“ரவீந்தர் சந்திர சேகரனுக்கு தலை வணங்குகிறேன்”: ஸ்ரீபிரியங்கா நெகிழ்ச்சி!

’மிக மிக அவசரம்’ திரைப்படம் இன்று (நவ-8)  தமிழகம் முழுக்க 125 திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது. இதற்கு  பின்னணியில் உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் சங்கத்தின் அரசு தரப்பு கமிட்டி உறுப்பினர்களுக்கும்,  அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர் ஆகியோருக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா நேற்று மாலை நடைபெற்றது.

0a1a

இந்த விழாவில் அபிராமி ராமநாதன், ரோகிணி பன்னீர்செல்வம், எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர் கே.ராஜன், இந்தப்படத்தை வெளியிடும் லிப்ரா ரவீந்தர் சந்திரசேகரன், படத்தின் நாயகன் அரீஷ்குமார் நாயகி ஸ்ரீபிரியங்கா, இந்தப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

0a1c

இந்த நிகழ்வில் பேசிய ரவீந்தர் சந்திரசேகரன், “இந்த படத்தை கடந்த அக்டோபர் 11ஆம் தேதியே ரிலீஸ் செய்வதாக அறிவித்தபோது எனக்கு வெறும் 7 தியேட்டர்கள் மட்டும் தான் கிடைத்தது. அந்த சமயத்தில் இந்த நல்ல படத்திற்காக மிகப்பெரிய அளவில் செலவு செய்து, விளம்பரம் செய்தும் போதுமான தியேட்டர்கள் கிடைக்கவில்லையே என்கிற மன அழுத்தம் எனக்கு ஏற்பட்டது. இதை அப்போது பத்திரிகையாளர் சந்திப்பிலும் வெளிப்படுத்தி இருந்தேன்.. ஆனால் அதன்பிறகு இதைக் கேள்விப்பட்ட இங்கு அமர்ந்திருக்கும் திரையுலக முக்கியஸ்தர்கள் எனக்கு ஆறுதல் கூறியதோடு கொஞ்ச நாள் காத்திரு இந்த படத்திற்கு சரியான நிறைய தியேட்டர் கிடைக்க ஏற்பாடு செய்கிறோம் என்று என்னை ஊக்கப்படுத்தவும் செய்தார்கள்.

அவர்கள் சொன்னபடி இதோ எனக்கு இப்போது 125 தியேட்டர்கள் மிக மிக அவசரம் படத்திற்காக கிடைத்துள்ளது.. உண்மையிலேயே தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் சொல்வதைப்போல அவர்கள் வழிகாட்டுதலின்படி நாம் நடந்தால், சரியான நேரத்தில் சிறிய படங்களை ரிலீஸ் செய்து தருவதற்கு அவர்கள் தயாராகவே இருக்கிறார்கள் என்பதை இந்த நன்றி அறிவித்தல் கூட்டம் மூலமாக வெளிப்படுத்தியே ஆகவேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்வை நடத்துகிறோம்.

ஏனென்றால் ஒருவர் மீது பழி போடுவது சுலபம் ஆனால் அதையும் தாண்டி அவர்கள் உதவி செய்தார்கள் என்கிறபோது அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டியதும் நம் கடமை.. என்னைப்போன்ற வளரும் நிலையில் உள்ள ஒரு திரைப்பட வெளியீட்டாளருக்கு இவர்கள் கொடுத்துள்ள ஆதரவு மகத்தானது .இந்த சமயத்தில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ மற்றும் விஜயபாஸ்கர் இருவருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என கூறினார்

படத்தின் நாயகன் அரீஷ்குமார் பேசும்போது, “இந்த படத்திற்கு பத்திரிக்கையாளர்களிடம் ரொம்பவே பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன. இப்படிப்பட்ட ஒரு படத்தில் நானும் நடித்திருக்கிறேன் என சந்தோசமாக இருக்கிறது.. ஒரு போராட்டத்திற்கு பிறகு ரிலீசாக இருக்கும் இந்த படத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பெரிய படங்களை விட, நன்றாக இருக்கும் சிறிய படங்களை பார்ப்பதற்கு நிறைய பேர் வருகின்றனர்.. இந்த மிக மிக அவசரம் படத்திற்கு இன்னும் மக்களின் மவுத் டாக் மூலம் அதிக தியேட்டர்கள் கிடைக்கும் என நம்புகிறேன்” என்று கூறினார்

படத்தின் நாயகி ஸ்ரீபிரியங்கா பேசும்போது, ‘மாண்புமிகு அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் என்னை அழைத்து பாராட்டிய அந்த தருணத்தில், இந்த நிலைக்கு நான் வந்திருப்பது கடவுள் கொடுத்த பரிசு என்று நினைத்தேன்.. இந்த படத்தை வெளியிடுவதற்காக ரவீந்தர் சந்திரசேகரன் ரொம்பவே போராடியிருக்கிறார்.. ஏற்கனவே ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டபோது, சிலர் இப்படியே ரிலீஸ் செய்துவிடலாம் இனி ஏன் தேதியை மாற்றவேண்டும் என்று கூட அவரிடம் சொல்லி இருக்கலாம்.. ஆனால் இந்த படத்தின் மீது உள்ள நம்பிக்கையில் இதை பெரிய அளவில் ரிலீஸ் செய்ய வேண்டும் என உறுதியாக அவர் எடுத்த முடிவுக்கு நான் தலைவணங்குகிறேன்” என்று கூறினார்