கமல் கட்சியிலிருந்து கமீலா நாசர் விலகியது ஏன்: மறைக்கப்படும் உண்மைகள்
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநிலச் செயலாளர் கமீலா நாசர் அக்கட்சியிலிருந்து திடீரென விலகியுள்ளார். நடிகர் நாசருக்கும், கமல்ஹாசனுக்கும் இடையிலான நெருங்கிய நட்பை நன்கறிந்த திரைத்துறையினரும், செய்தியாளர்களும் கமீலா நாசரின் விலகல் கண்டு வியப்படைந்துள்ளனர்.
“கட்சிக்காக முழுநேரம் பணியாற்றுவதால் குடும்பத்தை கவனிக்க முடியவில்லை. எனது மகன் நடக்க முடியாமல் கஷ்டப்படுகிறார். மகனை வளர்க்கவும், குடும்பத்தை கவனித்துக்கொள்வதற்காகவும் பதவியை ராஜினாமா செய்தேன். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே எனது பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துவிட்டேன். அவர்கள் தற்போது தான் அறிவிக்கின்றனர்” என்று விளக்கமளித்துள்ள கமீலா நாசர், இதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. கூடுதலாக, “சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட அனைவரும் விருப்பமனு அளித்தோம். எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தால் போட்டியிட்டு இருப்பேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
ஏதோ இடிக்கிற மாதிரி தெரிகிறதல்லவா? சற்று விரிவாகப் பார்ப்போம்.
ஏழு ஆண்டுகளுக்கு முன் நடந்தது துரதிர்ஷ்டமான அந்த சம்பவம். 2014ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி நடிகர் நாசர் – கமீலா நாசர் தம்பதியரின் மூத்த மகன் பைசல் தனது நண்பர்களுடன் காரில் சென்றபோது, மகாபலிபுரம் அருகே பயங்கர விபத்தில் சிக்கினார். அவர்களது கார், டேங்கர் லாரி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோரவிபத்தில் காரில் சென்ற 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த பைசல் கவலைக்கிடமான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை காரணமாக உடல்நலம் தேறிவந்த அவர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபின் வீட்டிலிருந்தபடியே மருத்துவ சிகிச்சை பெற்றுவந்தார். குடும்பத்தினரின் தீவிர கண்காணிப்பு மற்றும் பராமரிப்பில் – பிறரை சார்ந்து – இருந்துவரும் பைசலின் உடல்நலம் விசாரிக்க நாசரின் வீட்டுக்கு நடிகர் விஜய் ஒரு சமயம் சென்றிருந்தார். இந்த சந்திப்பின்போது உற்சாகமாக காணப்பட்ட பைசல், விஜய்யுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.
அதன்பிறகு 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி கமல்ஹாசன் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியைத் தொடங்கினார். இக்கட்சி தொடங்கப்பட்டதிலிருந்தே கமீலா நாசர் அதில் தன்னை இணைத்துக்கொண்டு தீவிரமாக இயங்கி வந்தார். 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட கட்சி அவருக்கு வாய்ப்பு வழங்கியது. இத்தேர்தலில் அவர் தோல்வி அடை ந்தார்; எனினும் 11.74 சதவிகித வாக்குகள் பெற்றார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிடத் திட்டமிட்டு நெடுநாட்களாக பணியாற்றி வந்தார் கமீலா நாசர். விருப்பமனுவும் அளித்திருந்தார். கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில் அவர் மிகுந்த நம்பிக்கையோடு கலந்துகொண்டார். ஆனால் எதிர்பார்த்தபடி விருகம்பாக்கம் தொகுதி தனக்கு ஒதுக்கப்படாததால் அதிருப்தி அடைந்தார். அதன்பின் கட்சிப்பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தார். மேலும், கடந்த மாதமே தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டார். தேர்தல் காரணமாக அவரது ராஜினாமா ஏற்கப்படாமல் இருந்தது. தேர்தல் முடிந்துவிட்டதால் இப்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது.
அது சரி… கமீலா நாசருக்கு விருகம்பாக்கம் தொகுதி ஒதுக்கப்படாதது ஏன்? அதில் தான் இருக்கிறது உட்கட்சி பால்ட்ரிக்ஸ்!
“கட்சியில் ஏதாவது தவறுகள் நடந்தால், யாராக இருந்தாலும் கேள்வி கேட்பது கமீலா நாசரின் வழக்கம். சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்காக பணியாற்றிய பிரசாந்த் கிஷோரின் ‘ஐபேக்’ நிறுவனத்தைப் போல, மக்கள் நீதி மய்யத்துக்கு ‘சன்கேர் சொலியூஷன்’ என்ற நிறுவனம் பணியாற்றியது. அந்நிறுவனம் மேற்கொள்ளும் பணிகளில் ஏதாவது தவறுகள் இருந்தாலும் கமீலா நாசர் சுட்டிக்காட்டி வந்தார். இந்நிலையில் விருகம்பாக்கம் தொகுதியில் கமீலா நாசரை போட்டியிட வைப்பதைவிட, அத்தொகுதி மீது கண் வைத்து காய் நகர்த்திவரும் சினிமா பாடலாசிரியர் சினேகனை போட்டியிட வைப்பது சிறந்தது என்று ‘சன்கேர் சொலியூஷன்’ நிறுவனம், வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் குழுவிடம் எடுத்துரைத்ததாகக் கூறப்படுகிறது. இப்படி சிலர் செய்த சதியால் கமீலா நாசருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதிருப்தி அடைந்த அவர் கட்சியை விட்டே வெளியேறிவிட்டார்” என்கிறார்கள் விஷயமறிந்த மநீம நிர்வாகிகள்.