“மக்கள் கேட்க நினைத்த கேள்விகளை ‘வேலைக்காரன்’ மூலம் கேட்டிருக்கிறேன்!” – இயக்குனர் மோகன் ராஜா
சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில், 24ஏஎம் ஸ்டுடியோஸ் ஆர்.டி.ராஜா தயாரிப்பில், ‘தனி ஒருவன்’ புகழ் மோகன் ராஜா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘வேலைக்காரன்’.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த படம் நாளை (22ஆம் தேதி) உலகம் முழுவதும் வெளியாவதையொட்டி இதன் இயக்குனர் மோகன் ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சிவகார்த்திகேயன் இல்லைனா இந்தப் படமே நடந்திருக்காது. ‘தனி ஒருவன்’ கொடுத்த அழுத்தத்தை நாம் செய்யப்போற படத்துலயும் கொடுக்கணும்னு கேட்டார். படத்துக்கு என்ன தேவையோ அதை தயங்காமல் பண்ணுங்கனு பெரிய தெம்பை கொடுத்தார் தயாரிப்பாளர் ஆர்டி ராஜா.
படத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. வீம்புக்கு நடிகர்களை நடிக்க வைக்காமல் எல்லோருக்கும் நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறேன். ஒளிப்பதிவாளர் ராம்ஜி உழைப்பு அபரிமிதமானது. அவருடன் 3வது படமும் இணைந்து பண்ணுவேன்.
அனிருத் சின்ன பையன், ஆனால் பெரிய திறமையாளர். கதையை புரிஞ்சிக்கிட்டு சிறப்பான இசையைக் கொடுத்திருக்கிறார். நயன்தாரா, தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம். அவர் ஒரு படத்தில் இருந்தாலே அது மிகவும் சென்சிட்டிவான படமாகத்தான் இருக்கும். அந்த அளவுக்கு பக்குவமான நடிகையாகி இருக்கிறார்.
ஃபகத் பாசில், அரவிந்த்சாமி போன்ற மிகச் சிறந்த நடிகர்களை என் படங்களில் இயக்கியதில் நான் பெருமைப்படுகிறேன்.
1989-ல் ‘ஒரு தொட்டில் சபதம்’ படத்தில் இருந்து சினிமாவில் இருந்து வருகிறேன். நிறைய பேரிடம் ஆலோசித்து தான் படங்களை எடுத்து வருகிறேன். 14 உதவி இயக்குனர்கள், 2 ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள் சுபா ஆகியோருடன் நிறைய விவாதித்து அவர்களின் கருத்துகளையும் ஏற்றுக் கொண்டு தான் இரண்டு படங்களையும் உருவாக்கியிருக்கிறேன்.
‘வேலைக்காரன்’ படத்தில் சமூகத்தில் பலர் கேட்க நினைத்த கேள்விகளை கேட்டிருக்கிறேன். 20 வருடங்களாக என் மனதுக்குள் இருந்த கேள்விகளை கேட்க, தகுதியை வளர்த்துக் கொண்டேன். ‘தனி ஒருவன்’, ஒரு அடையாளத்தைக் கொடுத்தது. இந்த படத்தில் மக்கள் கேட்க நினைத்த கேள்விகளையும் சேர்த்து கேட்டிருக்கிறேன்.
பெரிய படங்களிலும் கருத்து சொல்ல முடியும், அதற்கான பெரிய மார்க்கெட்டை உருவாக்க முடியும் என்பதை இந்த படத்தில் முயற்சி செய்திருக்கிறோம். சினிமா தரும் எண்டர்டெயின்மெண்டை விட நியூஸ் சேனல்கள் தரும் சமூக பிரச்சினைகள், அரசியல் அவலங்கள் போன்ற எண்டர்டெயின்மெண்ட் தான் இப்போது அதிகம்.
என்னை நம்பி கொடுத்த இவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்கும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணத்துக்காக மட்டுமே படம் இயக்குவதில் எனக்கு உடன்பாடில்லை. படத்தில் ‘தப்பை யாரும் விரும்பி பண்றதில்ல. ஜெயிக்கறதுக்காக தான் பண்றாங்க. நன்மை ஜெயிக்கும்னு நிரூபிச்சா நன்மையை விரும்பி பண்ணுவாங்க’னு ஒரு வசனம் இருக்கு, அது தான் உண்மை.
ஒரு நல்ல படம் வெளிவருவதில் நிறைய தடைகள் இருக்கின்றன. பரீட்சார்த்தமான படங்களின் பட்ஜெட் எப்போதும் 5 கோடிக்குள் தான் இருக்கும். ஆனால் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது. இங்கு நினைத்த படங்களை செய்ய யாருக்கும் உரிமை கிடைப்பதில்லை. தயாரிப்பாளர், ஹீரோ ஆகியோரை திருப்திப்படுத்தத் தான் படங்கள் எடுக்க முடியும். நமக்கென ஒரு மேடை அமைத்த பிறகுதான் நாம் நினைத்ததை எடுக்க முடியும்.
வேலைக்காரர்கள், முதலாளித்துவம் பற்றிய குறைகளையும் இந்த படத்தில் சொல்லியிருக்கிறேன். இந்த சமூகத்தில் உழைப்புக்கான ஊதியம் பெரும்பாலானோருக்கு கிடைப்பதில்லை. அதையும் சினிமா மூலம் சொல்ல முயற்சித்திருகிறேன்.
கேள்வி கேட்டு புரட்சி செய்த காலம் முடிந்து விட்டது, பதில் சொல்லி புரட்சி செய்ய வேண்டிய காலம். இந்த படத்துக்குப் பிறகு அது நடக்கும். சமூகத்தை பற்றி பேசும் படங்கள் நேர்மறையாக மட்டும் தான் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன்.
இவ்வாறு இயக்குனர் மோகன் ராஜா கூறினார்.