“கேடி பில்லா கில்லாடி ரங்கா’னா அது நீங்க தான் மோடி அண்ணே…!”

என்னண்ணே இப்படி பண்ணீட்டீங்க… குடுகுடுப்பைக்காரன் மாதிரி நடுராத்திரியில வந்து 500,1000 ரூபா நோட்டெல்லாம் ‘செல்லாது…செல்லாது’ன்னு நாட்டாமை தீர்ப்பு வாசிச்ச மாதிரி சொல்லிட்டுப் போயிட்டீங்க. இங்க ஊரே கதிகலங்கிப் போச்சுசுண்ணே!  காலையில எழுந்திருச்சு காபி குடிக்கப் போறவன், வண்டிக்கு பெட்ரோல் போடுறவன், கல்யாணம் -கருமாதி செலவுக்கு கடன் வாங்கினவன், முதல் நாள் மகளிர் குழு கடன் வாங்குன பொம்பளைக இப்படி எல்லாரும் கிறுக்குப் பிடிச்சமாதிரி ஆயிட்டாங்க. உசிரக்குடுத்து நாயா பேயா உழைச்ச காசை திடீர்னு ஒரு நாள் ராத்திரியில செல்லாதுன்னா மனுசன் என்ன பாடுபடுவான்னு உங்களுக்கு தெரியாதுண்ணே. அதெல்லாம் மனுசனா பொறந்தவனுக்குத்தான் தெரியும்! பேங்குல குடுத்து மாத்திக்கலாங்குற விஷயம் தெரியுறதுக்கே ரெண்டு, மூணு நாளாகிப்போச்சு!

ஏன்டா இப்படி கிறுக்குத்தனம் பண்றீங்கன்னு கேட்டா, “நாங்க கருப்புப்பணத்தை பிடிக்கப் போறோங்”குறான் உங்க ஆளு. அதென்னடா புதுசா கருப்புப்பணம்? அது எங்கடா இருக்கு?னு கேட்டா, “சட்டவிரோதமா சம்பாதிக்கிற பணம், அரசுக்கு வரிகட்டாம ஏய்க்கிற பணம்தான் கருப்புப் பணம்”னு விளக்கம் சொல்லுறான். நீ சொல்ற ஆளுக எல்லாம் ஊருக்குள்ள நெஞ்ச நிமித்திக்கிட்டு திரியுறானே…நேரா போயி பிடிக்க வேண்டியதுதானே. வரி கட்டாதவன் யாருன்னு தெரியாமவாடா இத்தனை நாளா ஆட்சி செஞ்சீங்க? அதை விட்டுட்டு சும்மா இருக்குறவன் உசிரை ஏன்டா வாங்குறீங்க?னு மடக்குனா, உடனே “தேசம், பக்தி, தீவிரவாதி, பாரதமாதா” அப்படீனு சம்பந்தமில்லாம உங்கள மாதிரியே உளறுறானுக! நான் உழைச்ச காசுக்கும் உங்க பாரதமாதாவுக்கும் என்னண்ணே சம்பந்தம்? அது என்ன ரிசர்வ்பேங்கு கவர்னரா? புரோக்கரா? புரியலையேண்ணே!

வெளிநாட்டுல 70 லட்சம் கோடி ரூபாய் கருப்புப்பணத்தை பதுக்கி வச்சிருக்குறதா உங்க உளவுத்துறை புலிகளே சொல்லுது! நீங்க என்னடானா இந்த 15 நாளா டிவி, பேப்பருனு எங்க திரும்புனாலும் கருப்புப்பணம்…கருப்புப்பணம்னு சாமியாடி ஊரைச் சாகடிக்கிறீங்க! நாட்டுல இருக்குறவன எல்லாம் கேணப்பயலா ஆக்குறீங்க!

