“அரசியல் களத்தில் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது!” – மு.க.ஸ்டாலின்
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கட்சித் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தின் ஒரு பகுதி வருமாறு:
கழகத்தை குடும்பக் கட்சி என்று வெளியிலிருந்து விமர்சனம் வரும்போதெல்லாம், இது குடும்பக் கட்சிதான்; பல இலட்சம் குடும்பங்கள் ஒன்றிணைந்து பாடுபடும் கட்சிதான் என்று நெஞ்சம் நிமிர்த்திட சொல்வதற்குக் காரணம், குடும்பப் பாசம் நிறைந்த கொள்கை உறவுகளாக நம் உடன்பிறப்புகள் இருப்பதால்தான். “நம் அனைவரையும் ஒரே தாய் பெற முடியாது என்பதால் தான், தனித்தனித் தாய்க்குப் பிள்ளைகளாகப் பிறந்திருக்கிறோம்” என்று பேரறிஞர் அண்ணா சொன்னதை மறக்க முடியுமா?
பேரறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும் வளர்த்துள்ள இந்தக் கொள்கை உணர்வுமிக்க குடும்பப் பாசம் உள்ளவரை, தி.மு.கழகம் எனும் பேரியக்கத்தை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது.
பருவநிலை மாறும்போது ஒருசில பூக்கள் திடீரென மலரும், பின் உதிரும். அதுபோல தமிழக அரசியல் களத்திலும் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம். ஆனால், காகிதப் பூக்கள் மணக்காதல்லவா!
தி.மு.க. என்பது ஆயிரங்காலத்துப் பயிர். திராவிட மொழிப் பெருமைக்கும்; தமிழ் மக்களின் உரிமைக்கும் உண(ர்)வூட்டும் ஜீவாதாரப் பயிர் இது. அந்தப் பயிரைப் பாதுகாக்கும் வேலியாக உள்ள கோடித் தொண்டர்களில், முன்னிற்கும் தொண்டனாக பெரும் பொறுப்புடன் கழக ஆய்வுக் கூட்டத்தை தொடர்கிறேன்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.