“சட்டப் பேரவையை உடனே கூட்டுக”: ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்!
தமிழகத்தை யார் ஆட்சி செய்வது என்பது தொடர்பாக ஆளும் அ.தி.மு.க.வுக்குள் கடும் போட்டி நிலவுகிறது. இது தொடர்பாக ஜெயலலிதாவின் விசுவாசியான ஓ.பன்னீர்செல்வமும், ஜெயலலிதாவின் தோழியான வி.கே.சசிகலாவும் தனித்தனியாக நேற்று தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்துப் பேசினார்கள்.
இந்நிலையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும் தி.மு.க. செயல் தலைவ்ருமான மு.க.ஸ்டாலின் இன்று மாலை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநரை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒன்பது மாதங்களாக, தமிழகத்தை பொறுத்தவரையில் ஒரு அரசு முடங்கி போயுள்ளது. உதாரணமாக கூற வேண்டுமென்றால், தேர்தல் நடந்த நேரத்தில், இரண்டு மாத காலமாக எந்த பணிகளும் நடைபெறவில்லை. அதைத் தொடர்ந்து முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் எந்த பணிகளுகளும் நடைபெறவில்லை. இதற்கிடையில், முதலமைச்சருடைய இலாக்கக்களை எல்லாம் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டிருந்த நேரத்திலும் எந்த பணிகளும் நடைபெறவில்லை. அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மறைவிற்கு பிறகு முதலமைச்சராக மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு நடந்ததெல்லாம் உங்களுக்கு தெரியும்.
உதாரணமாக, பத்து நாட்களாக தமிழகமே ஸ்தம்பித்துப் போகும் அளவிற்கு ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள், மாணவர்கள் நடத்திய போராட்டம். அதைத்தொடர்ந்து இப்போது அதிமுக கட்சிக்குள் ஜல்லிக்கட்டு பார்த்தோம். அதிமுக கட்சிக்குள் மல்லுக்கட்டு தொடங்கி யார் முதலமைச்சர் என்ற அந்த பிரச்சினையிலே, முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தன்னுடைய பொறுப்பில் இருந்து விலகுவதாக கவர்னரிடத்தில் கடிதம் கொடுத்து, இப்போது காபந்து முதலமைச்சராக இருக்கக் கூடிய நிலையில் இருந்துக் கொண்டிருக்கிறார்.
ஆக, இதைதான் சொன்னேன், ஒட்டுமொத்தமாக கூட்டிப் பார்த்தீர்கள் என்றால் ஒன்பது மாதங்களாக எந்த பணியும் இந்த அரசின் சார்பாக நடைபெறவில்லை. ஆக, ஒட்டுமொத்தமாக அரசின் நிர்வாகமே முடங்கிப் போய் ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. இதையெல்லாம் சுட்டிக்காட்டி ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் எடுத்து வைத்த கோரிக்கை என்னவென்றால், அரசியல் சாசனத்தின் அடிப்படையில் உடனடியாக ஆளுநர் அவர்கள் சட்டரீதியான நடவடிக்கை எடுத்து, ஒரு நல்ல நிலையை தமிழகத்திற்கு உருவாக்கித் தர வேண்டும் என்ற அந்த கோரிக்கையை தான் வலியுறுத்தி, வற்புறுத்தி அவரிடத்தில் எங்களுடைய மனுவில் அதை குறிப்பிட்டுச் சொல்லி எழுதிக் கொடுத்திருக்கிறோம். நேரடியாகவும் அதை சொல்லியிருக்கிறோம்.
அதுமட்டுமல்லாமல், இன்றைக்குக் கூட உயர்நீதிமன்றத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்த ஒரு வழக்கு நடைபெற்றது. அந்த வழக்கில் மாண்புமிகு நீதிபதி அவர்கள் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று தமிழக உள்ளாட்சி அமைப்பினுடைய தேர்தலை நடத்தக் கூடிய மாநில தேர்தல் ஆணையத்திற்கு சுட்டிக்காட்டிய நேரத்தில், தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்ன சொல்லியிருக்கிறார் என்றால், அரசாங்கம் எந்த ஒத்துழைப்பும் எங்களுக்குத் தரவில்லை, ஒத்துழைப்பு கொடுத்தால் தான் நீதிமன்றம் சொல்லக் கூடிய வகையில், அந்த விதிமுறைகளை எல்லாம் நிறைவேற்ற முடியும் என்று சொல்லக் கூடிய நிலை வந்திருக்கிறது என்றால், இதிலிருந்தே நீங்கள் புரிந்துக் கொள்ளலாம், உள்ளாட்சித் தேர்தலை கூட நடத்துவதற்கு இந்த அரசு முன்வராத நிலையில் இருக்கிறது.
இதையெல்லாம் இன்றைக்கு சுட்டிக்காட்டி நாங்கள் ஆளுநரிடத்தில் சொல்லியிருக்கிறோம். எனவே அரசியல் சாசனத்தின்படி உடனடியாக, சட்டரீதியாக சட்டமன்றத்தை கூட்டி, அதிலும் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களை எல்லாம் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தி, அவர்களை வெளிப்படையான வகையில் வாக்களிக்கக் கூடிய வகையில் ஒரு நிலையை ஏற்படுத்தினால் தான், ஜனநாயக மரபு காக்கப்படும் என்று நாங்கள் சொல்லியிருக்கிறோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.