மோடியண்ணே … உனக்கு கருப்புப் பணம்தான வேணும். டாடா பிர்லா,அம்பானி,அதானி மாதிரி பெரிய வெங்காயத்தை எல்லாம் உன்னால பிடிக்க முடியாதுன்னு எங்களுக்குத் தெரியும்! வாங்கித்தின்ற நாயிக்கு என்னைக்குமே நாக்கு எழும்பாதுணே!

நீ எங்க ஊரு பக்கம் ஒருநிமிஷம் வாண்ணே…உனக்கு ரொம்ப ஈசியான ஆளா காட்டுறேன்.

எங்க ஊருல 500 ஏக்கர் நிலத்தை வாங்கி பத்திரம் முடிச்சு பட்டாவோட ஒருத்தன் இருக்கான். ஆளு யாருன்னு தெரியல. ஆனா ஓ.பி.எஸ்தான் ஒனருனு ஊரே அடிச்சு சொல்லுது! சும்மா திரிஞ்ச ஒருத்தன் பிரசிடண்டாகி 5 கோடியில வீடு கட்டி, அதுல 50,000 ரூபாய் நாய வாங்கி குடிவச்சுருக்கான்! ஒரு மீட்டர் வட்டிக்காரப்பய 3 கோடியில வீடு கட்டி, உள்ள ரிமோட் கட்டில்ல படுத்துக் கிடக்குறான்! வருசநாட்டு மலையில பாதிமலையை வளைச்சுப் போட்டிருக்காரு எங்க எம்.எல்.ஏ. தங்கத்தமிழ் செல்வன்! உங்க ஆளு ஒருத்தன் அறநிலையத்துறை நிலத்தை பிளாட் போட்டு வித்துப்புட்டு யோகா பண்ணிட்டிருக்காரு! பெரிய திமிங்கலத்தை பிடிக்க முடியாட்டியும் இப்படி ரெண்டு தவளைகளையாவது வந்து பிடிண்ணே…. மோடின்னா ஒரு கெத்து வேணாமாணே?

 “டேய்…58 இஞ்சு நெஞ்சுக்கறி வச்சிருக்காருடா எங்க மோடி. ஒழுங்கா கருப்புப் பணத்தையெல்லாம் பேங்குல போட்டுருங்கடா”னு ஒங்க சிஷ்யப்புள்ளைக விதவிதமா மிரட்டித்தான் பாக்குறாங்க. ஆனா ஒரு பய கூட கண்டுக்க மாட்டேங்குறான். பஸ்ல டெய்லி கலக்சன்ல வர்ற நூறு ரூபா நோட்டை எல்லாம் ஆளுங்கட்சிக்காரங்க அள்ளிக்கிட்டு, பழைய 500, 1000 நோட்டுகள வீசிட்டுப் போயிர்றான்! பேங்கு மானேஜரெல்லாம் வரியில்லாம கணக்குப் பிரிச்சு எப்படி டெபாசிட் பண்றதுன்னு ‘பார்ட்டி’களுக்கு ஐடியா குடுக்குறாங்க! எஸ்.பி.ஆபீசுல வாரவட்டி கிரிமினல் லிஸ்ட்டுல இருக்குற ஒருத்தன் 500 க்கு 100 கமிசன் வச்சு நோட்டு மாத்துறான்! 20% கமிசனுக்கு எத்தனை நூறுரூபா நோட்டும் வாங்கிக்கலாம்னு ஏலம் போடுறான் பலபேரு! ஏடிஎம் மிசின்லய 100 ரூபா நோட்டு காணாமப் போயிருச்சு! என்னப்பா இப்படி பண்றீங்களேப்பா…னு கேட்டா, “அண்ணே நாங்கெல்லாம் ஒன்பதாவது பாசுண்ணே. மோடி பத்தாவது பெயிலுண்ணே!” அப்படீனு நக்கலா பேசுறாய்ங்க!  அடடா இப்படி இடத்துல தேசபக்தி பேசுறவன் யாராவது இருந்தா நல்லா இருக்குமேன்னு தேடிப்பாத்தா, உங்க காவிப்படையில ஒருத்தனக் கூட அந்த ஏரியாவிலேயே காணோம்னா பாத்துக்குங்க!

