“பயங்கரவாதம் இன்றைய இராவணன்”: மோடியின் பேச்சுக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு!
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் விஜயதசமியை முன்னிட்டு கடந்த 11ஆம் தேதியன்று நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
இராவணனின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்துக் கொண்டாடும் இந்நிகழ்ச்சியில் மோடி பேசுகையில், “பழங்காலத்தில் இருந்த அரக்கன் இராவணன் தற்போது புதிய வடிவத்தில் வந்திருக்கிறான். அவனது புதிய வடிவத்தின் பெயர்தான் பயங்கரவாதம்” என்று கூறினார்.
மோடியின் இந்த பேச்சுக்கு இலங்கையில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இலங்கையில் இராவணனை கடவுளாகவும், வேந்தனாகவும் போற்றும் பல்வேறு பிரிவினர் மோடியின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
புத்தத் துறவியும், இராவணப் படை என்ற அமைப்பின் தலைவருமான இட்டப்பானே சத்தாதிஸா இது குறித்து கூறியதாவது:
இலங்கை வேந்தன் இராவணனை பயங்கரவாதியுடன் ஒப்பிட்டு பேசிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இராவணப் படை சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இராமாயணத்தில்கூட இராவணன் பயங்கரவாதியாக சித்திரிக்கப்படவில்லை. அப்படியிருக்கையில், மோடியின் இந்தப் பேச்சு இராவணனை இழிவுப்படுத்தும் விதமாக உள்ளது.
இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்காக அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு மோடியின் இந்தக் கருத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
மோடியின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையில் இராவண அமைப்புகள் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும். இது தொடர்பாக இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மனு அளிக்கப்படும்.
இவ்வாறு இட்டப்பானே சத்தாதிஸா கூறினார்.