காந்தி படம் நீக்கம்; மோடி படம் திணிப்பு: காதி அதிகாரிகள், ஊழியர்கள் எதிர்ப்பு!
காதி கிராம தொழில் ஆணையம் (கேவிஐசி) சார்பில் சுவர் நாட்காட்டி மற்றும் டைரி ஆண்டுதோறும் வெளியிடப்படும். இதில் காந்தி தனது இடுப்பில் மட்டும் ஒரு உடையை உடுத்திக்கொண்டு ராட்டையை சுழற்றுவது போன்ற படம் இடம்பெறுவது வழக்கம். மிகவும் பிரபலமான இந்தப் படம் அனைவரது மனதிலும் நீங்கா இடம்பிடித்துள்ளது.
ஆனால் இந்த ஆண்டுக்கான நாட்காட்டி, டைரியின் முகப்பில் காந்திக்கு பதிலாக, மோடி குர்த்தா பைஜாமா உடை அணிந்தபடி நவீன ராட்டையை சுழற்றுவது போன்ற படம் இடம்பெற்றுள்ளது. இதைப் பார்த்த காதி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையடுத்து, மும்பையின் வைல் பார்லே பகுதியில் உள்ள கேவிஐசி தலைமையகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், உணவு இடைவேளையின்போது வாயில் கருப்பு துணியைக் கட்டியபடி மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பெயர் கூற விரும்பாத ஒரு அதிகாரி (கேவிஐசி) கூறும்போது, “கடந்த ஆண்டு மோடியின் படம் நாட்காட்டியில் சேர்க்கப்பட்டது. இப்போது முற்றிலும் காந்தியின் படம் அகற்றப்பட்டுள்ளது. காந்தியின் சிந்தனை, தத்துவம், கொள்கைகளை அரசு கொஞ்சம் கொஞ்சமாக புறக்கணித்து வருவது கவலை அளிக்கிறது” என்றார்.
இது குறித்து கேவிஐசி தலைவர் வினய் குமார் சக்சேனா கூறும்போது, “இதில் வழக்கத்துக்கு மாறாக ஒன்றும் இல்லை. கடந்த காலத்திலும் இது போன்ற மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் மோடி நீண்ட காலமாக காதி உடை அணிகிறார். அதை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தி வருகிறார். இதன் மூலம் காதியின் மிகப் பெரிய விளம்பரத் தூதராக விளங்குகிறார். அவரது ‘மேக் இன் இந்தியா’ உள்ளிட்ட திட்டங்களும் கேவிஐசி கொள்கையுடன் ஒத்துப் போகிறது” என்றார்.