ஒரு ஊர்ல ரெம்ப கெட்டவன் ஒருத்தன் இருந்தானாம். அவனோட மகனுக்கு, ‘நம்ம அப்பாவைவிட பெரிய ஆளா வரணும்’னு ஆசை! அதனால ஊரே குடிக்குற தண்ணீர் தொட்டியில பீயைக் கரைச்சு ஊத்திவிட்டானாம்! அதுமாதிரி நான் காங்கிரச விட கெட்டிக்காரன்னு காட்டுறதுக்கு இந்தக் கூத்து பண்றீங்களோனு தோணுது!

எங்க ஊரு கஞ்சா வியாபாரிக்கிட்ட ஒரு வழக்கம் இருக்குண்ணே. திடீர்னு ஆந்திராவுக்கு வேலைக்கு போறேன்னு பையைத் தூக்கிகிட்டு கிளம்புவான். ஒரு ஆறு மாசம் கழிச்சு பார்த்தா வெளிநாட்டுல இருந்து வர்றவன் மாதிரி டிப்டாப்பா வருவான். என்னடான்னு விசாரிச்சா, கஞ்சா வியாரத்துக்கு போயிட்டு வந்திருக்கான்னு சொல்வாங்க! அது மாதிரிதாண்ணே உங்க பேச்சும் வேலையும் இருக்கு! ராமன் கோயில் கட்டுறோம்னு சொல்லிக்கிட்டு, பாபர் மசூதிய இடிச்சீங்க! தீவிரவாதத்தை ஒழிக்கிறேன்னு சொல்லிக்கிட்டே, முஸ்லீமை கொல்றீங்க! நாட்டப் பாதுகாக்கிறேனு சொல்லிக்கிட்டே, காஷ்மீர் மக்களை கொல்றீங்க! தெறமையான டாக்டர்களா உருவாக்கப் போறேனு சொல்லிக்கிட்டு, இல்லாத வீட்டுப் புள்ளைகள படிக்க விடாம பண்றீங்க! இப்ப கருப்புப் பணத்தை ஒழிக்கப்போறேனு சொல்லிக்கிட்டு விவசாயி, தொழிலாளி, சிறு வியாபாரிகிட்ட இருக்குற பணத்தைப் புடுங்கி பேங்குல போடுறீங்க! அப்புறம் பாதுகாப்பா அதை பெரிய களவாணிககிட்ட நகட்டிக்கிட்டுப் போயிருவீங்க! மோடி அண்ணே…. கேடி பில்லா…கில்லாடி ரங்கானா அது நீங்க ஒரே ஆள்தாண்ணே!

“எல்லாரும் வரிகட்டுனாத்தான நாடு வல்லரசாகும்”னு உங்க ஆளுக இழுக்குறாய்ங்க. என்னமோ இந்தியா வரியே இல்லாத சொர்க்கபூமி மாதிரி பேசுறாய்ங்க! இதுவரைக்கும் வாங்குன வரிக்கு என்ன செஞ்சு கிழிச்சீங்க? உரம்-விதை மானியம், பெட்ரோல் டீசல் மானியம், ரேசன்-சிலிண்டர் மானியம், இலவச மின் இணைப்பு இப்படி இருக்குறத எல்லாம் உருவிக்கிட்டேதான இருக்குறீங்க! அப்புறம் என்ன மயித்துக்கு எங்ககிட்ட புதுசா வரி கட்டச்சொல்றீங்க?

