இயக்குனர் மிருணாள் சென் இயற்கை எய்தினார்: ஜன. 2ஆம் தேதி இறுதிச்சடங்கு

மசாலா சினிமாவுக்கு மாற்றாக மக்கள் சினிமாவை முன்னெடுத்து உலகப்புகழ் பெற்ற வங்காள இயக்குனர் மிருணாள் சென் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 95. முதுமைக்கால நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று (30-12-2018) காலை 10.30 மணிக்கு காலமானார். அவரது இறுதிச் சடங்கு வருகிற (ஜனவரி) 2ஆம் தேதி நடைபெறும் என தெரிகிறது.

1923ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி வங்காளத்தில் உள்ள பரித்பூரில் மிருணாள் சென் பிறந்தார். தற்போது பரித்பூர் வங்கதேசத்தில் இருக்கிறது. கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பட்டம் பயின்றார்.

திரைப்படங்கள் குறித்து அதிகம் படித்ததால், திரைப்படத்துறையில் நாட்டம் கொண்டு இயக்குநராக மிருணாள் சென் மாறினார். 1956ஆம் ஆண்டு ‘ராத் போர்’ என்ற படத்தை இயக்கினார். இவரின் இந்த முதல் படம் தோல்வியில் முடிந்தது. அதன்பின் ‘ஆகாஷ் குசும்’ (1965), ‘புவுன் ஷோம்’ (1969), ‘கொல்கத்தா 71 அன்ட் இன்டர்வியூ’ (1971), ‘காந்தர்’ (1974), ‘கோரஸ் (1975), ‘மிரிகயா’ (1977), ‘அகாலேர் சந்தானே’ (1981), ‘ஏக் தின் அச்சானக்’ (1989), ‘அமர் புவன்’ (2002) ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

மிருணாள் சென் இயக்கிய திரைப்படங்கள் பெரும்பாலும் நடுத்தர குடும்பத்து மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அவர்களின் அடிப்படை வாழ்க்கை சிரமங்கள் ஆகியவற்றைப் படம் பிடித்துக் காட்டுவதாகவும், பெரும்பாலும் கொல்கத்தா நகரத்திலேயே எளிமையாக எடுக்கப்பட்ட படமாகவும் இருக்கும். இவரின் கதையில் கொல்கத்தா நகரம் என்பது ஒரு கதாபாத்திரமாகவே உலவும்.

இவர் இயக்கிய ‘புவன் ஷோம்’ எனும் திரைப்படம் இவரை உலக அளவில் அடையாளம் காணச் செய்தது. இவர் கடந்த 1983ஆம் ஆண்டு இயக்கிய ‘காரிஜி’ என்ற வங்கமொழி திரைப்படம் கேன் திரைப்ட விழாவில் ஜூரி விருதைப் பெற்றது. ‘தாதா சாஹேப்’ விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை மிருணாள் சென் பெற்றிருக்கிறார்.

கடைசியாக ‘அமார் புவன்’ ( இது எனது நிலம்) என்ற திரைப்படத்தை 2002ஆம் ஆண்டு இயக்கினார் மிருணாள் சென் அதன்பின் இயக்கவில்லை.

மிருணாள் சென், மார்க்சியத் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டு, கொல்கத்தா கம்யூனிஸ்ட் கட்சியின் கலாச்சாரப் பிரிவில் முக்கிய பொறுப்புகள் வகித்தார். கடந்த 1998ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் மிருணாள் சென் இருந்தார்.

மிருணாள் சென் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். “முதுபெரும் திரை இயக்குநர் மிருணாள் சென் மறைந்த செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். ‘புவன் ஷோம்’, ‘கொல்கத்தா’ ஆகிய திரைப்படங்கள் இவரின் திறமையையும், நாட்டின் சமூக விஷயங்களையும் அந்த காலத்தில் உணர்த்தின. வங்காள மக்களுக்கு மட்டுமல்ல, இந்திய மக்கள் அனைவருக்கும், உலக சினிமாவுக்கும் அவரின் மறைவு பேரிழப்பாகும்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ட்விட்டரில் கூறுகையில், “ மிருணாள் சென் மறைவு வேதனை அளிக்கிறது. திரைத்துறைக்கு அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரின் குடும்பத்தாருக்கு அனுதாபங்களைத் தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “ இந்திய சினிமா, உலக கலாச்சாரம், இந்திய கலாச்சார மதிப்புகள் அனைத்துக்கும் மிருணாள் சென் மறைவு இழப்பாகும். அவரின் மறைவுக்கு எங்களின் ஆழ்ந்த அனுதாபங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.