“ஓபிஎஸ்ஸூம், ஈபிஎஸ்ஸூம் மோடிக்கு வாய்த்த சிறந்த அடிமைகள்!”

“ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் தமிழகத்தில் மோடிக்கு வாய்த்த சிறந்த அடிமைகள்” என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

மதுரையில் திமுக சார்பில் நடைபெற்ற நீட் தேர்வு குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களிடம் துரைமுருகன் பேசியதாவது:

‘நாங்கள் எதிர்க்கட்சி. எங்களால் முடிந்தவரை, எங்கள் உடலில் பலமிருக்கும் வரை ஓரிரு இடங்களில் குளங்களை தூர் வாருகிறோம். ஆனால், தமிழக அரசிடம் பணம் உள்ளது. சொன்னால் செய்வதற்கு அதிகாரிகள் இருக்கிறார்கள். அதற்கென்று ஓர் அமைச்சர் இருக்கிறார். இதுவரையில் அரசு சார்பில் எத்தனை குளங்கள் தூர் வாரப்பட்டன?

ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸும் தமிழகத்தில் மோடிக்கு வாய்த்த சிறந்த அடிமைகள். அவர்கள் தமிழக மக்களுக்காக மோடியை சந்தித்திருந்தால் நீட் தேர்வு விலக்கு கோரும் சட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் பார்வைக்கு எடுத்துச் சென்றிருப்பார்கள்.

அதிமுக ஆட்சி எவ்வளவு நாள் நீடிக்கும் என்று கணித்துச் சொல்ல எனக்கு அரசியல் ஆருடம் தெரியாது. அனுபவத்தின் அடிப்படையில் சொல்ல வேண்டுமென்றால் குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப்பின் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சிக்கு ஒரு முடிவு வந்துவிடும்.

கருணாநிதியின் சட்டப்பேரவை வைரவிழாவுக்கு பாஜகவை அழைக்கவில்லை என்ற கோபத்தில், கூட்டணிக்காகவே திமுக வைரவிழா நடத்துவதாக சொல்கிறார்கள். அதை பொருட்படுத்த வேண்டியதில்லை.

இவ்வாறு துரைமுருகன் கூறினார்.