நாட்டுப் பொருளாதாரத்தையே சூறையாடி வெளிநாட்டுல 70 லட்சம் கோடிய கருப்புப்பணமா பதுக்கி வச்சிருக்கான். அவன்கிட்ட சல்லிக்காசை புடுங்க துப்பில்ல! அரசு வங்கிகள்ல 75 லட்சம் கோடிய கடன் வாங்கிட்டு, வட்டி கூட கட்ட முடியாதுன்னு நெஞ்சக் காமிக்கிறான். அதையும் வசூலிக்க தெம்பில்ல! இந்தக் களவாணிகளுக்கு 12 லட்சம் கோடிய வெட்கமில்லாம தள்ளுபடி பண்றீங்களே … உனக்கு எதுக்குண்ணே 58 இஞ்சு நெஞ்சுக்கறி?

எங்களையெல்லாம் கண்ணை மூடி யோகா பண்ணச்சொல்லிட்டு, அவைங்களை எல்லாம் சுவாகா பண்ண வச்சிட்டையேணே!

இந்து…இந்துன்னு ஓயாம கத்துறீங்களே, அந்த இந்துக்கள்ல ஒழுக்கமா உழைச்சுப் பொழைக்கிற இந்துக்கள் எல்லாமே பேங்கு வாசலுக்கு வந்துட்டான்.! லஞ்சம்-ஊழல்- கடத்தல்- ரியல் எஸ்டேட் பண்ற களவாணி இந்துக்கள் ஒருத்தனும் வெளிய தலைகாட்டவே இல்லை. இந்தப்பயலுக எல்லாம் அப்பன் ஆத்தாவை மட்டும் சுத்திப்புட்டு ‘ஞானப்பழம்’ வாங்குற பிள்ளையாரு சாதிக்காரங்க! நீங்களும், உங்க கட்சியும்தான் இவனுகளுக்கு பரமசிவன்- பார்வதி! உழைக்குற இந்து இப்பதான் உங்க ஆளுகள அடையாளம் பார்த்து அடிக்க ஆரம்பிச்சிருக்கான். அனைத்து மாநில டிஜிபி-களை கூட்டிப் பேசினதிலேயே உங்களுக்கு ரொம்ப வலிக்குதுனு புரியுது! என்னேன்னே செய்யுறது? வீட்டுக்குள்ள இருந்தவன வீதியில இழுத்து விட்டது நீங்கதானே! காட்டுல வெளைஞ்சதை மார்க்கெட்டுக்கு கொண்டு போனா வாங்குறதுக்கு ஆள் இல்லை! உரமூட்டை தூக்கப் போனா நூறு ரூபா நோட்டா கேக்குறான்! வட்டிக்காரன் கிட்டப் போன அவனும் 500 ரூபா நோட்டத்தான் காட்டுறான்! காலேஜ்ல படிக்கிற பையனுக்கு பணம் அனுப்பப் போனா, அடுத்தவங்களுக்கு நீங்க அனுப்ப முடியாதுன்னு மானேஜர் விரட்டுறாரு! ‘அடுத்தவன் இல்லையா அது என்னோட சொந்த மகன்தான்’னு கெஞ்சினாலும் ஒத்துக்க மாட்டேங்குறான்! உங்க சட்டத்தாலே பெத்த புள்ளையக் கூட சொந்தம் கொண்டாட முடியலை! அப்புறம் அடிக்காம வேற என்ன என்னண்ணே செய்வான்?

அப்புறம் ஒரு முக்கியமான விசயம்ணே…. “என்னோட அரசு ஏழைகளுக்கானது. கருப்புப் பணத்துக்கு எதிராப் போராடுறோம்”னு பஞ்ச் டயலாக் பேசும்போது மூஞ்சியில‘எபெக்ட்’ பத்தலைண்ணே! சொதப்பலா இருக்கு! உங்ககிட்ட இந்த சமூகம் இன்னும் நிறைய எதிர்பாக்குது! அதனால இன்னும் ‘பெட்டரா’ கொஞ்சம் நடிக்க முயற்சி பண்ணுங்கண்ணேய்!

மாறன்,
விவிசாயிகள் விடுதலை முன்னணி, கம்பம்.

Courtesy: vinavu.com