார் என சபதம் எடுக்கிறார். இந்த நிலையில் தம்பியைக் காக்க அண்ணன் வருகிறார். அண்ணன் தம்பி இருவரும் இணைந்து வில்லனை மட்டி ரேசில் ஜெயித்து எப்படி வெல்கிறார்கள் என்பதே படம்.
ஹாலிவுட்டில் மட்டுமே இது மாதிரியான ரேஸ் காட்சிகளின் பிரமாண்டத்தைப் பார்த்திருக்கிறோம். தமிழில் இதைப் பார்க்க அழகாக இருக்கிறது. இந்தியாவின் முதல் மட்டி ரேஸ் படமாக வந்திருக்கிறது இந்த மட்டி.
மட்டி ரேஸ் என்பதே இங்கு பலர் அறிந்திராத புதிதான ஒன்று, ஆனால் அதைச் சரியாக திரைக்கதையில் கோர்த்து, ஒரு பரபரப்பான ஆக்ஷன் படமாக உருவாக்கி இருக்கிறார்கள். நடிகர் ரிதன் மற்றும் கார்த்தி இருவரும் அண்ணன் தம்பியாகக் கலக்கியிருக்கிறார்கள்.
நாயகனாக ரிதன் மலைகளில் கார் ஓட்டும் காட்சிகளிலும், வில்லனுடனான சண்டைக்காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார். தம்பிக்காக நிற்கும் காட்சிகளில் மனதைக் கவர்கிறார். தம்பியாக கார்த்தி. நாயகனுக்கு இணையான பாத்திரம். அண்ணனை முறைப்பதும், முரண்படுவதும் என்றிருந்தவர், க்ளைமாக்ஸில் அண்ணனுடன் இணைந்து வில்லனை ஜெயிக்கும் இடங்களில் ஈர்க்கிறார்.
நாயகிகளாக வரும் அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் ஆகியோருக்குப் பெரிதாக வேலை ஒன்றும் இல்லை. தங்களுக்குத் தரப்பட்ட பாத்திரத்தைச் சிறப்பாகச் செய்து ரசிகர்களைக் கவர முயன்றிருக்கிறார்கள். வில்லன் தான் வரும் இடங்களில் எல்லாம் மிரட்டியிருக்கிறார்.
படத்தில் காதல், காமெடியை விட ஆக்சன் காட்சிகள் தான் மேலோங்கி இருக்கிறது. ஆனால் அனைத்து ஆக்சன் காட்சிகளும் ரசிகர்களைக் கவரும்படி உள்ளன. அதிலும் க்ளைமாக்ஸ் இறுதி 20 நிமிடங்கள் திரையரங்கே அதிர்கிறது. எப்படி இந்த ரேஸை திரையில் கொண்டு வந்தார்கள் என ஆச்சர்யமாக இருக்கிறது.காடு மலைமுகட்டில் முனையில் தாறுமாறாக வேகமாகப் பறந்து செல்லும் கார்களை கேமரா பின்தொடர்ந்து துரத்தித் துரத்திப் பயணித்து படம்பிடித்திருக்கிறது. ஒளிப்பதிவு செய்திருக்கும் கே. ஜி. ரதீஷுக்கு தனி பூங்கொத்து தரலாம்.
கே. ஜி. எஃப்’ புகழ் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். அனைத்து இடங்களிலும் கே ஜி எஃப் வாடை பலமாக அடிக்கிறது. ஆனால் படத்திற்கு நன்றாகப் பொருந்தியிருக்கிறது.
ஷான் லோகேஷ் படத்தொகுப்பில் படம் பரபரப்பாகச் செல்கிறது.
’புலி முருகன்’ புகழ் ஆர்.பி.பாலா இப்படத்திற்குத் தமிழில் வசனம் எழுதி இருக்கிறார்.
ஆக்சன் படம் என்பதால் இயக்குநர் காதல் காமெடி காட்சிகளில் கவனம் செலுத்தவில்லை. க்ளைமாக்ஸில் இருக்கும் பரபரப்பு, படம் முழுவதும் இருந்திருந்தால் இன்னும் ரசிக்கும்படி இருந்திருக்கும்.
’மட்டி’ – கார் பந்தய சாகசங்களை விரும்பும் ரசிகர்களுக்கு செம விருந்து!