“வருகிற ஜனவரி 1ஆம் தேதி சாதாரண தினமாக இருக்காது”: மோடி மிரட்டல்!
நாட்டின் 71-வது சுதந்திரதினமான இன்று செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.
விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக பிரதமர் மோடிக்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மோடி, ட்விட்டரிலும் நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இந்நிலையில் கொடியேற்றி பிரதமர் தனது உரையில் கூறியதாவது:
இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட பெண்கள் மற்றும் ஆண்களை நாம் நினைவில் கொள்வோம். கோரக்பூர் துயரம் நாடு சமீபத்தில் சந்தித்த நெருக்கடியாகும். பாதிக்கப்பட்டோருக்கு நாட்டு மக்கள் தோள் கொடுப்பார்கள்.
இந்த ஆண்டு நாட்டுக்கு சிறப்பான ஆண்டாகும். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-வது ஆண்டு, சம்பரான் சத்யாகிரகத்தின் 100-வது ஆண்டு, கணேஷ் உத்சவின் 125-வது ஆண்டு ஆகியவை இந்த ஆண்டின் சிறப்பம்சம்.
ஜனவரி 1, 2018 என்பது சாதாரண தினமல்ல, இந்த நூற்றாண்டில் பிறந்தவர்கள் 18 வயதை எட்டுகின்றனர். அவர்கள் நம் தேசத்தின் ‘பாக்ய விதாதாஸ்’ ஆவார்கள்.
புதிய இந்தியாவை படைக்க அனைவரும் உறுதி பூணுவோம். நம் தேசத்தில் யாரும் பெரியரும் கிடையாது யாரும் சிறியவரும் கிடையாது அனைவரும் சமமே. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து நாட்டில் நம்பிக்கையான மாற்றத்துக்காகப் பாடுபடுவோம். புதிய இந்தியா என்ற உறுதி மொழியை மனதில் ஏற்று 2022க்குள் புதிய இந்தியா என்ற இலக்கை அடைய முயன்றிடுவோம். இந்த சுதந்திர தின விழாவை இந்த உறுதிமொழி ஏற்கும் நாளாக கொண்டாடுவோம்.
நாட்டு மக்களைக் காப்பாற்ற பாடுபடும் ராணுவ வீரர்களைப் பாராட்டுகிறேன். ஒரு பதவி ஒரு பென்ஷன் திட்டத்தின் மூலம் நம் ராணுவத்தினர்கள் மேலும் தைரியமாகியுள்ளனர்.
ஜிஎஸ்டி கூட்டுறவு கூட்டாட்சித்துவத்தின் உணர்வை காட்டுகிறது, தேசமே ஒன்றிணைந்து ஜிஎஸ்டிக்கு ஆதரவு அளித்துள்ளது. தொழில்நுட்பத்தின் பங்கும் உதவியது. இது தொழில்நுட்பத்தின் வெற்றியாகும்.
தீவிரவாதத்திற்கு கருணை காட்ட முடியாது. அவர்கள் மைய நீரோட்டத்தில் இணைந்து அவர்களின் பிரச்சினையை பேசித் தீர்த்துக் கொள்ளலாம். பயங்கரவாதம், பயங்கரவாதிகளை அடக்குவதில் மென்மையான போக்கு என்ற பேச்சுக்கே இடமில்லை. உலக அரங்கில் இந்தியாவின் தகுதி உயர்ந்து கொண்டேயிருக்கிறது. பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக உலக நாடுகள் நம் பக்கம் உள்ளன. .இதற்கு உதவிபுரியும் அனைத்து நாடுகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு துப்பாக்கி தோட்டாக்கள் அல்ல. காஷ்மீரி மக்களை அரவணைத்துச் செல்வதே அதற்குத் தீர்வு. ஜம்மு காஷ்மீரின் சொர்க்கபூமி தகுதியை நாம் அனைவரும் சேர்ந்து மீண்டும் மீட்டெடுப்போம்.
நாட்டில் 9 கோடி விவசாயிகள் மண் சுகாதார அட்டைகள் பெற்றுள்ளனர். 2.5 கோடிக்கும் அதிகமான ஏழைப் பெண்கள் சமையல் எரிவாயு இணைப்புப் பெற்றுள்ளனர். பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஊழலை ஒழிக்க மேற்கொள்ளப்பட்டது.
தொழிலாளர் சட்டங்களை திருத்தி பெண்கள் சுதந்திரமாக பயமின்றி நள்ளிரவிலும் பணிக்குப் பாதுகாப்பாகச் செல்வதை உறுதி செய்துள்ளோம். முத்தலாக்கினால் சிக்கலுக்குள்ளாகும் பெண்கள் பக்கம் நாங்கள் இருக்கிறோம். பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில் நாம் வெற்றி பெறுவோம்.
சாதியும் மதமும் ஒருபோதும் உதவாது. மதத்தின் பெயரால் சில வேளைகளில் சிலர் சில காரியங்களில் ஈடுபடுவது நாட்டின் அடிப்படையையே உலுக்குகிறது. நம்பிக்கையின் பெயரில் நாம் வன்முறையில் ஈடுபடுதல் கூடாது. இது புத்தர் அவதரித்த நாடு. அது நம்பிக்கையின் பெயரில் செய்யப்படும் வன்முறைகளை ஏற்பதில்லை. முன்பு வெள்ளையனே வெளியேறு என்ற முழக்கம் தற்போது ‘இந்தியாவை ஒற்றுமைப்படுத்து’ என்பது முழக்கம்.
பணமதிப்பு நீக்கத்தின் மூலம் ஊழல் ஒழிப்பில் சில மைல்கற்களை எட்டியுள்ளோம். அயல்நாட்டில் பதுக்கப்பட்ட பணம் மையநீரோட்டத்துக்கு வந்தாகவேண்டும். பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு ரூ.3 லட்சம் கோடி கருப்புப் பணம் மைய நீரோட்டத்துக்கு வந்துள்ளது. தங்களது வருவாய் இவ்வளவுதான் என்று காட்டியவர்கள் ஆனால் அதற்கும் மேலாக சம்பாதிப்பவர்கள் என்று 18 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 1.75 லட்சம் போலி நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டன. இதில் பல நிறுவனங்கள் ஒரே முகவரியிலிருந்து செயல்பட்டு வந்துள்ளது. நாட்டின் இளைஞர்கள் எதிர்காலத்திற்காக, நான் கருப்புப் பணத்துக்கு எதிராக போரைத் தொடங்கியுள்ளேன்.
நாம் ‘புதிய இந்தியா’ என்ற லட்சியத்தை அடைய வேண்டும். உடனடியாக இதற்காக நாம் பாடுபடவேண்டும், காலத்தில் ஒன்றைச் செய்யாவிடில் விரும்பத் தகுந்த பலன்கள் கிட்டாது என்று நம் புனித நூல்களில் கூறப்பட்டுள்ளது.
இளைஞர்களின் கனவுகளைப் பூர்த்தி செய்யும் புதிய இந்தியாவைக் கட்டமைப்போம். ஊழலுக்கு எதிராக சமரசமில்லாத இந்தியாவை உருவாக்குவோம். தூய்மையும் வளமையும் மிகுந்த இந்தியாவை உருவாக்குவோம்.
இவ்வாறு பேசினார் பிரதமர் மோடி.